தலேஜூ – தாயின் வன்மம்

எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் தலேஜூ நாவல் வெளியீடு கெடா கூலிம் தியான ஆசிரமத்தில் 6 பிப்ரவரி சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் பேசிய உரையிது.

ஒரு படைப்பின் உருவாக்கம் என்பது தீவிரமான வாசிப்பையையும், தேடலையும் உருவாக்க வேண்டும் என்பது எப்போதும் எனது இலக்கியச் சிந்தனையாகவே நான் கொள்கிறேன். வாசித்து முடித்தக் கணம் அப்படைப்பு மறந்து, மறைந்து போகுமாயின்  இப்படைப்பு நிகழ்த்தக் கூடிய தர்க்கம் காணாமல் போய் விடும். எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் படைப்புகளென்பது நுனிப்புல் மேய்வது போல அமைந்து விடாது. எழுத்தின் மீதான தீவிரத்தை விரைவுப்படுத்தும்.

தலேஜூ. தலைப்பே ஒரு தேடலுக்கான துவக்கத்தை உருவாக்கியுள்ளது. தலேஜு என்றால் என்ன? தலைப்போடு இந்த நாவல் ஏன் தொடர்புபடுத்தப்படுகிறது? அவ்வார்த்தையின் சரியான உச்சரிப்பு என்ன? இக்கேள்விகளுக்கான பதில்களே உங்களை இந்நாவலில் பயணிப்பதற்கான ஓர் உந்துதலைத் தரும்.

நேபாள நாட்டின் பெண் தெய்வமாக வணங்கப்படுபவள் தலேஜூ. ஒரு நாட்டின் தனித்துவமான பண்பாட்டை நோக்கிய பயணமா‌ இந்நாவல்? இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குழந்தைக்குச் சூட்டும் பெயரல்ல ஒரு படைப்புக்கான தலைப்பு என்பதை உணர வேண்டும். வாயில் நுழையாத பெயரையெல்லாம் சூட்டி விடும் நிலை படைப்புக்கு அல்ல. படைப்புக்கான தலைப்பு என்பதே ஒரு குறியீடு. சரா என்கிற கதாபாத்திரத்தின் வழியாக நாவல் கொஞ்சமும் பிசுங்காமல், இயல்பான மொழியினில் நகர்கிறது.  தலைப்புக்கும் சரா என்கிற கதாபாத்திரத்திற்கும் என்ன தொடர்பு என்பது ஒரு சூட்சுமம். அந்த சூட்சமம் தான் இந்நாவலின் உச்சம், வெற்றி.

சொல்லித் தெரிவதில் அல்ல இந்தப் படைப்பாளரின் எழுத்து. உள்வாங்கி வாசித்து, ஆழமாக உற்றுணர்ந்து புரிவதில் தான் படைப்பாளரின் எழுத்தையும் சிந்தனை நோக்கத்தையும் உணர முடியும்.

எழுத்தாளரின் முதல் நாவல் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல் வெளியீடு கண்டு 16 ஆண்டுகள் கழித்து தலேஜூ பிரவேசிக்கிறாள். நீண்ட இடைவெளி. எழுத்தில்,  சிந்தனையில் , கருத்துச் செறிவில்‌ மாபெரும்‌ மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

தலேஜூ நாவலைச் சென்னையில் அறிமுகப்படுத்திய முனைவர் செங்கொடி ஒரு கருத்தை முன் வைத்திருந்தார். மலேசிய நாவல் என்றவுடன் புலம்பெயர்ந்தோர் வாழ்வைப் பேசியிருக்கக்கூடிய ஒரு நாவலாக கருதியதாகச் சொன்னார். அயலக தமிழ் இலக்கியச் சூழலில் இன்னுமும் நம் எழுத்துக்கான பார்வை  மேம்படவில்லை. முனைவரின் அத்தகைய பார்வையை‌த் தலேஜூ நாவல் முற்றிலும் மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறியிருந்தது ஒரு கரும்புள்ளியைத் துடைத்தது போலிருந்தது.

