குறுங்கதை 3 – நாகம்

“ஸ்கூல் உள்ள பாம்பு நுழைஞ்சிருச்சு…”
குழுவில் பாதுகாவலர் அண்ணன் பகிர்ந்ததும் முதலில் பதறியது நாகேன் தான்.
“ஒன்னும் செஞ்சிராதிங்க… நான் வந்து பிடிச்சிக் காட்டுல விட்டரன்… ஒன்னும் செஞ்சிராதிங்கண்ணே…”
தீயணைப்பு நிலையத்திற்கும் அழைக்க வேண்டாமென மறுத்துவிட்டார்.
நாகேன் சிறுவயதில் ‘பிளாக்காங் ஹோஸ்பிட்டல்’ கம்பத்தில் வளர்ந்தவர். சிறு பலகை வீடு. பக்கத்தில் ஒரு பெரிய புளிய மரம். அம்மரத்திற்கு நூறு மீட்டர் தள்ளி சலவைத் தொழிலாளி வீடு இருந்தது. அவ்வீட்டுக்கு வெளியில் தினமும் காயும் வகை வகையான துணிகள்தான் நாகேன் வீட்டுக்கு ‘வேஸ்’ இல்லாத காலத்தில் பாதை சொல்வதற்கு இலகுவாக இருந்தன.
“அந்தப் பையன் வண்ணாந்த பாம்பு வளர்க்கறான்…” என அந்தக் கம்பத்தில் நாகேனை நெருங்கவே பலர் பயந்தனர். அப்படியொரு வதந்தி பரவியிருந்தது. சில நண்பர்கள் பள்ளி விடுமுறையில் நாகேன் வீட்டை வேவு பார்க்க அடிக்கடி அந்தப் புளிய மரத்தினோரம் ஒளிந்து கவனிப்பதுண்டு.
பள்ளிக்கு வந்ததும் வெள்ளைச் சாக்கொன்றை நாகேன் கையில் பிடித்திருந்தார்.
“சார்! உங்களுக்குப் பயமா இல்லையா?”
மாரிமுத்து அண்ணன் சற்றுத் தயங்கியபடி நின்றிருந்தார்.
“ஒன்னும் இல்ல… நீங்க டோர்ச் அடிச்சிராதிங்க. இங்கயே இருங்க நான் பார்த்துக்கறன்…”
நாகேன், திடலில் ஊர்ந்தவாறு இருந்த பாம்பைப் பார்த்தார். தூரத்திலிருந்து சாலை விளக்கொளியில் அதன் உடம்பு பளபளப்பென மின்னியது.
“டேய்! வண்ணாந்த வரான்… வண்ணாந்த வரான்…”
வகுப்பில்கூட நாகேன் சுற்றி பின்னப்பட்டிருந்த அந்தப் புனைப்பெயர் அவரை விட்டு நீங்கவில்லை. அவர் வளர வளர அந்தப் பெயர் பல வகையில் திரிந்து அவரோடு வளர்ந்தது. இப்பொழுது யாராவது ‘ஸ்னேக் பாபு!’ என்று கேலியாகச் சொல்லும்போது நாகேன் கொந்தளித்துவிடுவார். அது பாம்புகளை அவமதிப்பதாக அவர் நினைத்தார்.
அவர் எங்குச் சென்றாலும் எங்குப் புழங்கினாலும் அங்கு எப்படியாவது பாம்புகள் வந்துவிடுவதாகவும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். சிறுவயதில் வீட்டில் ஒரு வாரம் நாகேன் பாம்புடன் தங்கியிருந்ததாகச் சொல்லப்பட்ட கதைதான் அவரையும் பாம்பையும் இணைத்துப் பேசுவதற்குக் காரணமாகியிருந்தது.
அரை மணி நேரம் ஆகியும் நாகேன் வரவில்லை.
தலைமை ஆசிரியர் செய்தி கேள்விப்பட்டு மாரிமுத்து அண்ணனுக்கு அழைத்தார். நாகேன் மட்டும் வந்திருப்பதைக் கேட்டதும் பதறிவிட்டார்.
“எனக்கு முதல்ல நீங்க அழைச்சிருக்கணும்… என்ன வேலை பாக்கறிங்க? அவரு என்ன ‘போம்பாவா’? அவரை அனுப்பி வச்சிருக்கிங்க… ஏதாச்சம் ஆச்சின்னா யாரு பதில் சொல்லுவா? போய் உடனே பாருங்க…”
தலைமையாசிரியரின் குரல் கோபத்தின் உச்சத்தில் இருந்தது.
மாரிமுத்து அண்ணன் தயங்கியபடி பாம்பு ஊர்ந்து சென்ற இடத்திற்கு விரைந்தார். நாகேன் சொன்னதை மீறி அவர் கைவிளக்கைத் திடலில் பாய்ச்சினார். முதலில் இருந்ததைக் காட்டிலும் பெருத்த உடலுடன் அந்தப் பாம்பு சற்று வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தது.
“சார்! சார்!… எங்க சார் இருக்கிங்க?”
சட்டென அந்த வெண்ணாந்தைத் தலையைத் தூக்கி அவரைப் பார்த்தது. அதன் சீறியபடியிருந்த அதன் இரு தலைகள் விளக்கொளியில் ஆக்ரோஷமாகத் தெரிந்தன.
கே.பாலமுருகன்
![]()