துயரத்திலிருந்து விடுதலைக்கு நகரும் மனம்
கே.பாலமுருகனின் தேவதைகளற்ற வீடு – வாசகப் பார்வை
புத்தகம் : தேவதைகளற்ற வீடு
எழுத்து : கே.பாலமுருகன்
பக்கங்கள் : 192
வெளியீடு: வாசகசாலை பதிப்பகம்
மலேசிய வாழ்வின் துன்பியல் பகுதிகளை விதவிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சிறுகதைத் தொகுப்பே ‘தேவதைகளற்ற வீடு’. எழுத்தாளர் சாம்ராஜ் இப்புத்தககத்தில் குறிப்பிட்டிருப்பது போல கலையின் தலையாய பணி துயரத்திலிருந்து கிளர்ந்து வருவதுதான் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்று இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான். மலேசியாவில் நன்கு அறியப்பட்ட தேர்ந்த கதைச்சொல்லியான எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 14 சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன; ஆர்ப்பரித்தும் உள்ளன. அனல், இறைச்சி, எச்சில் குவளை, ஓர் அரேபியப் பாடல், காளி, சுருட்டு, தேவதைகளற்ற வீடு, நாவலின் முதல் அத்தியாயம், நீர்ப்பாசி, நெருப்பு, துள்ளல், பேபி குட்டி, தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம் மற்றும் மீட்பு எனும் இப்பதிநான்கு சிறுகதைகளும் பேசும் ஒரே மையக்கரு ‘துயரம்’. ஆனால், துயரத்தில் இன்பம் காணுதல், துயரத்தில் கோபமடைதல், துயரத்தில் காமத்தை உணர்தல், துயரத்தில் குழப்பத்திற்குள்ளாகுதல், துயரத்தில் மர்மம், துயரத்தில் வன்மம் என வெவ்வேறு கோணங்களில் துயரத்தை அலசியிருக்கிறார் எழுத்தாளர். இடப்பிண்ணனி மட்டும்தான் மலேசியாவாக இருக்குமே ஒழிய, கதைகள் அனைத்தும் ஏழைகள் வாழும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் வகையில்தான் அமைந்துள்ளன. ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு சூழல்களைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கும் எழுத்தாளர், அனல் (கதை 1), நாவலின் முதல் அத்தியாயம் (கதை 8) மற்றும் மீட்பு (கதை 14) எனும் இம்மூன்று கதைகளிலும் ‘கடன்’ பிரச்சனைகளையே மையமாக வைத்து எழுதியுள்ளார். சராசரி மக்களின் வாழ்க்கையை மீளாத் துயரங்களுக்கு இட்டுச் செல்வதே கடன் தொல்லைகள்தான் என்பதை இதன்மூலமே நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
அனல் எனும் கதையில் வரக்கூடிய சாந்தி எனும் பெண்மணி அத்தாப் கம்பத்தின் வட்டி வசூலிக்கும் பெண்ணாக வலம் வருகிறார். இவரது கதாப்பாத்திரத்தைப் பார்க்கையில், அவருக்கு இத்தகைய வீரத்தையும் யாரைவேண்டுமானாலும் எதிர்க்கும் அசட்டுத் தைரியத்தையும் கொடுத்ததே அவரது வாழ்வில் ஏற்பட்ட வெறுமைதான் எனச் சிந்திக்க வைக்கிறது. எரிந்து முடிந்த தீக்கொழுந்தின் கங்கில் வெறும் அனல் மட்டும் இருப்பதுபோலவே அவரும் தம் வாழ்நாள்களைக் கடத்தி வருகிறார் என்பது புலப்படுகிறது. இரண்டாவதாக வரக்கூடிய இறைச்சி எனப்படுகின்ற கதை வாசித்த மறுகணமே மறுவாசிப்புக்குள்ளாக்கக் கூடிய கதையாகும். கதையின் தொடக்கத்தில் அப்பாவே தனது இறைச்சியைக் கம்பியில் செருகி மாட்டுவது போன்ற ஒரு கொடூரக் கனவு காண்கிறாள் மகள். கதையின் இறுதியைத் தொடுவதற்குள் அக்கனவுக்கான காரணத்தையும் நம்மால் புரிந்துகொள்ள இயலும். தனது உடலை உலகத்தின் பார்வைக்குக் காட்டி வியாபாரம் செய்பவர்கள் மத்தியில் இணையத்தளத்தில் பரவிய தனது படத்திற்காகக் குடும்பத்தின் முன் கூனிக் குறுகி நிற்கின்ற ஓர் இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண்மணியாகச் சித்தரிக்கப்படுகிறாள் கனிஷா. இறைச்சி வெட்டும் கடையில் வேலை செய்யும் அப்பாவிற்கு, எல்லாம் இறைச்சிதானே எனும் புரிதல் ஏற்படுமா என்பது கேள்விக்குறியே என்பதுதான் கனிஷா அடையும் உச்சமான உணர்வென்று கதை முடிகிறது.
வாசிப்பவர் மனதை உலுக்கித் தூக்கியெறியும் வகையிலான கதைகளில் எச்சில் குவளையும் ஒன்று. செயலிழந்த உடலுறுப்போடு வாழ்கின்ற காயத்ரி எனும் பெண்ணைச் சிறுவயதிலிருந்தே கவனித்து வந்த வேணு எனும் இளவயது வாலிபன் பருவமடைந்ததும் அவளையே தன் இச்சையைத் தணிக்கும் கருவியாகப் பயன்படுத்தும் நிலை நிஜத்தில் நடப்பதில்லை என்று நிச்சயம் கூற இயலாது. தனிமையைப் போக்க அவளுடன் பழகிவந்த வேணுவுக்கு அவளைக் குளிப்பாட்டிப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு இடம் அளிக்கப்படுகிறது. இக்கதையை வாசிக்கும் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளை யாரிடம் விட்டுச் செல்கிறார்கள் என்பதனை நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள். நான்காவது கதையாகிய ‘ஓர் அரேபியப் பாடல்’ நமது வாழ்வில் பெரும்பாலோருக்கு நடக்கின்ற ஒரு முக்கியச் சிக்கலையே பேசுகிறது. வேறொன்றுமில்லை, இறந்தகாலத்தில் மாட்டிக்கொள்வது. இக்கதையை வாசிக்கையில் நம்மில் பலர் விரோனிக்காவுடன் ஒன்றிப்போவதை உணர முடியும். கடந்து வர முடியாத காயங்களுள் சிறுபிராயத்தில் பெற்றோர் சண்டைகளைப் பார்ப்பதும் ஒன்று. அவ்வகையில் இக்கதையில் விரோனிக்காவின் தற்போதைய மனநிலைக்கு அவளின் முன்கதை நிச்சயம் நியாயம் சேர்க்கிறது எனலாம்.
காட்டிற்குள் விட்ட தன் மனைவி காடாகிவிட்ட கதையே காளி. தன் போதைப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் விற்பனையைக் கண்டறிந்த மனைவியைக் குரூரவதைக்குட்படுத்தி, அவளைக் காட்டில் தொலைத்த கணவன் அதே காட்டிற்குச் சென்று தன் மனைவியிடமே பித்துப்பிடித்த நிலையில் தன்னை ஒப்புக்கொடுக்கின்றான். இது துயரமும் மர்மமும் கலந்தநிலையில் பயணப்படுகின்ற சிறுகதை. எனினும், இரண்டின் போக்கும் சமமான அளவில் இருப்பதே இச்சிறுகதையின் வியக்கத்தக்க ஒரு கூறு. காளிக்குப் பிறகு வரக்கூடிய சுருட்டு எனும் சிறுகதையில், ஆழமான கடலுக்குள் மேற்பரப்பில் அலையாடுகின்ற நுரைகளைப் போலவே அவர்கள் வீட்டில் உலாவரும் விடிவுகாலமேயற்ற ஒரு துயரத்திற்கு மத்தியில் அலையாடும் சிறு காமம் தெரிகிறது. அந்தச் சிறுவனின் தாய் தனது அக்காளுடைய கணவரின் மீது கொண்டுள்ள ஆசையானது இக்கதையை மேலோட்டமாக வாசிப்பவர்களுக்குப் புலப்பட வாய்ப்பில்லை. அந்தப் பெரியப்பாவினுடைய இருப்பையே காமமாகக் கொள்கிற அந்தத் தாய் தனது மகனைத் தூக்கி வீசிவிட்ட பிறகும் ‘அந்த மனுசனுக்குச் சுருட்டு வாங்கி வா’ என்று கூறும்போது, அந்த வீடு முழுக்கப் பரவுகின்ற சுருட்டு வாடையில் கொஞ்சம் நமது நாசிக்குள்ளும் ஏறுகிறது.
இத்தொகுப்பின் தலைப்பினைத் தாங்கி நிற்கும் ‘தேவதைகளற்ற வீடு’ மாய எதார்த்தத்திற்கும் இயற்கைக்கும் நடுவில் அற்புதமாகப் பயணித்த கதை. தனது தந்தையுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நினைக்கிற மகன் அவர் தேவதைகளைக் காப்பாற்றச் செல்லும் கதைகளைக் கேட்டுச் சலிப்படைந்து, அத்தேவதைகளுள் ஒன்றைக் கொல்ல முயன்று தேவதையாகிறான். பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடாத பெற்றோர்களுக்கு நடக்கின்ற சிக்கல்களில் ஆகக் கொடுமையானது இது. அதனைக் கொடூரமாக எடுத்துரைக்காமல் தனது மொழியாற்றலைப் பயன்படுத்தி வாசிப்பவர்களை இரசிக்க வைக்கும்படி புனைந்துள்ளார் எழுத்தாளர்.
‘நாவலின் முதல் அத்தியாயம்’ – இத்தொகுப்பில் நான் அதிக எதிர்ப்பார்ப்புகளின்றி வாசித்து, இறுதியில் என்னை வியக்க வைத்த கதையாகும். மாய எதார்த்த நிலைகளைத் தாண்டி இக்கதையினுள் கடனாளியின் ஆழ்நிலைத் துயரம் புலப்படுகிறது. வடிவேலு எனப்படும் ஓர் உல்டா எழுத்தாளரின் உன்னதப் படைப்புக்குள் சிக்கித் தவிக்கும் முதன்மைக் கதாப்பாத்திரம் தந்நிலை அறியத் தவிக்கிறார். அவர் நாவலுக்குள் கதவுகளைத் திறந்து திறந்து களைத்துப்போன பிறகு, அவைகளெல்லாம் வெற்றுச் சுவரே என்று உணர்ந்து தனது நிலைப்பாட்டினை உறுதி செய்தபிறகு அச்சிக்கலிலிருந்து எளிதில் விடுபடுவதை உணர்கிறார். கடன் சிக்கல்கள் தொடர்பாக நான் வாசித்த கதைகள் அனைத்தையும் விட இக்கதை மாறுபட்டு வேறொரு தளத்தில் நிற்கிறது.
பாலியல் தொடர்பான கல்வியறிவை மாணவர்களுக்குப் பள்ளியிலேயே புகட்டும் அளவிற்கான சூழல் 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததில்லை. குழந்தைகளை உட்படுத்திய பாலியல் பலாத்காரக் குற்றங்கள் அதிகரித்து, இப்போது அக்கல்விமுறையைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இதனை இலக்கியத்தினூடே பேசுவதற்கு வாய்ப்பளித்தது ‘நீர்ப்பாசி’ எனும் சிறுகதை. அதுமட்டுமின்றி, பாலியல் தொல்லைகள் பெண் குழந்தைகளை நோக்கியே நகர்கின்றன எனும் மேம்போக்கான பார்வையையும் இக்கதை உடைக்க முன்வந்துள்ளது. தனக்கோடி எனும் சிறுவனை அவனது தேவா மாமா எப்படி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார் என்பதுவே இக்கதையின் சாரம். இறுதியில் தேவா மாமாவிற்கும் தனக்கோடிக்கும் எழுத்தாளர் வைத்திருந்த முடிவுகள் வாசகன் ஏற்கும் வகையில் அமைந்திருந்தது இக்கதையின் வலுவினை அதிகரித்துவிட்டிருந்தது.
‘நெருப்பு’ சிறுகதையானது நம்மில் பலரும் வாழாத வாழ்வு. அத்தகைய வாழ்வு நமக்கு வாய்க்காதிருந்ததற்கு நாம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் எனும் உணர்வைக் கொடுக்கவல்லது இச்சிறுகதை. கடை முதலாளியாகிய தவுக்கானின் அடிமைத்துவத்தில் வெந்தபடியே உழலும் தாய் மற்றும் மகனின் துயரம் அன்றைய நாளின் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து இருவரும் மகிழ்ச்சியுடன் அவர்களது இருப்பிடம் நோக்கி நகர்கின்றனர். ஆனால், நாளை காலையும் இவர்களுக்கு இதேபோன்ற வாழ்க்கைதான் அமையப் போகிறது என்பதுவே இக்கதையை மீளாத துயரத்திற்கு இட்டுச் செல்கிறது.
அடுத்து ‘துள்ளல்’ கதையிலோ, எங்கிருந்தோ வந்த ஒரு பாட்டியைத் தெய்வீகப் பிறவியாகப் பார்க்கத் தொடங்கிய கணேசன் அவர்தான் தனது வாழ்க்கையில் திறவுக்கோலாகத் திகழப்போகிறார் என்ற ஒரு மாய கற்பனைக்குள் சிக்கி அவரையே பின்தொடர்கிறான். அந்தப் பாட்டியைச் சிலர் காரில் ஏற்றிச் செல்லவே, நிஜவுலகிற்கு மீண்டும் திரும்பித் தனது தம்பி உறக்கத்திலிருந்து எழுவதற்குள் வீட்டை நோக்கி மீண்டும் ஓடுகிறான். இக்கதை ஏனோ எனக்கு 4D-இல் காசைப் போட்டு நமக்கு என்றாவது ஜாக்பாட் அடித்து ஒரே நாளில் நமது வாழ்க்கை மாறப்போகிறது எனும் மமதையில் வாழும் சிலரை ஞாபகப்படுத்தியது. பாட்டியைப் பார்த்ததும் துள்ளலுடன் எழும் மன எழுச்சியே இச்சிறுகதையின் சாரம். பின்னர், அம்மனவெழுச்சி என்ன ஆகிறது என்பதுதான் சிறுகதையின் யதார்த்த முடிவாகும்.
பேபி குட்டி – தேவதைகளற்ற வீடு எனும் சிறுகதைத் தொகுப்பு ஒரு கிரீடமாக இருந்தால் அதன் நடுவிலிருக்கும் இரத்தினக்கல்லே ‘பேபி குட்டி’. குழந்தையைப் போற்றும் சமூகம் குழந்தைமையைப் போற்றத் தவறுகிறது என்று எழுத்தாளர் ஜெயமோகன் இக்கதையைப் பற்றிய தனது விமர்சனத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இறந்த குழந்தையின்மேல் மக்கள் கொண்ட பரிவு ஒருபுறம் வாசகனை ஆசுவாசப்படுத்தினாலும், இறப்பை எதிர்கொள்ளும் பாட்டியின்மேல் ‘ஏன் இவர் இறந்திருக்கக் கூடாது’ என்ற மக்களின் சிந்தனை வாசகனை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதுவே உலகத்தின் பார்வை எனக் கூறவருகின்ற எழுத்தாளர், கதையின் இறுதியில் வாசகனின் மனத்தில் நீங்கா இடம்பிடிக்கும் வகையில் அக்குழந்தையின் இறப்பையே உணராதவராகச் சித்தரிக்கப்படுகிறார் ‘பேபி குட்டி’.
மலத்தையோ மலக்கூடத்தையோ யாரேனும் போற்றிப் புகழ்பாடுவார்களா? தங்கவேலு என்றும் அவரது 10-ஆம் எண் மலக்கூடத்தை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டார். தனது கம்பத்திற்குள் தன் தந்தைக்குச் சொந்தமான மலக்கூடத்தைப் பாதுகாத்து வாழ்ந்த தங்கவேலுவின் மகன் தற்போது தாத்தாவாகி நகரத்துக் கழிவறையில் ஏறி உட்காரக் கூட முடியாமல் படும் பாட்டில் இக்கதை முடிகிறது. ஆனால், இக்கதை கழிவறைகளின் பரிணாம வளர்ச்சியைக் குறித்த கதை அல்ல. காலங்கள் உருண்டோடித் தன் பால்ய வயதுக்குத் திரும்புகின்ற தாத்தா சுயமரியாதையை இழந்து படும் அவலங்கள் இக்கதையில் நிழலாடுகின்றன.
இறுதியான கதையாகிய ‘மீட்பு’ எனும் கதையும் கடனை மையமாக வைத்து நகர்த்தப்பட்ட கதையே. கோமதியின் குடும்பத்தினர் தன்னிடம் வாங்கிய கடனை நூதன முறையில் மீட்பதாக நினைத்துக்கொண்டு குமார் செய்யும் சூழ்ச்சியே ‘மீட்பு’. இத்தொகுப்பு முழுவதும் வரும் அனைத்து கதைகளிலும் ‘அசூயை’ என்றவொரு வார்த்தையைப் பார்க்கலாம். அது அவ்விடங்களையும், அச்சூழலையும் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையாக இருக்கும். ஆனால், இக்கதையில் வருகின்ற குமார் அசூயையின் முழு உருவமாகத் தென்படுகிறான். மிகவும் யதார்த்தமாக வாழ்க்கை சூரையாடப்படுவதையும் சுரண்டப்படுவதையும் சுரண்டுபவனின் பார்வையிலிருந்து எழுதி சென்றிருப்பதுதான் கதைக்குள் வேறு கோணத்தில் பயணிக்க வழிவிடுகிறது.
ஒவ்வொரு சிறுகதையும் அதனளவில் துயரத்தைக் கடக்கவும் துயரத்தைப் பழகிக் கொள்ளவும் நமக்குப் பயிற்சியளிக்கின்றன. கதைகளுக்குள் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாழ்வையும் வாழ்ந்துவிட்டு வெளிவரும்போது ஏனோ மனத்தில் வெறுமை நீங்கி நிறைவு பெருகுகிறது. துயரமான சிறுகதைகளை வாசித்தால் துயரப்பட வேண்டும் என்றல்லவா சொல்வார்கள்? ஆனால், எழுத்தாளர் அத்துயரங்களின் ஆழங்களுக்குள் நம்மை இழுத்துச் சென்று உருவாக்கும் தரிசனமும் திறப்புகளும் நம்மை மேலெடுத்துச் சென்று ஒரு விடுதலையை அளிப்பதாகவே உணர்கிறேன். துயரத்தைத் துயரமாகவே காட்டிவிடுவதில் கலையின் வெற்றிப்பெறுவதில்லை. அத்துயரத்தைக் கலையாக மாற்றுவதன் நுணுக்கமான புனைவு சாத்தியங்களை எழுத்தாளர் சிறப்பாகவே கையாண்டுள்ளார் எனச் சொல்லலாம். இவை துயரங்களின் கதைகள் அல்ல; துயரங்களைக் கடப்பதன் மீதுள்ள எழுச்சிமிகுந்த தருணங்களின் கதை.
- ம. பிருத்விராஜு