தலேஜூ என்னதான் சொல்ல முனைகிறாள்? வாழ்க்கையின் அனைத்து துயரங்களிலிருந்து நம்மை மீட்டெடுத்துக் கொண்டு ,அதைக் கடந்து எல்லைகளற்ற அடுத்தகட்ட நகர்வில் நம்மைத் திணித்துக் கொண்டு நகர்வது மிகப் பெரிய சவால். துயரங்களை அந்தந்த நேரங்களில் கடக்க முடியவில்லையெனில் அது பெருந்துயரமாக‌ மாறும்.  அத்தகைய சவாலில் குற்றவியல் மனத்தின் இருப்பை உடைத்தெறிவது அத்துணை எளிதாகுமா?

சரா என்கிற கதாபாத்திரம் அத்தகைய சூழலை எப்படிக் கடக்கிறது? என்பதை இந்த நாவலின் பயணமாக நான் உணர்கிறேன்.  ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கும், அதே கதாபாத்திரமாக வாழ்ந்து பார்ப்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. சரா வாழ்ந்து பார்க்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாகப் பார்க்கிறேன்.

கொரோனா காலத்தில் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட உடல் ரீதியான, உளவியல் ரீதியான மாற்றங்கள் தான் இந்த நாவல் என்றால் மறுப்பு உண்டு. கொரோனா காலக்கட்டம் என்பது கதைக்களம் மட்டுமே. பொதுமுடக்கம் பலரது தினசரி வாழ்வில் நடந்து கொண்டுதான் உள்ளது. மனிதனின் அதிரடியான வாழ்க்கைச் சூழலில் யாரும் யாரையும் கவனிப்பதற்கான சூழலும் நிலையும் இங்கில்லை.

சரா என்கிற தனிமனிதனைச் சூழ்ந்திருக்கும் நான்கு முதன்மை சிக்கல்கள் அம்மா, காமினி, சமாரியா, கலையரசி. இவர்கள் நால்வரும் ஒரு சேர, ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் சராவோடு பயணிக்கவில்லை. வெவ்வேறு காலக்கட்டமாக இருந்தாலும் சராவை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து ஒரு கட்டுக்குள் வாழ முற்படுத்துகின்றனர் இந்த நால்வர். இதை நான் வன்மம் என வகையிடுகிறேன். இந்த நான்கு கதாபாத்திரங்களும் சராவை மகிழ்வித்தவர்கள்.  அம்மாவாக, தோழியாக, காதலியாக. ஆனால், இன்று சராவின் துயரங்களைக் கண்டு இரசிக்கிறார்கள். ஒரு தாய் வன்மம் கொள்வாளா என்கிற கேள்வி எழும்.  நாவலை வாசியுங்கள். அவளது மனநிலை புரியும்.

இத்தகைய இரசனை உணர்வு ஏன் ஏற்படுகிறது? மனித மனங்களின் ஆழங்களை, நெருக்கடிகளை, வன்மத்தின் உச்சத்தை யாராலும் அளவிட முடியாது. எல்லா அன்பும் காதலில் தான் துவங்குகிறது. அது தடம் மாறும் தருணங்கள் சிறு மெல்லிய கோடுகளால் உருவாகின்றன. அந்த மெல்லிய கோடுகளாக ஏன் சரா உருமாற்றம் பெறுகிறான்?

இந்த நாவலை உளவியல் தொடர்பான முனைவர் பட்ட ஆய்விற்குப் பரிந்துரைக்கலாம். அவ்வாறு அமைந்தால் அது எழுத்தாளனின் மாபெரும் முயற்சியின் வெற்றி. ஒரு படைப்புக்கான துவக்கம் என்பது அத்துணை எளிதல்ல. நீ துவங்கு. நான் வழி நடத்துகிறேன் என நம்மை பிரமிக்க வைக்கும் எழுத்து.

எழுதியவனால் கண்டடைய முடியாத ஓர் உச்சத்தை ஒரு வாசகனால் கண்டடைய முடியும். எனது வாசகப் பரப்பில் இந்நாவலில் பல உச்சங்களைக் கண்டடைந்தேன்.

பிரான்ஸ் நாட்டு அறிஞர் ரெனோ பட்ஜெர்ட் இவ்வாறு கூறுகிறார் .

‘உண்மையான துக்கத்தை விட

மாயையான மகிழ்ச்சி மதிப்பிற்குரியது’

இக்கூற்றினை நான் தலேஜூ நாவலின் முடிவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஏன் என்பதை  நாவலை வாசித்து உணருங்கள்.

நன்றி.

காந்தி முருகன்

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *