‘நான் கருவி; அவள் பெருந்தெய்வம் – தலேஜூ’ (தலேஜு நாவல் வெளியீட்டையொட்டி கே.பாலமுருகனுடன் நேர்காணல்)

கேள்வி: தலேஜூ நாவல் எதிர்பாராத வருகையா?
கே.பாலமுருகன்: ஆமாம். இரண்டாண்டுகள் எழுதி முடிக்கப்படாமல் இருந்து திடீரென 2025ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்து உருவானது. நம் வீட்டில் நம்மோடு இருக்கும் குழந்தையின் வளரும் நொடிகளை எப்பொழுதுமே நம்மால் கண்டடைய முடியாததைப் போலதான் தலேஜூயும் வளர்ந்தது.

கேள்வி: உங்கள் முதல் நாவலான நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் வெளிவந்து இன்றுடன் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த இடைவெளியில் நீங்கள் குறுநாவல்களும் ஏழு சிறார் நாவல்களும் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளீர்கள். எனினும், இரண்டாம் நாவல் வெளிவர இவ்வளவு ஆண்டுகள் எடுத்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியுமா?
கே.பாலமுருகன்: நீங்கள் குறிப்பிட்டதைப் போல இதுதான் எனது இரண்டாவது நாவல். 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த என் தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் நான் கண்டடைந்த இடம் சிறார் இலக்கியம். அது என்னை நகர்த்துவதற்கான ஊக்கியென அறிந்தேன். அவ்வளவு துள்ளலும் ஆறுதல்களும் நிறைந்தன. அதுவொரு அகவிடுதலையை அளித்தது. திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் வருகைக்குப் பின்னரே நான் சிறார் இலக்கியம் குறித்து நிறைய அறியத் துவங்கினேன். 2014க்குப் பின்னர் 2025வரை ஏழு சிறார் நாவல்கள் எழுதி அவற்றை மாணவர்களிடமும் வெற்றிக்கரமாகச் சேர்த்துவிட்டேன். அவை கொடுத்த ஒரு மனநிறைவால் என்னவோ என்னால் தீவிர இலக்கியத்தின் பக்கம் முழுதாய் ஈடுபட முடியவில்லை எனலாம். நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் நாவல் எழுதும்போது இருந்த என்னை என்னால் மீண்டும் கண்டடைய இயலவில்லை. அதற்கிடையில் வாழ்க்கை விடாமல் என்னை அலைக்கழித்துச் சென்றது. இருப்பினும், சிறுகதை முயற்சிகள் ஓய்ந்ததில்லை. சினிமா விமர்சனங்களை ஆர்வத்துடன் எழுதிக் கொண்டிருந்தேன். தீவிர சினிமா தொடர்பான இரு நூல்களையும் வெளியிட்டிருந்தேன். மலேசியாவில் அதிகமாக சிறார் நாவல் எழுதியதிலும் சினிமா விமர்சனங்களை எழுதியதிலும் நான் இப்பொழுதுவரை முன்னணி வகித்து வருகிறேன். எதையுமே செய்யாமல் இல்லை. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதிலும் எழுத்தாளர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கென்று கூடுதலாகக் கைகளோ அல்லது வாழ்க்கை கொடுக்கும் பாரங்களைத் தற்காலிகமாக இறக்கி வைத்துக் கொள்ள வேறு மனமோ இருப்பதில்லை. எங்குக் கற்பனைவளம் ஊற்றெடுப்பதாகச் சொல்கிறோமோ அதே மனக்கிடப்பில்தான் பலநூறு வாழ்வியல் அழுத்தங்களும் குவிந்து கிடக்கின்றன.

கேள்வி: இரண்டாவது நாவல் எழுதும்போது தங்களின் மனநிலையை எப்படித் தீவிர இலக்கியத்திற்குத் தயார்படுத்திக் கொண்டீர்கள்?
கே.பாலமுருகன்: தலேஜூ நாவல் தீவிர இலக்கிய வகைமையா அல்லது நடுநிலைமையா என்பதைப் பற்றியெல்லாம் நான் முன்னமே திட்டமிட்டெல்லாம் எழுதவில்லை. அதைப் பற்றி எனக்குக் கவலையுமில்லை. இந்நாவல் அதன் போக்கில் தனக்குள் பல கிளைகளை உருவாக்கி விரிந்து சென்றது எனலாம். தொடங்கும்போது காதல் நாவல் என மனத்தில் நினைத்துக் கொண்டே எழுதினேன். பின்னாளில் தலேஜூ வேறுவிதமாக உருப்பெற்று வளர்ந்ததையும் நான் ஆச்சரியமாய்க் கவனித்து மகிழ்ந்தேன். மேலும், இந்த வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் போன்ற வேறுபாடுகள் கருதியெல்லாம் நான் எழுதுவதில்லை. நான் தொடர்ந்து எழுதுகிறேன்; எழுதுவதன் மூலம் உயிர் வாழ்கிறேன். இனி உயிரோடு இருக்கும் வரை எழுதுவேன். இதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவ்வளவுதான். மற்றவை காலத்தின் பொருட்டு நிலைமாறும் அல்லது நிலைகொள்ளும்.
கேள்வி: தலேஜூ என்ற தலைப்பின் பின்னால் இருக்கும் குறியீடு அல்லது அர்த்தம் என்ன? இத்தலைப்பைத் தேர்வு செய்ய என்ன காரணம்?
கே.பாலமுருகன்: தொடக்கத்தில் இந்நாவல் ஒருவன் தன் பழைய காதலியைத் தேடித் தான் வாழ்ந்த நகரத்திற்குச் செல்கிறான்; தேடி அலைகிறான் எனும் அளவிலேயே எழுதப்பட்டது. அதனால் தலைப்பும்கூட ‘யாங்குனை தேடுவேனோ?’ என்றுதான் வைத்திருந்தேன். காதல் என்றாலே வணிக வகையைச் சேர்ந்தது என்கிற ஒரு முன்முடிவு இருந்ததையும் நான் அறிவேன். எனக்கு அதைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், இந்நாவலை எழுதிவிட்டு எனது இலக்கிய நண்பர் அ.பாண்டியனிடம் கொடுத்தபோது இந்நாவலை வெறுமனே காதல் நாவலாக மட்டுமே அணுக முடியவில்லை; இதனுள் தற்கால வாழ்க்கைச் சூழலும் இருத்தல் குறித்த அலைவும் தேடலும் இருப்பதாகவும் அப்பகுதிகளை இன்னும் விரிவுப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார். மீண்டும் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டு நாவலின் அப்பகுதிக்குள் நுழைந்து விரிவுப்படுத்தியபோது நாவல் மேலும் 100 பக்கங்கள் கூடியது. பெருந்தொற்றுக் காலகட்டம் மேலும் விரிவடைந்து நாட்டின் பொதுமுடக்க அலைவுகளையும் அதனால் உண்டான மனிதமன நெருக்கடிகளும் உள்ளே விரிவடைந்தன. அதன்மூலம் நாவலுக்குக் காதலைத் தாண்டி வேறொரு முகம் உண்டானதாக நினைத்தேன். இவையாவும் திட்டமிட்டு நிகழ்ந்தவை அல்ல. அதுவாகவே தற்செயலாக உருவானவை.

கேள்வி: அப்படியென்றால் ‘தலேஜூ’ எப்படி வந்தாள்?
கே.பாலமுருகன்: அதுவும் திட்டமிட்டதல்ல; இந்நாவலின் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தின் கூட்டசைவாக மாறியிருந்தனர். எனது அனுபவத்திலும் நான் செராஸில் மாமா வீட்டில் தங்கி வேலை செய்யும்போது பெரும்பாலும் வெளிநாட்டு வேலையாள்களுடன் பழகியுள்ளேன். தஸ்லிம், கமாரியா, வங்காளத்தேசி, தமிழகத்துத் தையல்காரர் என எதிர்நோக்கும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் பிழைப்பிற்காகப் புலம்பெயர்ந்தவர்கள். அப்படி உருவான கமாரியா கதாபாத்திரம் நான் ஜொகூரில் உறவினர் மூலம் நேரில் சந்தித்தவர். ஆனால், நாவலில் அவருடைய பின்புலம் புனையப்பட்டவை; நிஜமல்ல. அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். எனது உறவினர் திரு.கோபி வருடத்திற்கு இரண்டுமுறை நேபாள் சென்று அங்கு மலேசியாவிற்கு வேலைக்கு வர விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்வதுதான் அவருடைய வேலை. அது சார்ந்த அனுபவங்களை மூன்றாண்டுகளுக்கு முன்னர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். நாவலில் அப்பகுதியை விரிவாக்கும்போது யதேச்சையாக உள்ளே வந்து கமாரியாவுடன் ‘தலேஜூ’ என்கிற நேபாளப் பெண் தெய்வம் இணைந்து கொண்டார். வலையொளியில் குமாரி மரபுகள் பற்றிய இரண்டு முக்கியமான ஆவணப்படங்களைப் பார்த்தேன். ‘தலேஜு’வையொட்டிய சில புராணக் கதைகளையும் வாசித்தேன். அதன்வழி அவள் உருபெற்று நாவலுக்குள் நுழைந்தாள். பின்னர், நாவலை எழுதி முடிக்கும்போது நாவலில் கடைசி வரை வரமறுக்கும் கலையரசியின் கதாபாத்திரத்துடன் தலேஜூ பவாணி தேவியின் புராணக் கதையின் ஒற்றுமை வலுப்பெற்றது. நாவலுக்கும் அந்தத் தலைப்பையே வைத்துவிட்டேன். மற்றபடி இந்நாவல் முழுமையாக தலேஜூ அல்லது குமாரிகள் பற்றியது கிடையாது என்பதை முன்னமே தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறுபகுதியாக நாவலுக்குள் வந்து குறியீடாக மாறி நின்றது.
கேள்வி: இந்த நாவலில் நீங்கள் ஆராயும் முக்கியமான கருப்பொருள் எது? அது இன்றைய வாசகர்களோடு எப்படி இசைந்துபோகிறது?
கே.பாலமுருகன்: எந்த உறுதியான கதைக்கருவையும் நான் மனத்தில் கொண்டு எழுதவில்லை. ஒருவன் தன் பழைய அல்லது கைவிட்டு வந்த காதலியைத் தேடிப் போகிறான். அவனுடைய அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் அவன் தன் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்த கேள்விகளுடன் அலைந்து திரிந்து இழந்து மீண்டும் எழுந்து தொடரும் அவனுடைய பயணம்தான் இந்த நாவலென நினைத்துத் தொடங்கி எழுதியும் முடித்தேன். பின்னர், நாவலை எழுதி முடிக்கும்போது வாழ்நாள் முழுவதும் எந்தப் பெண்ணிடமும் சரணடைய முடியாமல் தவிக்கும் ஆண் மனம்தான் இந்த நாவல் எனத் தோன்றுகிறது. மற்றவை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். இன்றைய வாசகர்களுக்கு நிச்சயமாக இக்கதை பிடிக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு. மேலும், கோவிட் பெருந்தொற்று உண்டாக்கிய நெருக்கடிகள், அகம் சார்ந்த சிக்கல்கள் என இவையாவும் ஒரு நாவலில் இடம்பெறுவது தற்கால வாழ்க்கையின் விளைவுகளையும் அதன் பகுதிகளையும் சொல்வதன் அவசியத்தையும் உணர்த்துவதாக நம்புகிறேன். ஆங்கிலத்தில் இவற்றை ‘contemporary’ என்று வகைப்படுத்தலாம்.
கேள்வி: உங்கள் முதல் நாவலுக்குப் பிறகு எழுத்துநடை அல்லது அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தலேஜூவில் உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
கே.பாலமுருகன்: நிச்சயமாக. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் வேறு கோணத்தில் எழுதப்பட்ட நாவல். அதன் கதைச்சொல்லலும் மொழிநடையும் வேறுவகையானவை. தலேஜூ நாவலை நான் ஒரு பயண நாவல் என்ற அடிப்படையிலேயே கையாண்டுள்ளேன் என நினைக்கிறேன். பத்தாண்டுகள் சிறார் இலக்கியத்திலேயே உழன்றுவிட்டு மீண்டும் வருபவனின் எளிமை இதில் இருக்கக்கூடும். தமிழ்நாட்டில் இந்நாவலை வாசித்த சிலர் (அம்பிகா குமரன், கவிஞர் கலியமூர்த்தி, சுந்தர முருகன்) நல்ல கவித்துவமான மொழியைக் கையாண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். நான் எப்பொழுதும் மொழியைக் காதலிப்பவன். எதை எழுத நினைக்கும்போதும் அதனைத் தொடங்குவதற்குமுன் இருக்கும் தடுமாற்றம் பின்னர் எழுதி முடிக்கும்போது முற்றிலும் சாதகமாக இசைந்து நிற்பதைக் கண்டுள்ளேன். வார்த்தைகள் அதுவாகவே வந்து கோர்த்துக் கொள்ளும்.

கேள்வி: விமர்சனங்களைத் தவிர்க்க நினைத்துள்ளீர்களா?
கே.பாலமுருகன்: என்னையறிந்த நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நான் என்றுமே விமர்சனத்திற்கு எதிரானவனோ அல்லது விமர்சனத்தைக் கண்டு தயங்குபவனோ கிடையாது. எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதைத் தவிர்த்துவிட்டுக் கடந்துவிட வேண்டும் என்பதில் எனக்கு நிதானமும் பயிற்சியும் உண்டு. மேலும், படைப்பதும் விமர்சிப்பதும் இலக்கியத்தின் செயல்பாடுகள். அதை யாரும் தவிர்க்க முடியாது. நான் விமர்சனச் சுதந்திரத்தை மதிக்கிறேன். மேலும், எனக்கு அந்த விமர்சனம் ஒவ்வவில்லை என்றால் அதனைக் கடந்தும் விடுகிறேன். அவ்வளவுதான். என்னைப் பொருத்தவரையில் இங்கு இலக்கிய விமர்சனம் சமமாகவோ அல்லது எல்லோருக்குமானதாகவோ கையாளப்பட்டால் நிறைவு கொள்வேன். மேலும், நாவல் சமூகத்திடம் கொண்டு சேர்க்க ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் அழுத்தங்கள் ஏராளம். ஒரு படைப்பு முதலில் பரவலான வாசிப்பிற்குச் சென்றுசேர குறிப்பிட்ட காலகட்டம் தேவை. அதே போல, நூல் அறிமுகக் கூட்டங்கள், நூல் வெளியீடுகள் விமர்சனத்திற்கான இடமல்ல. அது வாசகர்களிடம் நூலைக் கொண்டு சேர்க்கும் இடம். ஒரு குறிபிட்ட காலகட்டத்திற்குப் பின்னர் ஒரு நூல் பலரைச் சென்று சேர்ந்து வாசிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் விமர்சனக்கூட்டம் என்பது மிகவும் அவசியமானது எனக் கருதுகிறேன். அங்குப் பலதரப்பட்ட வாசகப் பகிர்வுகள், நிறை குறை அலசல் என விரிவாக உரையாடத் தளம் அமைக்கலாம். அதில் நான் எப்பொழுதும் உடன்படுகிறேன்.
கேள்வி: மிக நியாயமான ஒரு கருத்தாடல். சரி, மீண்டும் தலேஜூவிற்கு வந்துவிடுவோம். இந்த நாவல் எழுதும்போது உங்களை மிகுந்த சவாலுக்குள்ளாக்கியது எப்பகுதி? அதை எப்படிக் கடந்தீர்கள்?
கே.பாலமுருகன்: இந்த நாவலை எழுதுவதே எனக்குச் சவாலாகத்தான் இருந்தது. முடிவுறாத வேலை அழுத்தங்களும் பயண அலைச்சல்களும் சிறார் இலக்கிய செயல்பாடுகளும் என இதற்கிடையில் புனைவு மனத்தைத் தக்க வைத்துக் கொண்டு நாவலைத் தொடர்ந்து எழுத பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டேன். சில மாதங்கள் எழுதியதை அப்படியே நிறுத்திவிட்டுப் போனதும் உண்டு. இரண்டாண்டுகள் இந்நாவலை முடிக்க இவ்வகையான அலைச்சல்களும் ஒரு முக்கியமான காரணமாகும். அவ்வப்போது தொற்றிக் கொள்ளும் சோம்பேறித்தனங்களுக்கிடையே கிடைக்கும் நேரத்தில் சிறுக சிறுக இந்த நாவலை எழுதி முடித்தேன். இதில் அ.பாண்டியன் அவர்களின் பங்கு அளப்பரியது எனலாம். அவர் ஒரு தீவிர வாசகர். ஒரு சொல் விடாமல் வாசித்துக் கருத்துரைக்கக்கூடியவர். எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னை நாடி வரும் படைப்பாளிக்குப் பாசாங்கில்லாமல் தன் உழைப்பை வழங்கக்கூடியவர். அதே போல எனது வாசகியும் மாணவியுமான சர்மிளி, தம்பி பிருத்விராஜூ ஆகியோர் இந்த நாவலை எழுதி முடிக்கும்படி சதா என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். தலேஜு நாவலின் தொடக்க வடிவத்தைப் படித்துவிட்டுக் கருத்துரைத்த தம்பி அரவின் குமார் அவர்களையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆதாரமான சில சிக்கல்களையொட்டி அவரும் தமது பார்வையை முன்வைத்தது எனக்கு உதவியாக இருந்தது.

கேள்வி: தலேஜூ ஒரு தலைமுறையை நோக்கி எழுதப்பட்டதா, அல்லது அனைத்து வயதினருக்கும் பொருந்துமா? தலேஜூ எவ்வகை வாசகர்களைக் குறிப்பாக மனதில் வைத்து எழுதப்பட்டது?
கே.பாலமுருகன்: தலேஜூ பெரியவர்களின் வாசிப்பிற்காக எழுதப்பட்ட நாவல். பெரும்பாலும் நான் நாவல் எழுதினாலே சிறார் நாவல் என நினைத்துவிடும் நிலை உண்டு. ஆகவே, இது பெரியவர்களுக்கான நாவல் என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. எந்த வகை வாசகரையும் நான் கருத்தில் கொள்ளவில்லை. எழுதும்போது வாசகர்களின் மீதான கவனம் அநாவசியமானது. ஒரு படைப்பு அதற்குரிய வாசகர்களைத் தேடிக் கண்டடைந்து கொள்ளும் என்றே நினைக்கிறேன்.
கேள்வி: இந்த நாவல் எழுதிய காலகட்டத்தில் உங்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் கதையின் ஓட்டத்தைக் எந்த அளவிற்குப் பாதித்தன?
கே.பாலமுருகன்: முன்பே சொன்னது போல வேலை சார்ந்த அலைச்சல்களால் பலமுறை நாவலை எழுதாமல் நிறுத்தியதுண்டு. தினமும் இத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என்றெல்லாம் நான் என்னை வறுத்திக் கொள்ளவில்லை. அதன் போக்கில்தான் அவசரமில்லாமல் எழுதினேன். சிலசமயம் சடாரென நாவலுக்குள் புகுந்து விடாமல் பல பக்கங்கள் எழுதியதுண்டு; சில சமயம் ஒரு பத்தியைத் தாண்ட முடியாமல் சிக்கியதும் உண்டு. நாவல் என்பது நீண்ட பயணம் போல. மலைமேடுகளைத் தாண்டிச் செல்லும் பேருந்து போல அத்தனையையும் சுமந்தவாறு ஏற்றம் இறக்கங்களுடன் நகரக்கூடியதாகும்.
கேள்வி: தலேஜூ வாசகர்களின் மனத்தில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது ஒரு கேள்வியை விதைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
கே.பாலமுருகன்: எனக்கு இந்த நாவலின்வழி குறிப்பிட்ட அல்லது திட்டமிட்ட சமூகத்தை நோக்கிய எந்த நோக்கமும் இலட்சியங்களும் கிடையாது. எனக்குள் இருந்த ஒரு சில அனுபவங்களின் வழியாக நான் ஒரு வாழ்க்கையை இதனுள் நாவலாக வடித்துள்ளேன். இனி வாசித்துவிட்டு வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கசப்புகள் நிறைந்த எனது இளமை பருவத்தின் ஒரு பகுதி இந்நாவலுக்குள் சொல்லப்பட்டுள்ளது. நான் 13 வயதிலேயே தலைநகரிலுள்ள ஒரு வீடியோ கேசட் வாடகை கடையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டவன். ஒரு முழு கடையின் வியாபாரப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. நண்பர்களோடு மகிழ்ந்து திரிந்து அலைய வேண்டிய வயதில் நான் தினமும் பொது பேருந்தில் ஏறி அம்பாங் நகரில் இறங்கி அங்குள்ள உறவினர் கடையொன்றில் ஒரு வருடம் வேலை செய்துள்ளேன். அது என் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம். அவற்றின் தாக்கம் இந்நாவலில் சில இடங்களில் பதிவாகியுள்ளன.

கேள்வி: இந்த நாவலுக்குப் பின்னர் உங்கள் எழுத்து பயணம் எதை நோக்கிச் செல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் அடுத்த நாவலுக்கு மேலும் சில ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்போகிறீர்களா?
கே.பாலமுருகன்: இனி எனது எட்டாவது சிறார் நாவலை எழுத நினைத்துள்ளேன். குறைந்தது தமிழில் பத்து சிறார் நாவலாவது எழுதிவிட வேண்டும் என்பதே எனது திட்டம். அதன்பின்னர் சிறுவர்களை எழுத வைத்துப் பார்க்க ஆசையுண்டு. அது சார்ந்து பயணிப்பேன். சென்னையில் நடந்த தலேஜூ நாவல் வெளியிட்டில் கருப்பு அன்பரசன் தோழர் அவர்கள் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். ‘நவீன இலக்கியம் படைக்க நூறு பேர் வருவார்கள்; ஆனால், சிறார்களுக்கு எழுத மிகச் சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் அதிகம் இல்லை. ஆக, அதனைக் கைவிட்டுவிடாதீர்கள்,’. எங்குச் சென்றாலும் எதை எழுதினாலும் சிறார் இலக்கியப் பாதையை விட்டு விலக மாட்டேன். அதனால், அடுத்த நாவல் எழுதுவது என்பது சிறார் இலக்கியத்திலிருந்து சற்று விலகி வந்தால் மட்டுமே முடியும் எனத் தோன்றுகிறது. இரண்டையும் ஒரே சமயத்தில் கையாளும் திறன் இன்னும் கைவரப் பெறவில்லை போலும். (சிரித்தவாறு).
இப்போதைக்கு நிறைய வாசிக்க வேண்டும்; வாசிப்பின்வழி ஒரு தியானத்திற்குள் மூழ்கிவிடலாம்; மலையுச்சியில் நின்று வானை நெருக்கமாகத் தரிசிக்கும் தருணங்கள் வேண்டிக் காத்திருக்கிறேன். கீழே எத்தனை அலைகள் அடித்துப் புரண்டாலும் நமக்குள் நிறைந்திருப்பது அவ்வளவு வரம், நம்புங்கள்.
கேள்வி: எந்த முயற்சியும் இல்லாமல் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
கே.பாலமுருகன்: அதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரியும். இருந்தும் மனம் அதனை ஆசைப்படுவதில் அதற்கொரு நுட்பமான நியாயம் இருக்கக்கூடும். மனம் அமைதியைக் கேட்கும்போது அதனை வரமளித்து விடுங்கள்; மல்யுத்தம் செய்யாதீர்கள் எனச் சொல்லத் தோன்றுகிறது. யாருடனும் போராடத் தோன்றியதில்லை. என்னிடமிருந்து விலகி என்னையே நான் வேடிக்கைப் பார்க்கிறேன், அவ்வளவுதான்.
கேள்வி: எதிர்காலத்தில் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து ஏதேனும் செயலாற்றும் திட்டம் உண்டா?
கே.பாலமுருகன்: நான் அறிந்தவரையில் மலேசியத் தமிழ்ச் சூழலில் இலக்கியம் சார்ந்து இயங்கி வரும் அமைப்புகளோடு என்னால் இயன்ற இலக்கியம் சார்ந்த பங்கேற்புகளை வழிகாட்டுதலை உதவிகளை எப்பொழுது மனம் நிறைந்து செய்துள்ளேன்; செய்யத் தயாராக இருக்கிறேன்.
கேள்வி: தலேஜூ 06.02.2026இல் கூலிமில் வெளியிடப்படுவதையொட்டி ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களா?
கே.பாலமுருகன்: முதலில் கூலிம் தியான ஆசிரமத்தில் நாவல் வெளியீட்டைச் சாத்தியப்படுத்திய சுவாமி பிரம்மாநந்தா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியச் சூழலில் சுவாமியின் வருகை இலக்கிய நகர்ச்சியினைப் பலநிலைகளில் சாத்தியப்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அனைவரிடத்திலும் சமமாகப் பழகக்கூடியவர். இலக்கியத்திற்காக இடம் கேட்டு வரும் அனைவருக்கும் சமமாக வாய்ப்பை நல்கக்கூடியவர். நான் 2005ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பார்த்து வியந்த சுவாமியுடன் 2009ஆம் ஆண்டு இலக்கியம் சார்ந்த நட்புறவு ஏற்படும் என நினைத்ததில்லை. பலநேரங்களில் மனத்தை ஆற்றுப்படுத்தக்கூடிய மருந்து அவரின் வார்த்தைகள்தான். சுவாமியின் அத்தருணங்களை நான் என்றுமே மறந்தது இல்லை. இப்பொழுதுவரை அன்போடு அரவணைத்துக் கொள்ளக்கூடிய அவருடைய தாய்மை குணம்; நியாயக் குணம் ஈடிணையற்றவை. அவருடைய தலைமையில் தலேஜூ மலேசியாவில் வெளியீடு காண்பதை நான் என் வாழ்க்கைக்குள் நிகழும் அதிசயமாகவே பார்க்கிறேன்.
தலேஜூவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வாருங்கள்; அவள் உங்களுக்குள் ஏற்கனவே இருந்த கனங்களைக் குறைக்கவோ அழிக்கவோ கரைக்கவோ முடிந்தால் படைப்பாளியாக நான் மகிழ்வேன். தலேஜூ நாவலைச் சென்னையிலிருந்து தமிழகம் கொண்டு வரும்வரை நான் எதிர்கொண்ட அலைச்சல்கள் ஏராளம். எழுதியபோது இருந்த அழுத்தத்தைவிட மிகப்பெரியதாகும். ஆயினும், எனக்கு உதவியாக இருந்து தலேஜூ நாவலுக்கு உயிரூட்டிய நண்பர் அ.பாண்டியன், வேரல் பதிப்பகம் லார்க் பாஸ்கரன், அம்பிகா குமரன் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுது இந்தத் தலேஜூ நாவல் களம் காண களம் அமைத்துக் கொடுத்த கூலிம் நவீன இலக்கியக் களத்திற்கும் பிரம்மாநந்தா சுவாமிக்கும் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கத்திற்கும் அதன் தலைவர் திரு.க.உதயக்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, தலேஜூ எனக்குள் உருவாகக் காரணமாக இருந்த தலேஜூ பவானி தேவியிடம் சரணடைகிறேன். நான் கருவி; அவள் பெருந்தெய்வம்.
நேர்காணல்: பிருத்விராஜூ, கிரிஷான்
![]()