எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை; அவர்கள் பிறக்கிறார்கள்- தலேஜூ நாவல் வெளியீட்டை முன்னிட்ட அணிந்துரை ( திரு.பி.எம் மூர்த்தி)

ஒரு முறை வகுப்பில் பேராசிரியர் ஒருவர் நவீனம் மற்றும் பின்நவீனத்துவம் குறித்து பாடம் எடுத்தபோது ‘absurd’ என்னும் சொல்லாடலைப் பயன்படுத்தினார். பிரெஞ்சு புரட்சிக்குப் பின் உருவான நவீன இலக்கியத்தின் ஒரு முக்கியக் கூறாக – வெளிப்பாடாக – குறியீடாக அஃது இருந்ததாகக் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனிதகுலம் சந்தித்த படுமோசமான அவலங்கள், பசி-பட்டினி-பஞ்சங்கள் வேலையில்லாத் திண்டாட்டம், அதுவரையில் உலகம் கண்டிராத பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம் என இவை அனைத்தாலும் பாதிக்கப்பட்ட படைப்பாளர்களால் உருவானதுதான் இந்த ‘absurd’ மனநிலையை உண்டாக்குகிற நாடகங்கள், புதுக்கவிதைகள், நாவல்கள் என்று சொன்னார். இதையேதான் எழுத்தாளர் ஜெயமோகன் மலேசியா வந்திருந்தபோது நாவல்கள் பற்றி ஆற்றிய உரையில் ஓர் உலகத்தரம் வாய்ந்த நாவல் என்பது படித்தவுடன் நம்மை விடாமல் துரத்தி நம்முள் சூன்யமான மனோநிலையை உண்டாக்கி வாழ்வதிலுள்ள பெருந்துயரை மனத்திற்குள் இறக்கிவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அதன் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சியில் ஓர் ஆங்கிலப் படம் பார்த்தேன். Cormac McCarthy என்பவர் எழுதிய Pulitzer Prize பரிசுப்பெற்ற நாவலைத் தழுவி 2006 ஆண்டில் எடுக்கப்பட்ட The Road என்கிற திரைப்படம்தான் அது. ஒரு பெரிய போரினால் பூமியில் எல்லா உயிரினங்களும் அழிந்து எல்லா நாடும் நகரங்களும் அழிந்து உணவுப் பஞ்சம் ஏற்பட்டு எஞ்சியிருக்கிற ஒரு சில மனிதர்கள் மட்டுமே வாழ்கின்ற சூழல். உணவுக்காக அந்த மனிதர்களே ஒருவரையொருவர் வேட்டையாடும் நெருக்கடியான ஒரு சூழலில்தான் தந்தை ஒருவனும் அவன் சிறிய மகனும் எப்படி உயிர்வாழப் போராடி, இறுதியில் மகன் கையில் துப்பாக்கியைக் கொடுத்து “உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இதனைப் பயன்படுத்திக் கொள்!” என்று சொல்லிவிட்டு தந்தை பரிதாபமாக இறந்து போவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து முடித்த பின்பு, எனது பேராசிரியர் குறிப்பிட்ட அந்த ‘absurd’ உணர்வு எனக்கு ஏற்பட்டது. பல நாள்கள் என் உறக்கத்தைத் தொலைத்த திரைப்படம் அது. இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வினாடியில்கூட அந்தத் திரைப்படத்தின் கதை என்னை என்னவோ செய்கின்றது.

1980களில் மலேசிய STP(M) தேர்வில் பாடநூலாக இருந்த ஓர் இந்தோனேசியா நாவலைக் குறிப்பிடலாம். பல இலக்கிய விருதுகளை வென்ற Pramoedya Ananta Toer எழுதிய Keluarga Gerilya (1950) எனும் நாவல், நாட்டுக்கான விடுதலைப் போரில் சின்னாப்பின்னமாய்ப் பிரிந்து சிதறிபோன அமிலா குடும்பத்தின் துயரக் கதை. அவளுடைய மூத்த மகன் சாமான் நாட்டு விடுதலைக்காக டச்சுக் காலணித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடியதால் தூக்கிலிடப்படுகிறான். மற்ற இரண்டு மகன்கள் புரட்சிப் படையில் சேர்ந்து மாண்டு போய்விடுகிறார்கள். எல்லோருமே ஆளுக்கொரு மூலையில் பிரிந்து போரின் கொடூரமான பிடியில் சிக்கிக் கடைசி வரைக்கும் ஒன்றுசேர முடியாமலே போய்விடுகிறார்கள். பிள்ளைகளை இழந்த துயரத்தில் சுயநினைவை இழந்து அமிலா மனநோயாளியாகி விடுவாள். அந்நாவலைப் படித்து முடித்து பல வருடங்கள் அதன் பாதிப்பால் உழன்றிருக்கிறேன். மனித வாழ்க்கை மீதே ஒரே வெறுப்பு, சூன்யம், வெறுமை என மனத்திற்குள் தோன்றியதையும் எண்ணிப் பார்த்தேன்.
உலகத் தரத்திலான ஒரு நாவல் படைக்கப்பட வேண்டுமென்றால் நம் படைப்பாளர்கள் அவசியமாய் டால்ஸ்டாய் நாவல்களின் தரத்துக்குத் தங்கள் படைப்புகளைக் குறிப்பாக நாவல்களைப் படைக்க வேண்டும். நான் சென்று வந்த அநேகப் பயிற்சிகளிலும் தமிழக எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல்களிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட ஒரு கருத்து என்னவெனில் இலக்கிய வடிவங்களில் நாவல் என்பது வெறுமனே பொழுதுபோக்குக்காக படைக்கப்படும் ஓர் இலக்கிய வடிவம் (genre) கிடையாது. அது வாசகனை உலுக்கிப் போடுகிற அல்லது அவனுக்குள் உறைந்துகிடக்கும் உள் உணர்வுகளை எல்லாம் தட்டி எழுப்பி ஆழமும் அகலமும் தெரியாமல் உழன்றுகொண்டிருக்கும் பிரபஞ்ச வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்க வேண்டும். மனித வாழ்க்கையை அல்லது அவனின் இருத்தலைக் கேள்விக்குட்படுத்துவனாகவும் மனித வாழ்க்கையின் அறங்களையும் முரண்களையும் போலித்தனங்களையும் துகிலுரித்துக் காட்டும் காலக்கண்ணாடியாகவும் திகழ வேண்டும்.

மலேசியாவில் இப்படிப்பட்ட நாவல்களைப் படைத்திட பலரும் பல காலமாய் முயன்றுதான் வருகிறார்கள். எம்.ஏ.இளஞ்செல்வன் (பசித்திருக்கும் இளம் கொசுக்கள்), சீ.முத்துசாமி (மண்புழுக்கள்), கோ.புண்ணியவான் (கையறு), சைபீர் முகம்மது (அக்கினி வளையங்கள்), அ.ரெங்கசாமி (நினைவுச் சின்னம்), இளந்தமிழன் (செம்மண் சிலைகள்) போன்ற மூத்த எழுத்தாளர்களின் வரிசையில் கே.பாலமுருகன் (நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்), ம.நவீன், அ.பாண்டியன் என இன்னும் சில இளம் எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் சிறந்த நாவல்களைப் படைத்து வருகிறார்கள். உலகளாவிய நிலையில் மாறிவரும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்கு ஏற்பவும் உளவியல் சார்ந்த கதைப் பின்புலங்களையும் கொண்டு கதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதிவருவது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

கே.பாலமுருகனின் முதல் நாவல் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ அவருடைய 21ஆவது வயதில் எழுதப்பட்ட நாவல் என்பதை இன்றுவரையிலும் நான் வியந்து ஆச்சரியப்பட்டு எண்ணிப்பார்க்கிற ஒரு விடயமாகும்! முதல் முயற்சியிலேயே அந்நாவல் உலகத் தரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிவரும் ‘கரிகாற்சோழன்’ விருதை வென்றது. அந்த நாவலைப் படித்து முடித்த பிறகு நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். டால்ஸ்டாய் நாவலைப் படித்துவிட்டு ஜெயமோகன் அவர்களுக்கு ஏற்பட்ட அந்த ‘எப்சர்ட்’ வகையிலான உள்ளுணர்வு எனக்கும் ஏற்பட்டது. Pramoedya Ananta Toer எழுதிய Keluarga Gerilya வைப் படித்துவிட்ட பிறகு Doris Pikingtonனின் The Rabbit Proof Fence திரைப்படத்தையும் Cormac McCarthyயின் The Road திரைப்படத்தையும் பார்த்துவிட்டு பிறகு நான் அடைந்த அதே மனநிலையை கே.பாலமுருகனின் நகர்ந்துகொண்டிருக்கும் வாசலைப் படித்துவிட்டுக் கடுமையான மன அவதிகளுக்குள்ளானேன். அவருடைய அந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பையும் சோகத்தையும் சோர்வையும் என்னால் வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல இயவில்லை.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி ஒரு குடும்பமே சன்னம் சன்னமாய் காற்றில் கரையும் கற்பூரம் போல கரைந்து மறைந்து போகிறார்கள். ஒரு காலத்தில் தோட்டத்தில் ஒரே குடும்பமாக வாழ்ந்த அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், சின்ன தம்பி எல்லோரும் வறுமையின் காரணமாகத் தோட்டத்தைவிட்டு வெளியேறி நகருக்குக் குடிபெயெர்ந்து அங்கும் வாழ வழி தெரியாமல் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் வழியாக ஒவ்வொருவராகக் காணாமற் போகிறார்கள். கடைசிவரைக்கும் அவர்களை மீண்டும் சந்திக்க விடாமலேயே கதையை முடித்திருப்பார். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் துயரையும் இழப்பையும் வாசகனின் இதயத்திற்குள் தைத்துவிட்டுப் படைப்பாளி தப்பித்துக் கொள்கிறார். வாசகனைத் தாளாத் துயரத்தில் ஆழ்த்தி அவர் மனத்தில் போட்டு வைத்திருந்த விலங்கை வாசகனுக்குப் போட்டுவிட்டு அவர் விடுதலை ஆகிவிடுகிறார்.

எஸ்.இராமகிருஷ்ணன் அவருடைய ஓர் உரையில் சொன்னார் கதையில் வரும் கற்பனை மாந்தர்கள் நம் நிஜ வாழ்க்கையிலும்கூட நம் கண்முன் உலாவிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் பொருத்தளவில் அவர் படைத்தளித்த அத்தனை கதை மாந்தர்களையும் நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, அந்த அக்கா கதாபாத்திரத்தைச் சொல்லலாம். எங்கள் சொந்த வீட்டிலும் அந்த அக்கா இருந்தார்; இன்னும் இருக்கிறார். என் கண்முன்னே என் அக்கா வாழ்க்கையில் நான் பார்த்த அதே துயரத்தைத்தான் கிட்டத்தட்ட 100% நாவலில் வரும் அந்த அக்கா பாத்திரமும் அடைந்ததாகப் படைக்கப்பட்டிருந்தார். கே.பாலமுருகனிடம் கேட்டேன்: யாரையாவது நிஜப் பாத்திரத்தைப் பார்த்து அந்த அக்கா பாத்திரத்தைப் படைத்தீர்களா என்று. அது முழுக்க முழுக்க என் கற்பனைப் பாத்திரம்தான் என்று சொன்னார். வியப்பாக இருந்தது. சிறந்த எழுத்தாளர்களால்தான் இப்படி கற்பனைப் பாத்திரங்களை உயிரோட்டமான ஜீவனுள்ள பாத்திரங்களாகப் படைத்தளிக்க முடியும் என்று நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கை அல்லது கொள்கைப்படி சிறந்த எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை; அவர்கள் பிறக்கிறார்கள். கே.பாலமுருகன் அப்படிப்பட்ட ஓர் எழுத்தாளராக நான் பார்க்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பார்கள். அவர் ஒரு பானை சோற்றை மட்டும் கொடுக்காமல் இதோ இன்னொரு பானை சோற்றையும் (இரண்டாவது சமூக நாவலையும்) நம் முன்னே சமைத்துப் படைத்திருக்கிறார்.
நகர்ந்து கொண்டிருக்கும் வாசலில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை அவர் கையாண்டிருப்பார். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையைக் கற்றுக் கொண்டவர் போல் ஒவ்வொரு பாத்திரத்துக்குள்ளும் மாறி மாறி நுழைந்து அவர்களாகவே மாறி பேசியிருப்பார்; கதையைப் படைத்திருப்பார். ஒருவரே பல பேராகப் பல்வேறு பண்புநலன்கள் சிக்கல்கள் கொண்ட பாத்திரமாக மாறியிருப்பார்! 21 வயதிலா அந்த உத்தி, வித்தை அவருக்குக் கைவரக் கிடைத்திருக்கும் எனப் பலமுறை வியந்துள்ளேன்.
அவர் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கிற இந்த ‘தலேஜூ’ என்னும் நாவலிலும் அந்த வித்தை – மாயாஜாலங்களை நிச்சயம் காட்டி நம்மை வியப்பிற்குள் ஆழ்த்தியுள்ளார் என்று திண்ணமாக நம்புகிறேன்.

தொடக்கத்திலிருந்தே உலகத் தரத்திலான தமிழ் நாவல்கள் நம் மலேசியத் திருநாட்டிலும் வெளிவருவதை வலியுறுத்தியே என்னுடைய இந்தப் பதிவில் குறிப்பிட்டு வந்தேன். அந்த நம்பிக்கையை கே.பாலமுருகன் தந்து கொண்டிருக்கிறார். நிச்சயமாக நம் நாட்டின் சிறந்த நாவலாசிரியராக இவர் உருவாகுவார், மிளிருவார், நான் மேலே குறிப்பிட்ட உலகத்தரம் வாய்ந்த படைப்புகளைத் தந்து தனக்கென ஒரு ‘மாஸ்டர்சைபீசை’ தந்து தடம் பதிப்பார். அந்தத் தடத்தைப் பதிக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாவலை ஏற்கனவே படித்து முடித்து விட்ட அம்பிகா குமரன் தெரிவித்த கருத்துரை மிகக் கச்சிதமாக அமைந்துள்ளதாக உணர்கிறேன். பாலமுருகனின் நாவலைப் பதிப்பிக்கும் வேரல் பதிப்பிகத்திற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
இலக்கியக் காவலர்
மலேசியத் தேர்வு வாரிய மேனாள் உதவி இயக்குநர்,
பி.எம்.மூர்த்தி
28/11/2025.
![]()