மாதாவின் செவி: கடவுளின் மௌனம்; மனிதனின் கூக்குரல்

 

கே. பாலமுருகன் எழுதிய ‘மாதாவின் செவி’ சிறுகதை, தமிழ் இலக்கியச் சூழலில் எதார்த்தவாத எழுத்துக்களின் வலிமையை மீண்டும் பறைசாற்றுகிறது. ஒரு மனிதனின் இறுதி தருணங்களில் நிகழும் சம்பவங்களின் மூலம், மனித உறவுகளின் சிக்கல்கள், மத நம்பிக்கைகளின் முரண்பாடுகள் மற்றும் மரணத்தின் மௌனம் ஆகியவற்றை ஆசிரியர் நுட்பமாகச் சித்தரிக்கிறார்.

திங்கி கம்பத்தில் உள்ள ஒரு சிறிய மாதா சிற்றாலயத்தையும், அதை தனது வாழ்நாள் முழுவதும் பராமரித்த மரியசூசையையும் மையமாகக் கொண்டது இக்கதை. மரணத்தின் விளிம்பில் இருக்கும் மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதா அல்லது யதார்த்தங்களை ஏற்க வேண்டுமா என்ற தார்மீகப் போராட்டமே கதையின் உயிர்நாடி.

கதையின் தலைப்பான ‘மாதாவின் செவி’ வெறும் உருவமல்ல; அது மக்களின் துயரங்களை உள்வாங்கும் பெரும் வெளியாகக் காட்டப்பட்டிருக்கிறது. மரியசூசை தன் வாழ்நாள் முழுவதும் அந்தச் செவிக்குச் சேவை செய்வதிலேயே கழித்தார். ஆனால், அவரது மகன் பீட்டர் அந்தச் செவியின் மௌனத்தைக் கண்டு கோபமடைகிறான். இக்கதை ‘கடவுளின் மௌனம்’, ‘மனிதனின் கூக்குரல்’ ஆகியவற்றுக்கிடையிலான குறியீடாக மாறுகிறது.

பீட்டர் மற்றும் மரியசூசை ஆகியோர் இரு எதிர்மறை அணுகுமுறைகளை பிரதிபலிக்கின்றனர். மரியசூசை பக்தியின் அடையாளமாகவும், பீட்டர் எதார்த்தத்தின் அடையாளமாகவும் விளங்குகிறார். இருவரும் இரு வேறு துருவங்களாகக் கதையில் படைக்கப்பட்டுள்ளனர். பீட்டரின் கோபம் தந்தையின் மீதானதல்ல; மாற்றாக, தன் தந்தை குடும்பத்தைவிட கோவிலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தால் உண்டான ஏமாற்றத்தின் வெளிப்பாடு. அதனாலேயே அவர் சிற்றாலயத்தில் உயிர்விடுவதைப் பீட்டர் வெறுக்கிறான்.

ஆழமான மொழிநடை; வட்டார வழக்கையும் மத வழக்கையும் தாங்கி வந்துள்ளது. கிருத்துவர்களின் வட்டார வழக்கு மிகப் பொருத்தமாகக் கதைநெடுக விரிகிறது. ‘சாவாம இருக்க முடியாதா?’ போன்ற வசனம் ஆன்மீகத்தையும் மரணப் பயத்தையும் இணைத்து மனிதன் யதார்த்தமானவன் என்பதை நிறுவுகிறது.

துணைக்கதைமாந்தர்களாக வரக்கூடிய அந்தோணியம்மாள், டேவிட் போன்றவர்களை இன்னும் அழுத்தம் கொடுத்துப் படைத்திருக்கலாம் என்று தோன்றியது. கதையின் தொடக்கத்தில் பீட்டரின் அலைச்சலை இன்னும் சுருக்கிவிட்டு நேரடியாகச் சிற்றாலயப் போராட்டத்திற்குள் வந்திருந்தால் கதையின் வேகம் கூடியிருக்கும்.

கதையின் முடிவு சற்றும் எதிர்பாராத திருப்பமாக மட்டுமல்லாமல் அது நிதர்சனத்தையும் காட்டுகிறது. மனிதன் கடவுளுக்கும் குடும்பத்திற்கும் அல்லாமல் கைவிடப்படுதலைச் சொல்வதாக வாசிக்கையில் உணர முடிந்தது. மனித வாழ்வு இலக்கை நோக்கிய பயணமே; இலக்கை நோக்கியதல்ல என்பதாகக் கதை முடிவடைகிறது. அங்கு முடியவில்லை ஆனால் ஒரு புதிய தேடலுக்கு அழைத்துச் செல்கிறது.

எழுத்தாளர் கே.பாலமுருகனுக்கு வாழ்த்துகள்.

– மணிமாலா, மலாக்கா.

சிறுகதையை வாசிக்க:

மாதாவின் செவி

 

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *