காமினி + கமாரியா + கலையரசி = தலேஜூ (மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் தலேஜு நாவல் குறித்த சித்திரங்கள்)

(பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

தமிழிலக்கியப் படைப்பாக்க வரலாற்றில் மலேசியப் படைப்புலகில் புதிய தலைமுறையின் ஒரு துருவநட்சத்திரமாகத் தோன்றி ஒளிவீசித் திகழ்ந்துவருகிறார் கே. பாலமுருகன் என்று சொல்லத் தோன்றுகிறது. அதனாலேயே இளம் தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவராக மலர்ந்திருக்கிறார். வாழ்க்கைச் சூழல்களை புதிய கண்ணோட்டங்களிலும் புதிய புலப்பாட்டுமுறைகளிலும் கூர்மையான எழுதுவினைமை கொண்டு சித்திரித்து வரும் எழுத்தாளர். மலேசியத் தமிழிலக்கியச் சூழலில் மட்டுமல்லாது, தமிழ் வாசக உலகில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். அநங்கம் என்ற சிற்றிதழை நடத்துவதோடு, திறமிகு பள்ளி ஆசிரியராக விளங்கிவருபவர். பள்ளிவளாகத்தில் மட்டுமல்லாது, மலேசியா முழுவதும் சென்று, சிறார் இலக்கியத்தை வளர்ப்பதில் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்து வருபவர்.

கடவுள் அலையும் நகரம் (கவிதைகள்), நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் (நாவல்), இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள், இறந்தகாலத்தின் ஓசைகள், தேவதைகளற்ற வீடு, மூக்குத்துறவு (சிறுகதைகள்) ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல் (குறுநாவல்), மர்மக்குகையும் ஓநாய் மனிதர்களும் (சிறுவர் மர்மத்தொடர் நாவல்), மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும் (மர்மத் தொடர் நாவல்) பெரிய காதுச் சிறுவன், மாயவிடுதி, (சிறார் நாவல்), தலேஜு (நாவல்) என அவரது படைப்பாக்கச் செயன்மை விரிந்துசெல்கின்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் (சிங்கப்பூர் முஸ்தபா அறக் கட்டளை) கரிகாலன்விருது உள்ளிட்ட பல ஏற்பிசைவுகள் அவரது சிறந்த பங்களிப்புக்குக் கட்டியம் கூறுபவை.

”தொடங்கிவிட்டது மலேசியத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வசந்தகாலம்” என அறைகூவும் பாலமுருகனின், சிறார் இலக்கியப் பங்களிப்பு வகிபாகம் மிகவும் கவனிக்கத்தக்கது. இதுவரை 6 சிறார் நாவல்கள், 3 சிறார் சிறுகதை நூல்கள், 3 சிறார் சிறுகதைக்கான வழிகாட்டிக் கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார். மலேசியாவில் நவீன சிறார் இலக்கிய விழாவைத் தொடக்கி வைத்து ஆறுஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருவதோடு சிறார்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் பொருட்டு மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தைத் தொடங்கி வழிநடத்தியும் வருகிறார்.

புலம்பெயர் இலக்கியத் திணைக்களத்தில் அலைந்துழல்வின் அவலமும் புதிய திணைப்பரப்பின் நிலக்காட்சிகளும் பண்பாட்டு அதிர்வுகள், மொழிச்சிக்கல், பிரஜா உரிமைச் சிக்கல், பொருளாதார முதுகு முறிந்துவிழும் சமூகப்பொறியியலைச் சரிசெய்யத் திண்டாடும் சிக்கல், பண்பாட்டுப் பன்மையின் முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு எனச் சிக்கல்களின் பலபடித்தான சமூகச் சித்திரத்தில் புலம்பெயர் தேயங்களிலிருந்து புதிய நுவல்பொருளை புதிய கூறுமுறைமையோடு கொணர்ந்திங்கு சேர்ப்பதில் புறப்பட்டிருக்கிறது, ஒரு புதிய தலைமுறை. இந்தத் தலைமுறையின் வீச்சான மலேசிய முகம்தான் பாலமுருகன்.

