குறுங்கதை 6 – தேவதையின் ஒற்றைச் சிறகு
புதன் கிரகத்திலிருந்து அன்று கடவுளைப் பார்க்க வந்த கதேசனா தேவதை நீல வெளிச்சம் சுழல ஒரு மண்டலம் காத்திருந்தாள். நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான் கிரகத் தேவதைகளுக்குக் கடவுளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும்.
கதேசனாவின் மௌனம் மெல்ல களையும்போது கருந்துளையிலிருந்து அகால வெளிச்சம் தோன்றியது. கதேசனா கண்கள் கலங்கியிருந்ததைக் கடவுள் அறிந்தார்.
“என்ன ஆயிற்று கதேசனா?”
“எனது ஒரு சிறகு வரும் வழியில் காற்றழுத்தம் தாளாமல் எங்கோ வீழ்ந்து காணாமல் போய்விட்டது…”
“கவலை வேண்டாம். என்னிலிருந்து மூன்றாவது கிரகம். நீ தரையிறங்கும்போது எங்கும் பசுமையையும் பெருநகரங்களையும் காண்பாய். உனது ஒற்றைச் சிறகு அங்குதான் விழுந்துள்ளது…”
கடவுள் அருளியதைக் கேட்டு மனம் குளிர்ந்த கதேசனா பூமியை நோக்கி விரைந்தது. தமது ஒற்றைச் சிறகுடந்தான் புதன் கிரகம் செல்வதாய்த் தமக்குள் ஒரு பிடிவாதம் கொண்டது.
எட்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் கதேசனா தேவதை பூமியை வந்தடைந்தது. கடவுளின் நீல வெளிச்சம் அதனை வழிநடத்திச் சென்றது. ஒளிப் பாயும் இடத்தை நோக்கி தேவதை விரைந்தாள். ஒரு சிறுநகரத்தினுள் ஒரு வீட்டின் முன் அந்த நீல வெளிச்சம் சென்று கரைந்தது. கதேசனா வீட்டினுள் நுழைந்தாள்.
அவளுடைய ஒற்றைச் சிறகு தங்க நிறத்தில் மின்னுவதைக் கண்டாள். அருகில் சென்றதும் அதுவொரு குழந்தையின் சிணுங்களாக மாறியது. ஒரு பெண் குழந்தை சிரித்தபடி தேவதையைப் பார்த்தது.
அன்று அக்குழந்தைக்கு முதல் வருடப் பிறந்தநாள் கொண்டாட்டம். 18 ஜனவரி. கதேசனா ஆச்சரியத்துடன் அக்குழந்தையைப் பார்த்தாள்.
“கலைவாணி! அம்முகுட்டி! வாங்க…”
குழந்தையினுடைய தாயின் குரல். கதேசனா மனம் நெகிழ்ந்தாள். தமது ஒற்றைச் சிறகு பூமியை வந்தடைந்ததும் ஒரு குழந்தையாக அவதரித்துக் கொண்டதை நினைத்து அகம் மகிழ்ந்தாள்.
கடவுளின் நீல வெளிச்சம் மீண்டும் தோன்றியது. கதேசனா தமது ஒற்றைச் சிறகுடன் அங்கிருந்து விடைபெற்றாள்.
- கே.பாலமுருகன்
![]()