2025லிருந்து புறப்பாடு – 2026க்குத் தரையிறங்கு
![]()
வருடத்தின் துவக்கத்தில் கடந்து வந்த ஆண்டின் நினைவலைகளை மீட்டெடுத்துப் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அதுதான் மனத்தில் சிறு உற்சாகத்தையும் தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தையும் வழங்குகிறது. நம்மை நாமே தொகுத்துக் கொள்ளவும் சீர்செய்து கொள்ளவும் இக்கட்டுரை அவசியமானதாகவும் தோன்றுகிறது.
2025
வழக்கம்போல பல அனுபவங்களை அள்ளி இறைத்து அன்பாலும் அழுத்தத்தாலும் அலைக்கழிப்பினாலும் ஆறுதல்களாலும் கருணையாலும் துரோகத்தாலும் இடறுகளாலும் நிறைவாலும் அழுத்தி முழ்கடித்து ‘புரியுதா? புரியுதா?’ என முக்கியெடுத்த ஆண்டு. ஒவ்வொரு ஆண்டின் நிறைவும் அடுத்த பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ஒருமுறை கையசத்தல் செய்வதற்குக் கடந்து வந்ததைத் திரும்பிப் பார்க்கத் தூண்டுகிறது.
இலக்கியம்/ வாசிப்பு
2025ஆம் ஆண்டு என்னைப் பொருத்தவரையில் என் இலக்கிய வெளியில் சிறு வண்ணங்களைப் பூசி மகிழ்ந்த ஆண்டாகவே கருதுகிறேன். எந்த உயிராக இருந்தாலும் அவை சிறு அங்கீகாரத்திற்காகவும் ஒரு நல்ல மேடைக்காகவும் அதில் உண்டாகும் சிறு உற்சாகத்திற்காகவும் ஏங்கக்கூடியதுதான். அவை தன்னகங்காரத்தை வளர்க்கக்கூடியதல்ல; மாற்றாக தன்னம்பிக்கையை உண்டாக்கக்கூடியவை. நவீன இலக்கியச் சூழலில் இந்தத் தன்னம்பிக்கை, உத்வேகம் போன்ற வார்த்தைகளெல்லாம் ஏதோ நமக்கு விரோதமானவை என்பது போலவே நினைக்கப் பழகிவிட்டோமோ எனத் தோன்றுகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் எனக்குத் தன்னம்பிக்கையும் மன உத்வேகமும் அவசியம்தான். இடையிடையே தோன்றிய மனச்சலனங்கள், வேலை சார்ந்த அழுத்தங்கள், விவாதங்கள் வாசிக்க விடாமல் செய்ததுண்டு. என்றாலும் ஒரு சில இலக்கிய நூல்களை வாசித்த நிறைவும் நிறைய இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுத்த நிறைவும் 2025ஆம் ஆண்டை அர்த்தமுள்ளாக்கியுள்ளன.
கடந்தாண்டின் தொடக்கத்தில் நான் வாசித்த பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ படைப்பு அந்நாவலிலிருந்து உருவான படத்தைவிட அடர்த்தியான வாசிப்பனுபவத்தை உருவாக்கியது எனலாம். அதன் பின்னர் பாரதி புத்தகலாயம் வெளியிட்ட ஏறக்குறைய இருபது சிறார் நூல்கள் வாசித்தேன். அவற்றை எனக்குப் பரிசளித்த தோழர் புது எழுத்து மனோன்மணி அவ்ர்களுக்கு என் அன்பு. இடையிடையே சில கவிதைகள், சிறுகதைகளை இணைய இதழ்களில் வாசித்தேன். குறிப்பாக, வேரல் இதழில் எழுதுவதற்காக அம்பிகா குமரனின் ‘நிலம் வீடு திரும்பிவிட்டது’ நல்லதொரு கவிதை வாசிப்பனுபவத்தை உருவாக்கியது. சொற்களால் வாசிப்பு அடர்ந்து நெருக்கும்போது கவிதை வாசிப்பு மனத்தை இலகுவாக்கிவிடும். கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ போட்டியில் தேர்வான ஹைக்கூ கவிதைகளைக் கொண்ட மூன்று நூல்களை வாசித்தேன். மு.முருகேஷ் எழுதிய ‘எனக்கு ஹைக்கூ பிடிக்காது’ என்கிற கட்டுரை நூல் வாசித்தேன். பிருந்தா சாரதி, ந.முத்துகுமார் ஆகியோரின் இரு ஹைக்கூ நூல்கள் வாசித்தேன். எஸ்.ரா எழுதிய ‘சிரிக்கும் வகுப்பறை’ சிறார் நாவல் வாசித்தேன். குட்டி இளவரசன் சிறார் நாவலை மறுவாசிப்பு செய்தேன். இப்படியாக இலக்கிய வாசிப்பு நின்றும் தொடர்ந்தும் வளர்ந்தும் வந்தன. ஆயினும், தீவிர இலக்கிய வகைமைகளை அதிகம் தேடி வாசிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வாண்டு அதனைச் சீர்செய்து கொள்ள வேண்டும்.

நூல்கள்
2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் மௌவல் பதிப்பகம் எனது ‘பசித்திருக்கும் பேய்கள்’ எனும் குறுங்கதை தொகுப்பை வெளியீட்டது. 35 குறுங்கதைகள் அடங்கிய புத்தகம். ஜூன் மாதம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. அடுத்து, ஜூன் மாதம் எனது முதல் ஹைக்கூ நூல் நூலேணி பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டது. ‘ஆங்லர் மீன்களும் புத்தரின் புன்னகையும்’ என்கிற ஹைக்கூ நூல் எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா மூலம் பிரசுரம் பெற்றது. ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் முன்னுரை எழுதியிருந்தார். பின்னர், இரு ஆண்டுகள் எழுதி முடிக்க முடியாமல் இருந்த எனது ‘தலேஜு’ நாவல் வேரல் பதிப்பகம் மூலம் நூல் வடிவம் பெற்றதோடு சென்னையில் படைப்பு அரங்கத்தில் சிறப்பாகவும் வெளியீடு கண்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த அக்டோபர் மாதம் எனது ‘பெரிய காது சிறுவன்’ என்கிற சிறுவர் நாவல் சுடர் பதிப்பகம் மூலம் வெளியீடு கண்டது. துவான்கு பைனுன் ஆசிரியர் கல்விக் கழகத்தில் இச்சிறார் நூல் அறிமுகம் கண்டது. ஆகவே, இவ்வாண்டு இந்த நான்கு நூல்களும் எனக்கு நிறைவளித்தன. குறிப்பாக, தலேஜு நாவல் என்னைத் தமிழகம் முழுவதும் மூன்று இடங்களுக்குக் கொண்டு சென்றது. இன்னும் மலேசியாவில் குறைந்தது இரு இடங்களில் வெளியீடு செய்ய வேண்டும் என்கிற திட்டமுண்டு.
இலக்கிய செயல்பாடுகள்
இவ்வாண்டு ஆறாம் முறையாக சிறுவர்களுக்கான சிறார் இலக்கிய விழா உப்சி பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடந்தேறியது. திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் தலைமையில் உப்சி பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றத்தின் இணை ஆதரவுடன் மாணவர்களும் உள்ளூர் எழுத்தாளர்களும் சிறார் இலக்கிய விழாவில் கலந்து கொண்டனர். இம்முறை மலேசியாவில் வெளிவந்த அனைத்து சிறார் நாவல்களும் நூலாய்வு செய்யப்பட்டன. அதற்குரிய அரங்கில் மொத்தம் எட்டுப் பேர் கலந்து கொண்டு தங்களின் நூல் விமர்சனத்தை முன்வைத்தனர். இம்முறை ‘பி.எம் மூர்த்தி படைப்பிலக்கிய விருது’ என்கிற அங்கத்தைச் சேர்த்துப் புதிதாக அறிமுகம் செய்தோம். இனி ஒவ்வொரு வருடமும் சிறார் இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்பு செய்யும் படைப்பாளர்களுக்குத் தொடர்ந்து ‘பி.எம் மூர்த்தி படைப்பிலக்கிய விருது’ ரொக்கப் பணமும் கேடயமும் சான்றிதழும் கொடுத்துக் கௌரவிக்கப்படும். மேலும், அதே அரங்கில் அவர்களின் சிறார் இலக்கிய செயல்பாடுகளும் நூல்களும் ஆய்வுச் செய்யப்பட்டு உரையாடவும் களம் அமைக்கப்படும். இவ்வாண்டு விச்சு மாமா என்கிற விஸ்வநாதன் அவர்களின் சிறார் இலக்கியப் பணியைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. மேலும், அவருடைய ‘முதல் பயணம்’ என்கிற சிறார் நாவலும் ஆய்வுச் செய்யப்பட்டது.
அதே போல கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட மலேசியா பாஷோ ஹைக்கூ தேடல் குழு செப்டம்பர் மாதம் கலந்துரையாடல் களமாக விரிவடைந்தது. மு.முருகேஷ், கன்னிக்கோவில் ராஜா, தமிழ்நெஞ்சன், சீனு தமிழ்மணி, ந.பச்சைபாலன் என மொத்தம் ஐந்து ஹைக்கூ வகுப்புகள் இயங்கலை வழி நடத்தப்பட்டன. அதன் வழியாக ஹைக்கூ எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது.
மேலும், மலேசியாவில் நடந்த சில இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்ற வாய்ப்புக் கிட்டியது. குறிப்பாக, மாணிக்கவாசகப் புத்தகப் பரிசு போட்டிக்கு நடுவராகச் செயல்பட்டேன். மலேசியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த 15 நாவல்களை வாசிக்க வாய்ப்புண்டானது.
விருதுகள்
இவ்வாண்டு எனக்களிக்கப்பட்ட மூன்று விருதுகள் மிக முக்கியமானதாகவே கருதுகிறேன். அவை ஊக்கப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்தது. முதலாவதாக எஸ்.பி சரவணன் அண்ணன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளும் விமர்சகன் விருதுகள் கவனித்தக்கவை. ஆறாம் ஆண்டாக இவ்வருடம் எனது சிறார் இலக்கியப் படைப்புகளைப் பாராட்டும் விதமாக விருது வழங்கப்பட்டது. வெறுமனே விருது வழங்காமல் எனது படைப்புகள், செயல்பாடுகள் பற்றி ஆசிரியைத் தோழி சரஸ்வதி அவர்கள் அறிமுகம் செய்தார்.
அடுத்ததாக, ஜூன் மாதம் நடந்த சிறார் இலக்கிய விழாவில் திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் இலக்கியகம் சார்பில் ‘பாஷோ ஹைக்கூ’ விருது கொடுத்துச் சிறப்பித்தார். நான் சற்றும் எதிர்பாராத விருது அது. கவிஞன் எனச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்பொழுதும் தயக்கம் உண்டு; தவிர்த்தும் விடுவேன். கவிதை எழுதுவது எப்பொழுதும் சற்றே தடுமாற்றத்திற்குரியதாகும். எனது சமீபத்திய ஹைக்கூ முயற்சிகளைப் பாராடும்விதமாக திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் அவ்விருதினை எனக்களித்தார். அவர் மூலம் கிடைப்பதை நான் பெருமையாகவே கருதினேன். இயக்கச் செயல்பாடுகளுக்கு உடன் ரி.ம 500.00 வழங்கினார். அத்தொகையானது ஹைக்கூ போட்டிக்கான பரிசுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
தொடர்ந்து இவ்வருடத்தின் மூன்றாவது விருது நான் சற்றும் எதிர்பாராதபோது அதுவே வந்து சேர்ந்த அங்கீகாரமாகும். சிறந்த எழுத்தாளருக்கான நம்பிக்கை விருது, நம்பிக்கை இதழ் நடத்திய நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் அளிக்கப்பட்டது. முனைவர் குமரன், டத்தோ தெய்வீகன், திரு.பெ.ராஜேந்திரன் என இலக்கியத்திற்கெனத் தனி நடுவர் குழு அமைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டு வழங்கப்படும் இவ்விருது இவ்வாண்டு எனக்களிக்கப்பட்டதை மிகவும் நிறைவாக உணர்கிறேன். தொடர்ந்து நகர்ந்து செல்ல ஊக்கமாக அமைந்தது.
அடுத்ததாக, ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 50 ஹைக்கூ கவிதைகளில் எனது ஹைக்கூவும் தெரிவாகி புத்தகத்தில் இடம்பெற்றது கூடுதல் மகிழ்ச்சியாக அமைந்தது. அவ்விழாவிற்காகத் தமிழகம் சென்றிருந்தேன். சிறு சிறு அதிருப்திகள் இருந்தன. ஆயினும், பல சிறந்த ஹைக்கூ கவிஞர்களைச் சந்தித்ததில் நிறைவாக இருந்தது.
இனி 2026…
இவ்வருடம் வாசிப்பில் கவனம் செலுத்தலாமென நினைக்கிறேன். வாசிக்காமல் விடுபட்ட முக்கியமான நூல்களை வாசிக்க வேண்டும். அதே போல வருடாந்தரமாக நடத்தும் சிறுவர் இலக்கிய விழாவை இம்முறை ‘சிறார் குறுநாவல் போட்டி’ மூலம் புதிய முகமாக அறிமுகப்படுத்தலாம் என நினைத்துள்ளேன். அதற்குரிய வாய்ப்புகளும் களமும் உருவாகும் என நம்புகிறேன். அதே போல சிறுவர்களை நூல் பார்வை வழங்க பயிற்றுவிக்கும் அரங்குகளை முன்னெடுக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். இரசனை வாசிப்பைத் தூண்டுவதன் மூலம் சிறார்களின் அகத்தை இலக்கியம் சார்ந்து வடிவமைக்க முடியும். மேலும், இவ்வருடம் இன்னொரு சிறுவர் நாவல் (எட்டாவது) எழுதி வெளியிட வேண்டும். தொடர்ந்து, இவ்வாண்டு சிறுகதைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என எண்ணியுள்ளேன். 2025 மிகச் சொற்பமாக மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளேன். குறிப்பாக, மாதாவின் செவி எனக்கு முக்கியமான சிறுகதையாகத் தோன்றியது. அதனையே அடுத்த சிறுகதை நூலுக்கான தலைப்பாகவும் நினைத்துப் பார்க்கிறேன்.
பயணம்
அடுத்து, நேபாளுக்கு இவ்வருடம் பயணம் மேற்கொள்ள வேண்டும் என மனம் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து, மலேசியாவிலுள்ள சில மலைகளை ஏறுவதோடு முடிந்தால் வருட இறுதியில் கினாபாலு மலைக்கும் சென்று அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறேன். எழுத்தாளர்களுக்குப் பயணம் மிகவும் அவசியம். அதுவும் தனிமையில் நாம் மேற்கொள்ளும் பயணம் பல சந்தர்ப்பங்களில் மனத்தை அகலப்படுத்தும்.
அப்பயணங்கள் தரவிருக்கும் ஆச்சரியங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
- கே.பாலமுருகன்
![]()