குறுங்கதை – 5 : வழித்துணை

“ஹலோ டீச்சர்! கிளாஸ்ல என்னோட ஹென் பேக்கை விட்டுட்டன்… நான் போய் எடுத்து வந்துரவா?”
“இருட்டிருச்சிமா… நாளைக்குக் காலையில எடுத்துக்கோ…”
தலைமையாசிரியர் எவ்வளவு மறுத்தும் சித்ராவின் மனம் கேட்கவில்லை. கைப்பை காணாமல் போய்விட்டால் என்கிற பயம் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.
“சரி மா… பார்த்து… நான் மாரிமுத்து அண்ணன்கிட்ட சொல்றன்…”
மறுமுனையில் சித்ரா பதிலேதும் சொல்லாமல் உடனே பள்ளிக்குப் புறப்பட்டாள். கார் வழக்கத்தைவிட வேகமாகச் சென்றது. பள்ளிக்குச் செல்லும் சிறு தார் சாலையில் நுழைந்ததும் ஒரு வயதானவர் காரை நிறுத்துவதை சித்ரா கவனித்தாள். சட்டெனக் காரை நிறுத்தினாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“மா! ஸ்கூலுக்கா போற?”
அவள் கண்ணாடியை முழுமையாய் இறக்கவில்லை. பதற்றத்தில் இருந்ததால் என்ன செய்வதென்றும் புரியவில்லை.
“மா, என்னை கார்ட் ஹவுஸ்ல இறக்கி விட்டுரியா?”
“நீங்க யாரு தாத்தா? அங்க யாரைப் பார்க்கணும்?”
“நைட் இன்னொரு ஆள் செக்குருட்டி வேணும்னு கேட்டுக்கிட்டாங்க…அதான் மகன் வந்து இங்க இறக்கிவிட்டுட்டுப் போய்ட்டான்… அவன் ராத்திரி வேலைமா… மணியாச்சின்னு ஓடிட்டான்… சைக்கிள்தான் போறான்… லேட் ஆகும்…”
சித்திராவிற்கு மேற்கொண்டு சிந்திக்க இயலவில்லை, அவளுக்கு உடனே விட்டுவந்த கைப்பையை எடுக்க வேண்டும் என்பதிலேயே கவனம் இருந்தது.
அவர் காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தார்.
“இந்த ஸ்கூல் ஒரு காலத்துல எவ்வளவு பிள்ளைங்களோட எப்படிக் கம்பீரமா இருந்துச்சி தெரியுமா?”
“உங்களுக்கு இந்தப் பள்ளிக்கூடம் முன்னமே தெரியுமா?”
அவர் ஆர்வத்துடன் முன்னகர்ந்து வந்தார்.
“இந்த ஸ்கூல் கட்டுவதற்கு முன் அடிக்கல் நட்டு வைக்கும்போது நான் கூட இருந்தன்…”
சித்ராவிற்குச் சட்டென ஒரு குழப்பம்.
“என்ன வருசங்கய்யா?”
“1930 மா…”
அவளுடைய மனம் அவருடைய வயதைக் கணகிட்டு மேலும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.
“உங்களுக்கு இப்ப என்ன 96 வயசா? நம்ப முடியலையே…”
கண்ணாடியில் அவருடைய முகத்தைப் பார்த்தாள். அதன் பின்னர் அவள் பள்ளியைச் சேரும்வரை காரை நிறுத்தவில்லை.
“நான் அம்பது வருசமா இந்த ஸ்கூலுக்கு வந்துகிட்டுதான் இருக்கன்மா…”
அப்பொழுதும் அவள் திரும்பவில்லை. பள்ளியில் விட்டுவந்த கைப்பை காரின் பின்னிருகையில் அவருடைய கையில் இருந்ததை அவள் கடைசிவரை கவனிக்கவில்லை.
- கே.பாலமுருகன்
![]()