“கண்களைத் திறந்து அறையைப் பார்த்தேன். யாரும் இல்லை. நான் மட்டும்தான். எனக்குள் இருப்பதே எனக்குச் சிரமமாக இருந்தது” என்று கதைசொல்லி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனக்குள்தான் அடங்கமுடியாமல் தவிப்பும் கொதிப்பும் மேலெழ, கதையை நகர்த்துகிறார்.

அறையில் ஏற்கனவே உலவியபடி இருந்த உஷ்ணம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. உடலெல்லாம் பச்சை நிறத்திலான கூர்மையான முட்கள் கொண்ட காமினி அறைக்குள் நுழைந்தாள். அவள் உருளை வடிவத்தில் இருந்தாள். தலையில் சிவப்புக் கொம்புகள் வளர்ந்திருந்தன. ஆனால், அவளுடைய முகம்மட்டும் நன்றாக என்னால் உருவகித்துக்கொள்ள முடிந்தது என்று கோவிட் காலத்தில் கோவிட் முள் முடித்தொற்று நச்சுக்கிருமியின் உருவகத்தை காமினி என்கிற கதாபாத்திரத்திற்கு ஏற்றிப் பார்க்கிற எழுத்தாளருடைய லாவகம் குறிக்கத்தக்கது. இத்தனைக்கும் காமினி காதலாகிக் கசிந்துருகும் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தையேகூட நச்சுத்தொற்று வடிவில் உருவகப்படுத்தும்படியான கோவிட் காலத்தின் உளச்சிக்கல் அமைவது அவலம்தான். தனிமைச்சிறையில் அகப்பட்டுக் கொள்ளும்போது கைவிடப்பட்ட மனோநிலையின் பேச்சு சிலவேளை மனப்பிறழ்வுக்கு முந்தைய பிதற்றலாகவும் ஆகிவிடும் ஆபத்து காட்சிப்படுத்தப்படுகிறது.  தொடர்ந்து, கதை தனித்துவிடப்பட்ட பேரிடர்க் காலமான கோவிட் காலத்தின் ஒரு மனிதனை, இழந்த காதலை மீட்டுப்பார்க்கத் துடிக்கும் ஒரு தவிப்பை…. இடையில் வெவ்வேறு விதமான கணபதி மாமா உட்பட வக்கிர மனம் படைத்த கதாபாத்திரங்களை, இலகுவாக நெகிழ்ந்து உதவி செய்பவர்களை, காதலில் திளைப்பவர்களை, அன்றாட வாழ்க்கையில் போராடி மாய்பவர்களை, கணவர்களால் மிதிபட்டு இரத்தச் சகதியோடு உலவுகிற மனைவிமார்களை, ஓடிப்போன தகப்பன்மார்களை மனப் பிறழ்வாளர்களை, என விதவிதமான கதாபாத்திரங்கள் நாவலுக்குள் அலைந்துழல்கின்றன.

நாவல் நெடுகிலும், தனித்துவிடப்பட்டு வீட்டிற்குச் சிகப்பு முத்திரை இடப்பட்டு நான்கு சுவர்களுக்குள் சிறையிடப்பட்ட மனிதக்கைதிகளாக மாறிய கோவிட் பேரிடர் காலம் வந்து அச்சுறுத்துகிறது. ”காமினி நீ சொல்லு அம்மாவைக் கொன்னது நானா இல்ல நீயா?’’ என்று தனக்குள் தானே பேசிக்கொள்ளும் குரல்வளையின் உட்பேச்சாக (Interier Monolague) நாவலாசிரியர் ஒரு கதாபாத்திரத்தின் முலம், இழந்த தன் அம்மாவை எரிக்கக்கூட கொடுக்காமல் அரசு நிர்வாகம் எடுத்துப்போய் எரிக்க, அம்மா தூரத்தில் எரிவதைப் பார்க்கிற ஒரு கொடுங்காலமாக மாறி இருக்கிற அவலத்தை நாவல் அதன் சூடு தணியாமல் நமக்கு உரைக்கச் செய்கிறது.

தனித்து ஒரு அலைவரிசை (டிராக்) எனத் தெரியாமல்  நாவலுக்கு இடையிடையே கவிதைகள் வந்தாலும் இந்தக் கவிதைகள் வாழ்வின் அன்றாடங்களை வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு விதமாக வெவ்வேறு கோணங்களில் இருந்து படம்பிடிப்பதற்கு நாவலாசிரியருக்கு உதவிய உபகரணங்களாக விளங்குகின்றன. அதிலும் பதின் பருவத்தின் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி நாவலை மலர்த்துகின்றன.

எனது துயரங்களை

உனது மிகச்சிறிய

புன்னகைக்குள்

தொலைத்து விடுவதுதான்

உத்தமம்

என்பது அதில் ஒரு கவிதை. ஒரு சிறிய புன்னகை கிடைத்தால் நம் துயரம் முழுவதையும் தொலைத்துவிடுவது எவ்வளவு உத்தமானது என்பதை மிகக் காத்திரமான தத்துவத் தெறிப்பான, கவித்துவ உரையாடலாக நாவலாசிரியர் மாற்றிக் காட்டுகிறார்

நீ இல்லாத நாற்காலியில்

வெறுமை

அரக்கியைப் போன்று

ஒய்யாரமாய் அமர்ந்து

சிரித்துக் கொண்டிருக்கிறது

என்று இன்னொரு கவிதை நாவலுக்கிடையில் பகிரப்படுகிறது.

நீ சென்ற

பாதைத் தடங்களுக்குள்

என் மொத்த சுவாசமும்

அலைந்து திரிகிறது

என்று ஒரு கவிதை ஏங்குகிறது.

நகரின் நாக்குகள்

ஈரத்தன்மை அற்றவை

என் ஆருயிரே

உன் ருசி தான் என்ன

என்று மேலும் ஒரு கவிதை பெருநகர வன்மத்தைப் (Metropolitan Cruelty) பறை சாற்றுகிறது. இப்படி செயற்கைப் பூச்சற்ற உணர்வு மேலெழும்பி அலையடிக்கிற கவிதைகள் நாவலுக்கிடையே அல்லது அத்தியாயத் தொடக்கத்தில் இடம்பெற்று கதையாடலுக்கு வலிமை சேர்க்கின்றன.

“இக்கணம் இந்த வானம் அம்மாவின் மடியாக விரிந்திருந்தது. அம்மாவின் உடலை கடைசிவரை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. அப்போதைக்கு நாட்டின் சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஆக வேண்டியிருந்தது. சீத்தா அக்காள் எவ்வளவு தேற்றியும் நான் அம்மாவை நினைத்து ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருந்தேன். உடைந்து அழுவதைத் தவிர, எனக்கு வேறுவழி இல்லை. உடனிருந்து முதுகை தட்டிக்கொடுக்க யாரும் இல்லை. இத்தனைப் பெரிய நகரில் ஒருவனை இந்த உலகம் தனியாகக் கைவிட்டிருந்தது. பகலின் மிகநீண்ட மவுனத்தில் வெறுமனே கிடந்தேன். உடல்கள் எரிவதை என்னால் அறைக்குள் இருந்து உணரமுடிந்தது. உடல்கள் ஒவ்வொன்றாகக் குவிக்கப்பட்டு அதன் மீது தீ வைக்கப் படுகிறது. அம்மாவின் உடல் கொழுந்துவிட்டு எரிவதைத் தினமும் காண்கிறேன். நகருக்குள் சில பொழுது உஷ்ணம் அதிகரிக்கிறது. தூய்மையான காற்றுக்காக மனம் ஏங்குகிறது என்று கொரோனா காலத்தின் குரல்கள் நாவல்  நெடுக அதன் வெக்கையை; தகிப்பை நமக்கு உணர்த்திச் செல்கின்றன.”

23-ஆம் பக்கத்தில், “எனக்குள் என்னால் இருக்க முடியவில்லை“ என்று இடம் பெறுகிற இந்த வாசகம் திரும்பவும் ஒரு 40 பக்கங்களுக்கு உள்ளாகவே மீளப் பதியப் பெறுகிறது. மீளவும் எனக்குள் என்னால் இருக்கமுடியவில்லை என்கிற அந்தத் துயரம் சார்ந்த சொல்லாடல் நாவலின் 68-வது பக்கத்திலும் இடம்பெறுகிறது. எனில் கோவிட் காலம் ஒரு கொடுந்துயர் காலமாக அவரவர்களுக்குள் அவரவர்கள் வசிப்பதே பெரும் பாடாக மாறுவதும் சுவர்கள் சிறைச்சாலைகளாக மாறுவதும் சுவர்களை உடைத்து வெளியேறத் தவிக்கின்ற தவிப்பைக்கொண்ட மனித மனோபாவங்களைப் பிரதி பலிப்பதாகவும் நாவல் தொடர்கிறது. இரண்டுமுறை இத்தொடர் இடம்பெற்றாலும் கூறியதுகூறல் எனும் அயற்சி இல்லை. திருக்குறளில் குறிப்பறிதல் அதிகாரம் இரண்டு முறை இடம்பெறுவது அதன் மேலதிக முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதைப் போல.

”சுவர்களில் இருந்து கை வெளியே நீட்டியபடி ஆள்காட்டிவிரல் மட்டும் என்னை நோக்கி வந்தது” என்று பாலமுருகன் சித்திரிக்கும் இடத்தில், ஓவியர் பீட்டர் லூமி தன் அதிகார வரம்பை மீறி பாசிசம் வெளிப்படுகிறது என்பதன் குறியீடாக நாக்கை வெளித் துருத்திக் காட்டுவதாக வரைந்த சித்திரம் நினைவுக்கு வருவதோடு, பாலமுருகன் தீட்டிக் காட்டும் காட்சிச் சித்திரத்தையும் ஒப்பிடத் தோன்றுகின்றது. ஆனால் இங்கு ஆதுரம் நிரம்பி வழிகிற; ஏக்கம் ததும்புகிற கைகள் சுவர்களில் இருந்து வெளித்தெரிந்து அரவணைத்துக் கொள்ளதவிக்கின்ற பெருங்கருணையை, பாலமுருகனால் வரைந்து காட்ட முடிந்திருக்கிறது.

‘Stay at home’ ‘Stay at home’… எனக்குள்ளே பலமுறை ஒலிக்கும் வார்த்தைகள்… கைப்பேசியின் எந்தக் குழுவைத் திறந்தாலும் தொடர்ந்து இதே வார்த்தைகள் வருகின்றன. வட்டமான சிவப்புநிற அடையாளத்துடன் எச்சரிக்கை விடப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அன்று கோவிட் கண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி அபாயகரமான எல்லையைத் தொட்டுவிட்டதாக அறிவிப்பு வருகிறது. படியைவிட்டு மெல்ல இறங்கினேன். உடலை நகர்த்துவதன் மூலம் உயிரோடு இருக்கிறேன் என உறுதிப்படுத்திக் கொள்வேன்“ என்று எழுதிச் செல்கிறார்.

பக்கத்துவீட்டு சீனர் ஆத்திரத்தில் கூக்குரல் இடுகிறார். வேலை போயிட்டு. என் முதலாளி என்னை ஏமாற்றிவிட்டான் இனி நான் என்னசெய்யமுடியும்? என் உடல் உறுப்புகளை விற்றுப் பணம்கொண்டு வரவா? மேலும் மார்பை குத்திக்கொண்டு கத்தினார். கையில் கிடைத்த ஒரு கட்டையை உள்ளே விட்டறிந்தார். கண்ணாடி உடை படும் ஓசை எதிரொலித்தபடியே இருந்தது. என்ன எழவெடுத்த உலகம் இது என்ற கத்தவேண்டும் என்பதுபோல் இருந்தது” என்று எழுதுகிறார்.கோவிட்டுக்குத் தமிழர்களோ சீனர்களோ மலாய்க்காரர்களோ என்றில்லை எல்லோரும் இந்த நச்சுக் கிருமியின் வாயில் மாட்டிக்கொண்ட பேரவலம் நாவலில் உரக்கவும் பரக்கவும் பேசப்படுகிறது.

மதமாற்றங்களும் கடுமையாக எதிர்கொள்ளப்படுகின்றன. கிறித்தவமதம் மாறும் பெரியப்பா குடும்பத்தை, கடிந்துகொள்ளும் வசனம் முக்கியமானது. ஏய் இப்பிடி அநியாயமா சிலுவசாமியக் கும்புடப் போய்ட்டிங்களே நம்ப புள்ளையார் சாமி ஆக்ரோசமா தண்டனை குடுத்துடாதா?  நல்லா அனுபவிக்கத்தான் போறீங்க என்று திட்டும் அதேவேளை, அம்மாவின் நலிவில் பெரியம்மா அதே யேசுசாமியிடம் மன்றாடி ஸ்தோத்திரம் சொல்வதும் கிறித்தவப் பெரியம்மாவின் மகனான ஜோ இந்து சித்தியின் மகனான சராவைத் தேற்றிக் காப்பாற்றத் துணைநிற்பதும் பெருந்தொற்றுக் காலத்தில் மசூதியிலிருந்து உணவும் மருந்தும் வழங்கப்படுவதும் சமயம் கடந்த நல்லிணக்கம் தமிழ்ச் சமூகத்தில் எல்லாக்காலங்களிலும் எல்லா இடங்களிலும் பேணப்பட்டு வருவதும் பதிவாவது தவிர்க்கவியலாததுதான்.

பக்கம் 162-ல்  “டேய் மண்டைக்கு ஏத்தாம சொல்லிரு என் சரக்கு கூட உனக்கு என்ன வேலை” என்று ஒரு வசனம் வருகிறது. நாவலில் ஆங்காங்கே தன் காதலிகளை சரக்கு என்று மளினமான பார்வையைப் புலப்படுத்துகிற ஆண்கள் சமூகத்தைக் காட்டுவதும் பெண்களைப் பண்டமாக்கிப் பார்ப்பதுமான பார்வை இடம்பெறுகிறது.

நாவலில் இன்னொரு வசனமும் இடம் பெறுகிறது; ”உனக்கு ரசனை இல்ல அழகா இருக்கிற பொண்ணுங்களுக்காக ஒருத்தன் கவிதை எழுதினால் அது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா” என்று சரா கேட்கிறான்.

இவற்றுக்குப் பதிலளிப்பதுபோல, “டேய் என்னையே செய்ற பாத்தியா பொம்பளைங்கள மடக்குவதற்கு, கவிதை உங்களுடைய ஆயுதம். இந்தத் தமிழ் கவிதைன்னா மயங்கற ஒரு கூட்டம் இருக்கும் பாரு. அந்த மாதிரி பொம்பளைங்கள அழகா மடக்கி செஞ்சு விட்டுட்டு போயிருவீங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிட்டு என்னோட பழைய காதலிதான் அது இது மயிரு மட்டன்னு சொல்லிட்டுத் திரியற” என்று ஆக்ரோஷமாகக் காமினி பேசுகிறாள்.

நாவலுக்கிடையில் பேசும் வங்காளதேசியின் குரலிலும் துயரம் கொப்பளிக்கிறது. ”அபாங் இந்த கோவிட் உருவான பிறகு, எங்கள் ஆள்கள் நிறைய செத்துப்போய் விட்டார்கள். எங்கள் உடல்கூட எங்கள் நாட்டுக்குப் போகவில்லை தெரியுமா? எங்கள் பிள்ளைகள் எங்கள் குடும்பம் அவர்களுக்குக் கிடைத்த செய்திதான் எங்களுக்கு உடல்”

”அபாங் நாடே பரிதவித்து கிடக்கிறது.. நாடு இல்லை உலகமே குழப்பத்தில் இருக்கிறது… இங்கு உன் கவலையும் என் பசியும் ஒரு பொருட்டல்ல”

”டேய் இந்தக்காசு படுத்துக்கிடச்ச காசு இல்ல. இது நான் வேலை செஞ்சு சேர்த்த காசு. என்னோட வேலையில நான் நேர்மையா இருந்து சம்பாதித்தது. ஒரு நாளைக்குப் பத்து பேருக்கு உடம்பு உருவிவிடுவேன். இந்தக்காசு உனக்கு அவ்வளவு கேவலமா இருந்துச்சுன்னா கிளம்பிரு. பட் இதுகூட உன்கிட்ட இல்ல அப்படின்னு நினைச்சுக்கோ என்று காமினி பேச, இடைமறித்து சரா பேசுகிறான், ”இல்ல காமினி ஒரு பொண்ணுகிட்ட காசுவாங்கி….. அவள் இடைமறிக்கிறாள். முதல்ல இந்த பொண்ணு இந்த ஆணுன்னு பேசுறத நிறுத்து. இங்க இருக்கிறது வயிறு அவ்வளவுதான் புரிஞ்சிக்கோ” என்று முத்தாய்ப்பாக முகத்தில் அறைகிற ஒரு வசனம் நாவலுக்கு வலிமை சேர்க்கிறது.

“நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல சாரா? 40 வயசு நெருங்கிட்டீங்க கல்யாணம் பண்ணியிருந்தீங்கன்னா கோவிட்ல வீட்ல இருந்ததுக்கு ரெண்டு மூணு பிள்ளைங்களுக்கு ரெடி பண்ணி இருக்கலாம் சொல்லிவிட்டு சிரித்த அவனுடைய சிரிப்பு, எனக்கு எரிச்சலை உண்டாக்கியது என்று எழுதுகிறார்.

நாவலுக்கிடையில் மனப்பிறழ்வுற்ற ஒரு பெண்மணியின் சித்திரமும் இடம் பெறுகிறது தன் மகளைக் காணோம் என்று முறைப்பாடுடன், தன் இளம் வயது ஒளிப் படத்தைக் கையிலேந்தியபடி அலையும் மனப்பிறழ்வுற்ற பெண் குறித்த பார்வை இப்படி இடம்பெறுகிறது.“அவங்க ரொம்பகாலமா அவங்களையே தேடிக்கிட்டு இருக்காங்க. ஆனா அவங்க உயிரோடு இருக்கிறவரைக்கும் அவங்களுக்கு அவங்க கிடைக்க மாட்டாங்க. எவ்வளவு மோசமா இருக்கு பாருங்க வாழ்க்கை?” என்று ஒரு தத்துவத் தெறிப்பு இடம்பெறுகிறது.

”சரா எனக்கு ஒன்னும் ஆகலடா நீ என்ன விட்டுட்டு போயிட்ட இன்னொரு தடவை என்னை வந்து பார்த்துருந்தா நான் உன் கூடவே வந்துருப்பேன். ஏன்டா அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுக்கொடுத்துட்டு போயிட்ட? அவ்வளவுதானா நீ என்ன புரிஞ்சுகிட்டது? ஒரு பெண்ணைப் புரிந்துகொள்வதற்கு நீ கவிஞனா இருக்க வேண்டியதில்ல. சாமியாகூட இருக்க வேண்டியது இல்லை. கொஞ்சம் காத்திருக்கக்கூடிய மனுஷனா இருந்திருக்கலாம். இப்ப என் வாழ்க்கையை பார்த்தியா? என்று கலையரசி கேட்கும் கேள்வி மிகப் பெரிய தத்துவார்த்த கேள்வி மட்டுமல்ல இந்த உலகத்தில் கவிஞர்களும் கடவுள்களுமாக பெண்களைப் புனிதமேற்றிப் பாடாய்படுத்துகிற அவலத்தைத் தோலுரித்துச் செல்கிற கதையாடல் இது.

நாவலின் பதிப்புரையில் அம்பிகாகுமரன் எழுதுவதை வழிமொழிந்து நாம் இந்த நாவலின் மீதான பார்வையை நிறைவுசெய்யலாம். அப்படியே வரிக்குவரி உடன்படுகிற முக்கியமான பார்வையாக இது நமக்குப்படுகிறது. மனிதன் சமூகவிலங்கு என்ற பெரும் உண்மைக்கு மாறாக, அனைத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டு இருந்த நாட்களில், பெற்றோருக்கு இறுதிமரியாதை செலுத்தமுடியாத பிள்ளைகள்… வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்தபோது மனைவியால் நிராகரிக்கப்பட்ட கணவர்கள்… கூலி வேலையும் இல்லாமல் போன நிலையில் குழந்தைகளின் பசியை ஆற்ற செய்வதறியாத தவித்துப் போன தாய்மார்கள்… நின்றுபோன திருமணங்கள்… சந்திக்கமுடியாத காதலர்கள்… மற்றும் குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்று மரணபயம்… இவற்றோடு வாழ்ந்த காலத்தை வரலாற்றில் திரும்பிப் பார்க்கும்போது தலேஜூவும் அதில் சில களங்களைப் பிடித்து வைத்திருப்பாள். ஒரு ஆண் தன்வாழ்வில் கடந்துவந்த பெண்களை அவனது உள் அமைதிக்குள்ளிருந்து மீட்டெடுத்து கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தி இருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் அவனது வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்கள் அலைச்சல்களை மொழியின் வசீகரத்தோடு சொல்வது, இந்த நாவலின் தனிச்சிறப்பு. தலேஜு என்பவள் நேபாளத்தின் மன்னர் காலத்துப் பெண் தெய்வம். மலேசியாவிற்கு வேலைக்குவரும் பெண்ணொருத்தியின் மூலம் நாவலுக்குள் தலேஜு பிரவேசிக்கிறாள். பின்னர் அவளே குறியீட்டுத் தெய்வமாக விஸ்தாரம் எடுக்கிறார் என்று எழுதிச் செல்கிறார்.

நாவல் மனிதத்தை விஸ்தாரமாகக் கட்டி எழுப்புகிற வேலையை இந்த கதாபாத்திரங்களின் வழியாக நிறைவாக செய்திருக்கிறது. இடம்பெயர் உலகத்தின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளின் பல்வேறு முகங்களை பல்வேறு கோணங்களில் இருந்து படம்பிடிக்கிற நாவல், தன்னுடைய புலப்படுத்துகின்ற உணர்த்துமுறைமையால் தனிச் சிறப்பான ஒரு கதையாடலை முன்மொழிந்திருக்கிறது. அதை நாமும் வழி மொழிவதோடு, அவ்வை சண்முகி படத்தில், வாய்பேச முடியாத நாசர் நிகழ்த்திக்காட்டுகிற ஒரு கதை ஓட்டத்தை இது சண்முகி, இது நான், இது சண்முகி, இது நான், என்று ஜெமினி கணேசன், வகை பிரித்துச் சொல்வதைப் போலவெல்லாம் வழக்கமான ஒரு நேர்கோட்டு நாவலைப் போல இதை வாசிக்காமல் இந்த கதாபாத்திரங்களை நாம் அதன் தனித்துவமான அச்சுஅசலான உயிர்த்துடிப்பான போக்கில் படித்துவிடமுடியாது. ஏனெனில் காமினி எப்போது நேரில் வருகிறாள் குமாரியாக எப்போது வருகிறாள் அம்மா எப்போது வருகிறாள் எல்லோரும் உயிரோடுதான் இருக்கிறார்களா அல்லது மரணித்தபின் மாயப்பிம்பமாக வருகிறார்களா?  குமாரிகளாக நேர்ந்துவிடப்படுபவர்கள் தன் இளமைப் பருவத்தை எப்படி இழந்து தவிப்பார்கள்? கலையரசி எங்கே இருக்கிறாள் தேடிக் கண்டடைந்துவிட முடியுமா? என்பது போன்ற பல சிக்கலான முடிச்சுகளைத் தன்னகத்தே போட்டுக்கொண்டே நாவல் நடைபோடுகிறது. பெண், தானே விரும்பி இசைவளித்தால் அன்றி எந்தக்காலத்திலும் எந்தத்தேசத்திலும் ஆணால் தன்னிச்சையாகவோ தன்னகங்காரமாகவோ பெண்ணை அடைந்துவிடமுடிவது சாத்தியமற்றது என முகத்தில் அறைந்து பேசி நிறைவெய்துகிறது.  நூலாசிரியர் பெண்ணிடம் ஆண் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று நம்புகின்றார். ஆனால் ஆணிடம் பெண்ணோ பெண்ணிடம் ஆணோ சரணடைவதைவிட ஆணும் பெண்ணும் சர்வசமம் எனும் நிலையை எட்டவேண்டும் என்பதே பெருவிழைவாக இருக்கமுடியும் என்று தோன்றுகின்றது.

தாய்த்தெய்வப் பண்பாட்டின் ஒரு அம்சமாகவே அவைதீக நாட்டார் தெய்வக் கதையாடலில் குமாரியாக இருந்து இல்லறவாழ்வுக்குத் திரும்பும் கமாரியா காதலியாகக் கண்ணாமூச்சி காட்டும் கலையரசி, வாழ்வியல் நெருக்கடியால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பிறகு  நெகிழும் தோழமையாய்க் கரைவதும் சுயமரியாதைக்கு இழுக்கு வரும் இடங்களில் கோபாவேசம் கொள்வதும் உருகி உருகி சரா நேசிக்கும் காமினி… ஆதுரத்துடன் ஒருகை நீளமான அம்மா… இவர்கள் எல்லோரையும் ஓருருவாக்கி தலேஜூ எனும் நேபாளத் தேவதையாக்கி நிமிர்கிறது நாவல்.

நாட்டாரியல், நவீன மீபுனைவியல் இரண்டும் கூடிமுயங்கி நாவல் பிரசவிக்கப் பட்டுள்ளது. நாவலின் இறுதிப்பகுதியில் கட்டவிழ்த்து விடப்படுகிற மனிதநேயம் பக்கங்களில் இருந்து வெளியேறத் துடிக்கிற ஒரு தவிப்போடு பிரதி எந்த அதிகார ஆர்ப்பாட்டங்களும் எழுத்தாளனுக்கு வைக்காமல் தன் கதையை வெற்றிகரமாத் தானே எழுதிக்கொள்வதுபோல வெகுஇயல்பான சுதந்திரவெளியில் நிம்மதியாக நடை போடுகிறது. அதேசமயம் நிம்மதியற்ற வாழ்க்கையைக் கட்டுடைத்துப் பேசுகிறது. தலேஜுகள் கடவுள் தேவதை நிலைகளில் புனிதப்படுத்துவதிலிருந்து விடுவிக்கப் படுவதும் சமன்மை ததும்பும் மனிதியாகக் கொண்டாடப்படும் காலமாற்றங்கள் நிகழ்ந்தேறட்டும்.

சென்னையில் நடந்த ‘தலேஜு’ நாவல் வெளியிட்டு விழாவில் பேசப்பட்ட உரையில் எழுத்து வடிவம்.

(பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன், அயலகத் தமிழியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *