C4 CINTA – திரைவிமர்சனம்: உணர்வுப் போரின் உச்சக்கட்டம்
கார்த்திக் ஷாமளனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மலேசியத் திரைப்படம். நேற்று திரையரங்கத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ‘மெல்லத் திறந்தது கதவு’ என்கிற கார்த்திக்கின் படத்தின் மூலம்தான் அவருக்கும் எனக்குமான பழக்கம் உருவானது. பின்னர், ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது மீண்டும் சந்தித்துக் கொண்டோம். மற்றபடி பலமுறை அவருடைய திரைப்படங்கள், அஸ்ட்ரோ விண்மின் தொடர்களைக் கண்டு இரசித்துள்ளேன். மலேசியத் திரைத்துறையில் இயக்குநர்கள் சஞ்சய் (ஜகாட்), பிரகாஷ் ராஜாராம்(வெண்ணிற இரவுகள்), செந்தில் குமரன் முனியாண்டி (ஜெராந்துட் நினைவுகள்), கார்த்திக் ஷாமளன் (அடைமழை காலம்), விக்னேஷ்வரன் (பூச்சாண்டி) போன்றோர் எனது பார்வையில் மிக முக்கியமான இயக்குநர்கள். ஒருவருக்கொருவர் அவர்களின் படைப்புகளின் ஆழம், விரிவு, கோணங்கள் என்ற வகையில் வெவ்வேறான அணுகுமுறைகள் கொண்டவர்கள். திரைத்துறையில் அவர்கள் கற்ற அனுபவத்தின் வாயிலாக அவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பல படைப்புகள் அவர்களிடமிருந்து தொடர்ந்து வரும்போது தனித்துவங்களைத் தீர்க்கமாகக் கண்டடைய முடியும்.
ஒரு சிலர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். அவ்வகையில் கார்த்திக் ஷாமளன் இளைஞர்களின் நாடித்துடிப்பை முழுவதுமாக அறிந்த ஓர் இயக்குநராக உணர்கிறேன். இக்காலத்தின் திரைத்துறை நாயகன் என்றே இளைஞர்கள் கார்த்திக்கைக் கொண்டாடுகிறார்கள். அதனைத் திரையரங்கில் காண முடிகிறது. ‘கல்யாணம் டூ காதல்’ தொலைகாட்சித் தொடர் கொடுத்த தாக்கம் மிகுதியாகத் தெரிகிறது.
இத்திரைப்படம் நண்பர்களுக்குள் நிகழும் உணர்வுப்போர் என்று சொல்லலாம். திருமணமாகவிருக்கும் இளைஞர்கள் அவர்களுக்குள் ஊடாடும் அதிகாரம், அடக்குமுறை, பிரிவு, தனிமனித சுதந்திரம் குறித்த மனவெழுச்சி, அகங்காரம் போன்றவற்றை சுற்றிக் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. பிரிந்துபோன இருவரை இயற்கை எத்தனை அழகாக மீண்டும் ஒன்றிணைக்கிறது என்பதையொட்டியதுதான் கதை. ஒரு சில திருப்புமுனைகள் கதைக்குள் கச்சிதமாக வெளிப்பட்டிருக்கின்றன. அவை வெளிப்படும் தருணமும் ஆச்சரியமூட்டுபவையாக நிகழ்கின்றன. அந்தக் கணங்களில்தான் கதாபாத்திரத்தின் அழுத்தம் மேலும் கூடுகிறது. பல காட்சிகளின் வரும் நகைச்சுவைகள் இரசிக்கும்படியாக உள்ளது. மிஸ்டர் ‘லோகிக்கலி’ வரும் ஒவ்வொரு காட்சியும் இரசிக்கத் தூண்டுகிறது.
இத்திரைப்படத்தில் சுக்ரன், ரூபிணி, ஹரி, சோனியா, தமிழ், விக்னேஷ், மிஸ்டர் ‘லோஜிக்கலி’ (மோகன் தாஸ்), ஹரினி என இவர்களுக்குள்ளே இந்த உறவு சார்ந்த நாடகவியல் நிகழ்ந்த வண்ணம் நகர்கிறது. அவை ஒன்றோடொன்று மோதி விலகி மீண்டும் ஒரு புள்ளியில் இணைகிறது. அந்த இணைவை இயக்குநர் அழகான காதல், நட்பு, அன்பு கலந்த கலவையாகக் கொடுத்திருக்கிறார். ஹரியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகர், கலைஞர் திரு.கே.எஸ். மணியம் அவர்களின் நடிப்பைப் பாராட்டிதான் ஆக வேண்டும். படத்தில் சில முக்கியமான காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் இதுநாள் வரை திரையுலகில் தாம் சேகரித்துக் கொண்ட பக்குவத்தையும் அனுபவத்தையும் கொண்டு அக்கதாபாத்திரத்தை வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இளைஞன் போல மகனுக்கு நிகராகத் துள்ளல் கொண்ட அப்பா அதே சமயம் தமக்குள் இறுக்கங்களையும் சுமந்து கொண்டு மகன் வாழ்க்கையின்பால் நிதானத்தையும் கடைப்பிடிக்கிறார்.
பின்னணி இசையும் கடைசியில் ஒலிக்கும் ‘காதல் ஒன்னு போகிறதே’ என்கிற பாடலும் இப்படத்தின் பலமாகக் கருதுகிறேன். அப்பாடல் திரையரங்கில் இளைஞர்களின் கைத்தட்டலைப் பெற்று விடுகிறது. அடுத்ததாக, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் கதைக்கேற்ற வகையில் யதார்த்தமாக நடித்துள்ளார்கள். குறிப்பாக, ரூபிணி, சுக்ரன் கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். பார்வையாளர்களின் கவனத்தை மொத்தமாக ஈர்த்துவிடுகிறார்கள். மூன்றாவதாக எங்கேயும் சோர்வுத் தட்டாத திரைக்கதை. தேக்கமில்லாமல் விரைந்து நகர்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தில் இணைந்திருக்கிறோம் என்கிற மனவுணர்வைத் திரைக்கதை உண்டாக்கிவிடுகிறது.
படத்தில் கூடுதலாகக் கவனித்திருக்கலாம் என ஒரு பார்வையாளனாகத் தோன்றியது கதைக்குள் யாரைப் பின்தொடர்ந்து செல்வதென்று தெரியாமல் ஏற்படுகின்ற சிறு தடுமாற்றம். சிறுகதையானாலும் திரைப்படமானாலும் ஏதாவது ஒரு கதாப்பாத்திரத்தைப் பின்தொடர்ந்து அக்கதாபாத்திரதோடு சேர்ந்து அழுவது, சிரிப்பது என வாசகன்/பார்வையாளன் ஒன்றிவிடுவான். இப்படத்தில் நண்பர்களின் குழு திரைக்கதை முழுவதும் கவனம் பெறுகிறார்கள். ஹரியிடமிருந்து கவனம் சட்டென சுக்கிரன் வந்ததும் முழுவதும் அவர் பக்கம் போய்விடுகிறது. பிறகு, ரூபிணியின் பக்கம் குவிந்துவிடுகிறது. அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இயக்குநர் கொடுத்த முக்கியத்துவத்தையும் வாய்ப்பையும் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், ஒரு பார்வையாளனாக எனக்கு உண்டான சிறு பார்வையிது. கதை யாரை மையம் கொள்கிறதோ அவர்களுக்கு இன்னும் கூடுதலாகக் காட்சிகள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. அக்கூடுதல் காட்சிகள்தான் பார்வையாளனையும் கதாபாத்திரங்களையும் மேலும் இணக்கமாக்கும்; தொடர்புப்படுத்தும். அவர்கள் எப்படியாவது சேர வேண்டும் என்கிற தவிப்பு பார்வையாளனுக்கும் ஏற்படும். ஹரிக்கும் சோனியாவிற்கும் காட்சிகள் இன்னும் கூடுதலாக இருந்திருக்கலாம் என்பதுதான் எனது பார்வை.
மலேசியத் தமிழ் சினிமாவின் எதிர்காலம் கார்த்திக் ஷாமளன் போன்ற கலையின் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்களின் மூலமே மேலும் வலுப்படும் என்பதுதான் என் போன்ற பார்வையாளர்களின் நம்பிக்கை. அதற்கு ஒளியூட்டும் வகையில் C4 Cinta மலேசியப் பின்னணிக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. படக்குழுவிற்கும் நடிகர்களுக்கும் இயக்குநருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
குறிப்பு: அனைவரும் திரையரங்கம் சென்று படத்தைப் பார்க்கவும்.
– கே.பாலமுருகன்