ஆதி உணர்வின் மணம் – சவிதாவின் தீவிளி சிறுகதை

இரசனை வேறுபாடுகள் காரணமாக ஒரு சிறுகதைக்குக் கலவையான விமர்சனங்கள் வருவது இயல்புதான். சகவாசகர்கள் ஒரு சிறுகதையை வாசிக்கும் விதத்தைச் சுட்டிக்காட்டி தமது பார்வையை வழங்குவதன் மூலம் அநேகமாக அக்கதைக்குள் முதல் வாசிப்பில் கண்டடையாத சில அம்சங்களை எல்லைகளை மீளறிதல்கொள்ள அவ்வாசகர் பார்வை நமக்கு உதவும். இதை நாம் கூட்டுவாசிப்பு என்போம்.
சில கதைகள் வாசித்து முடிந்தவுடன் முடிந்துவிடுகின்றன. சில கதைகள் மட்டும் படித்து முடித்த பிறகும் மனதுக்குள் தொடர்ந்து நடக்கின்றன. சவிதாவின் ‘தீவிளி’ அப்படிப்பட்ட கதையாக எனக்குத் தோன்றியது. அதற்குரிய எளியவழிகள் கதைக்குள் சில இடங்களில் திறக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன.
முதலில் வாசிக்கும்போது இது வசியம், மந்திரம், குடும்பச் சாபம் பற்றிய கதையாகத் தோன்றக்கூடும். அவை கதையின் மேலடுக்குகள் மட்டுமே. ஆனால் கதை முன்னேற முன்னேற, இது உண்மையில் மனித மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஆதி உணர்வுகள் பற்றிய கதையோ என்ற எண்ணம் உருவானது. அதிகாரம், கட்டுப்படுத்துதல், இச்சையாக்குதல், புசித்தல், அழித்தல், வக்கிரம், பொறாமை என விரிந்து கொண்டே செல்லும்.
கண்ணன் பூரணியை அடைய விரும்புகிறான். அதற்காக வசிய முறைகளைக்கூட நாடுகிறான். ஆனால் அவளை அடையும் தருணத்தில் அவனைத் தடுத்து நிறுத்துவது ஒரு மணம். அந்த மணம்தான் கதையை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. பூரணியின் உடலில் இருந்து எழும் வாசனை, கண்ணனை அவனுடைய கடந்த காலத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அங்கே அம்மா இருக்கிறாள். அப்பா இருக்கிறார். லீனா சித்தி இருக்கிறாள். தங்கம்மா இருக்கிறாள். அவர்களோடு சேர்ந்த ஒரு குடும்பத்தின் சிதைவும் இருக்கிறது. மொத்தமாக கண்ணன் இவ்விடத்தில் திறக்கப்படுகிறான். இந்தத் திறப்பைக் கண்காணிக்கவில்லை என்றால் கதையின் ஆழடுக்குப் புலப்படாமலே போய்விடும்.
இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது, ஆசிரியர் எந்த இடத்திலும் இறுதி தீர்ப்பைச் சொல்ல முனையாதது. பெரும்பாலான சிறுகதைகளில் ஆசிரியரின் குரல் சில இடங்களில் ஓங்கியும் சில இடங்களில் மென்மையாகவும் வெளிப்படுவதுண்டு. இலக்கியத்தைப் பொறுத்தவரை ஆசிரியரின் குரல் படைப்புத்தன்மையைப் பலவீனப்படுத்தக்கூடியது. லீனா சித்தி உண்மையிலேயே வசியம் செய்தாளா? அல்லது மனித ஆசைகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் குடும்பம் பின்னர் கொடுத்த விளக்கம்தானா அது? இதற்கு கதை பதில் சொல்லவில்லை. அந்தப் பதிலை வாசகரிடமே விட்டுவிடுகிறது. அதுதான் இந்தக் கதையின் பலமாக உணர்கிறேன்.
கதையின் முழு உடலிலும் மணம் பரவியிருக்கிறது. நிசாகந்தி, அத்தர், சந்தனம், உடல், வியர்வை, மருந்து இவை எல்லாம் சேர்ந்து ஒரு நினைவுலகை உருவாக்குகின்றன. வாசிக்கும்போது சில இடங்களில் கதையைப் படிப்பதைவிட மணத்தை உணர்வதுபோல் இருந்தது. நமக்கும் இந்த உளவியல் நிலை ஏற்படுவதுண்டு. எனக்கு ஒரு வகை ஊதுபத்தியின் மணம் எப்பொழுதும் நான் அம்மாவோடு 1990களில் வாழ்ந்த தோட்டப்புற நினைவை ஏற்படுத்தும். அது என்ன ப்ராண்ட் என நினைவில் இல்லை. ஆனால், இன்னுமும் அந்த மணம் நினைவில் உயிர்ப்புடன் இருக்கிறது.
கண்ணன் என்ற பாத்திரமும் சுவாரசியமானது. பூரணியை அடைய வேண்டும் என்ற அவனுடைய ஆசை இறுதியில் வேறொரு வடிவம் எடுக்கிறது. அவன் தேடுவது பூரணியை அல்ல; தன் வாழ்வில் இழந்துபோன ஏதோ ஒன்றை. ஒருவேளை தாயின் அன்பாக இருக்கலாம்; ஒருவேளை சிதைந்த குடும்பமாக இருக்கலாம் அல்லது ஒருவேளை தன்னையேகூட இருக்கலாம்.
கதையின் இறுதியில் பூரணியின் காலில் விழுந்து ‘அம்மா’ என்று கதறும் காட்சி கதையை ஒட்டுமொத்தமாக வேறொரு தளத்திற்குள் திறந்துவிடுகிறது. ததுவரை வசியம் தொடர்பாக தொனித்த சிறுகதை இப்பொழுது முடிவுக்குப் பின்னர் மீள்வாசிப்பைக் கோருகிறது. அந்த ஒரு தருணத்தில் காமம், நினைவு, குற்றவுணர்வு, இழப்பு எல்லாமும் ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. ஒரு சிறுகதையை மறுவாசிப்பு செய்வதில் என்ன சிக்கல் உண்டு? அல்லது ஒரு சிறுகதை மறுவாசிப்பைக் கோரினால் தவறாகிவிடுமா? என்ற கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய சில இடங்கள்,
கதையின் நடுப்பகுதியில் வரும் குடும்ப வரலாறு சில வாசகர்களுக்குச் சற்றே நீளமாகத் தோன்றலாம். எனக்கும் அப்படியே தோன்றியது. மேலும், ஒரு சிறுகதைக்குள் நிறைய பாத்திரங்கள் அடர்ந்து வருகிறார்கள். மாமா, சிற்றப்பா, அம்மா, தங்கம்மா, அப்பா, பூரணி, கண்ணன் என இந்த விரிதல் கதையின் தாக்கத்தைக் குறைக்கவே செய்கிறது. ஏதாவது ஒரு பாத்திரம் நம் மனத்தில் அழுந்த தங்க வேண்டும். அப்பொழுதுதான் அச்சிறுகதை நீண்ட நேரம் மனத்தில் நிலைத்திருக்கும். அவ்வகையில் சிறுகதை சற்றே செறிவுப்படுத்த வேண்டிய இடத்தில் உள்ளது.
தீவிளி’யை வாசித்தபின் எனக்குள் எஞ்சியது வசியம் பற்றிய அச்சமல்ல. மனித மனம் எத்தனை அசலாக ஆதி உணர்வுகளையும் வக்கிரங்களையும் சுமந்து வாழ்கிறது என்ற ஆச்சரியம்தான். நல்ல சிறுகதைகள் முடிந்த பிறகும் வாசகருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும். ‘தீவிளி’ அப்படிப்பட்ட ஒரு கதையாக எனக்குத் தோன்றியது.
இன்னும் நிறைய இடங்கள் தொட்டு விவாதிக்கப்பட வேண்டிய சிறுகதைதான் இது.
வாழ்த்துகள்.
– கே.பாலமுருகன்
சிறுகதையை வாசிக்க:
![]()