நாவல் பார்வை

தலேஜூ — தேடலும் துயரமும் கே. பாலமுருகனின் நாவல் குறித்த வாசகப் பார்வை

*சராவின் அகமும் சுயபச்சாதாபமும்*

சரா ஓர் அசாதாரணமான பாத்திரம் அல்ல. அவன் சந்தித்த பல அனுபவங்களை நம்மில் பலரும் கடந்து வந்திருக்கிறோம். பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதலோ ஈர்ப்போ பலருக்கும் வாய்க்கும் ஓர் ‘ஆட்டோகிராப்’ நினைவுதான். நிறைவேறாத அந்தக் காதலைச் சில காலம் வலியுடன் சுமக்கிறோம். பிறகு அதை மனத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, ‘வாழ்க்கை போய்க்கொண்டேதான் இருக்கும்’ என்று அடுத்த வேலையைப் பார்க்கிறோம். வீட்டில் எப்போதாவது கடுப்பேற்றினால், பழைய நினைவுகளைத் திரும்ப ஓட்டிப் பார்த்து நொந்துகொள்வதும் உண்டு.

சராவுக்கு அந்த அனுபவத்தைக் கடந்து செல்வது எளிதாக இருப்பதில்லை. இயல்பிலேயே தனக்குள் ஒடுங்கிக்கொள்ளும் அவனைக் குடும்பச் சூழலும், தன் உடல் வலிமை குறித்த போதாமை உணர்வும், மனத்தில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லத் தேவையான துணிவின்மையும் மேலும் முடக்குகின்றன. இவை சேர்ந்தே அவனிடம் சுயபச்சாதாபத்தை வளர்க்கின்றன. ஒருவன் மனமுடைந்து போவதற்கு இந்தப் பின்னணி போதுமானது. ஆனால் ஒரு நாவலைத் தாங்குவதற்கு இது மட்டுமே போதுமா என்ற கேள்வி வாசிப்பின் தொடக்கத்திலேயே எனக்கு எழுந்தது.

*பெண் பாத்திரங்களும் தலேஜூ படிமமும்*

நாவலின் கதையோட்டமும் அதன் பின்னலும் கலையரசி, கமாரியா, காமினி, அம்மா, தலேஜூ ஆகிய பெண் பாத்திரங்களைச் சுற்றி அமைந்திருக்கின்றன. இவர்களில் கலையரசி ஒரு கௌரவத் தோற்றம்போல் வந்து செல்கிறாள். கமாரியாவின் பெயருக்கு ‘நிலவொளி’ என்று பொருள். நாவல் முழுவதும் அவளது இருப்பை அந்தச் சொல்லால் உணர முடிகிறது. அம்மாவோ, தன் ஆன்மாவின் ஒவ்வொரு பகுதியும் பிய்த்துத் தின்னப்பட்டதுபோல் எஞ்சியிருக்கும் ஒரு பாத்திரம். இவர்களை ஓரிழையில் இணைத்து, அவர்களின் துயரங்களைத் தன்னுள் பிரதிபலிக்கும் மூதாய்ப் படிமமாகத் தலேஜூ தோன்றுகிறாள்.

காமினி ஓர் அவலப் படிமம். அவளது பாத்திரத்தை இன்னும் துணிச்சலாகச் சித்தரித்திருக்கலாம் என்று தோன்றினாலும், வலிகள் நிறைந்த அவளது வாழ்க்கை நாவலில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வலிகள் அவளுள் விட்டுச் சென்ற வடுக்கள், சராவுடனான உறவில் அவனையும் காயப்படுத்துகின்றன. அதற்காகக் காமினியைக் கொடியவளாக வாசிக்க முடியவில்லை. அவள் கடந்து வந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது, அவள் நடந்துகொள்ளும் விதத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நாவலைத் தாங்கும் பாத்திரங்களாக நான் கருதுவது அம்மா, காமினி, கமாரியா ஆகிய மூவரையும்தான். அவர்களின் இருப்பும் வாழ்வின் நசிவும் இன்னும் தீவிரமாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அதேபோல், எல்லோரையும் இணைக்கும் தலேஜூ, ஒரு படிமமாக மனத்தில் பதிந்தாலும், அந்தப் படிமத்தைத் தாண்டி நாவலில் பெருவடிவம் கொள்ளவில்லை என்பது என் வாசிப்பு.

*துயரத்தின் மீதான ஈர்ப்பு*

இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் சுமக்கும் துயரம்தான் இந்நாவலில் பேசப்படுகின்றது. தலேஜூவும் அதற்கு விதிவிலக்கல்ல. கடவுளிலிருந்து வேலைக்காரியாக மாற்றப்படுகிறாள்.

பிரிவேக்கமும் துன்பமும் படைப்பிலக்கியத்தில் வலிமையான கதையாடல்களுக்கு நீண்ட காலமாகப் பின்னணியாக இருந்திருக்கின்றன. தலேஜூவிலும் அந்தத் துன்பியல் தன்மை ஆழமாகப் பதிந்திருக்கிறது.

மகிழ்ச்சியைத் தேடும் மனிதன் ஏன் அவலத்தால் இவ்வளவு ஈர்க்கப்படுகிறான்? துன்பத்தை ஏன் கொண்டாடுகிறோம்? இசையும் வரிகளும் செறிந்த எத்தனையோ பாடல்கள் இருக்கும்போது, சோகம் கசியும் சில பாடல்களை மட்டும் ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறோம்?

நமது மரபணுவிலேயே துயரம் செருகப்பட்டிருக்கிறதா? மாளாத தேடலில் தொலைந்து அலையும் ஆன்மாக்களா நாம்? அல்லது தொலைத்ததைத் தேடிக் களைத்த ஒரு தொல்படிமம் நம்முள் மீண்டும் எழுகிறதா?

*நாவல் வடிவமும் நனவோடையும்*

தலேஜூ கட்டுக்கோப்பான, செவ்வியல் தன்மை கொண்ட நாவல் வடிவத்துக்குள் இயங்குகிறது. கதைசொல்லலில் பயன்படுத்தப்பட்ட உத்திகள், களத்தின் கனத்தைக் கூட்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு நனவோடைப் பதிவுடன் தொடங்குவது அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

கோவிட் காலத் தனிமைப்படுத்தலில் சிக்கியிருக்கும் சராவை, அவன் ஏற்கெனவே கடந்து வந்த அவலங்கள் நினைவுகளாக அலைக்கழிக்கின்றன. அவன் தன் நனவோடையில் மிதந்து ஒதுங்குவதும், அங்கேயும் மனவதைக்கு ஆளாவதும் அவனுடைய சூழலுக்கும் மனநிலைக்கும் பொருந்துகிறது. சராவுக்கு வெளியுலகிலிருந்து கிடைக்கும் தனிமை, அவனது நினைவுகளிலிருந்து விடுதலை அளிப்பதில்லை.

*முடிவடையாத தேடல்*

சராவால் துன்பத்திலிருந்து மீண்டெழ முடியாதா? நாவலின் தர்க்கத்துக்குள் பார்த்தால், மீண்டெழுதல் அவனுக்கான வழியாகத் தெரியவில்லை. அவனுக்கு ஓர் ஈடேற்றம் தேவைப்படுகிறது. ஒரு தேவதையின் தரிசனம் வேண்டும்.

தலேஜூ என்பதே ஒரு தேடலா? அந்தத் தேடலில் கண்டடைதல் சாத்தியமா? நாவல் முடிவடைகிறது. தேடல் தொடர்கிறது. கண்டடைதல் உருமாறுகிறது.

எனக்கு நாவல் பிடித்திருந்தது, பாலா. அம்மா, காமினி, கமாரியா ஆகியோரின் வாழ்க்கையை இன்னும் தீவிரமாக வாசிக்க விரும்பினேன். தலேஜூ படிமம் இன்னும் விரிவடையக்கூடிய இடங்களையும் உணர்ந்தேன். நாவலை முடித்த பிறகும் அதன் துயரமும் தேடலும் என்னுள் உணர்கிறேன். தொடர்ந்து தீவிரமாக எழுதுங்கள்.

அன்புடன்

வாசகர்
*ப.மணிஜெகதீசன்*

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *