தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் போட்டி 2025 – ‘நாவல்கள் பற்றிய ஒரு பொதுவான வாசகப் பார்வை’
இரண்டாவது முறையாக தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நாவல் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியாவில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் நாவல்களை ஒன்றுசேர்த்து வாசிப்பதும் மதிப்பிடுவதும் இப்போட்டியின் வாயிலாக எனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் என்னை அணுகிய போட்டியின் ஒருஙகிணைப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.

யாரிடமிருந்தும் எவ்விதக் குறுக்கீடல்களும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படவும் நாவல்களைக் கறாராக மதிப்பீடு செய்யவும் இப்போட்டி வழிவிட்டது. முழுவதும் நடுவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. இப்போட்டி நடுநிலையுடன் வழிநடத்தப்பட்டது. சிலசமயம் இணைந்து பணியாற்றும் நடுவர்களுடன் இலக்கிய இரசனை, நாவல் வாசிப்புப் பின்னணி, ஆய்வு அனுபவம், புனைவு அனுபவம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட விவாதங்களின் மூலம் நேர்ச்செய்ய இயன்றது.
மூன்று நடுவர்களும் விவாதங்களில் ஈடுபட்டு வந்திருந்த நாவல்களை மட்டும் அவற்றுக்குள் ஒப்பீடு செய்து அதன் தன்மைகளை ஆராய்ந்து பேசி முடிவெடுக்கும் வாய்ப்பை உருவாக்க முடிந்தது. அதன்வழி நாவலுக்குரிய வெவ்வேறு மதிப்பீடுகள் வாயிலாக முன்னெழுந்து வரும் நாவல்களை வரிசைப்படுத்தி ஆய்வு நோக்கோடு அணுகி, அவற்றின் புனைவு மதிப்பையும் கருத்தில் கொண்டு பரிசுக்குரிய நாவல்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. அதே காலக்கட்டத்தில் இதைவிட நல்ல நாவல்கள் மலேசியாவில் வந்திருக்கக்கூடும். ஆனால், போட்டிக்கு அனுப்பப்பட்டதை மட்டுமே வாசித்து மதிப்பீடு செய்து அதனுள் ஓப்பிட்டளவில் பரிசுக்குரியதைத் தெரிவு செய்யும் பொறுப்பு மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. என்னுடன் பணியாற்றிய தலைமை நடுவர் ஐயா முனைவர் சேகரன், முனைவர் வீரமோகன் ஆகியோருக்கு நன்றி.

நாவல் கலை என்பது வாழ்க்கையின் பெருங்கதையாடலைத் தத்துவப் பின்னணியோடு மொழியின் வாயிலாக நிகழ்த்திப் பார்க்கும் வல்லமை கொண்ட கலை வடிவம். நிலம், மனிதர்கள், காலம் எனும் பெருவெளியின் வழியாக வாழ்க்கையின் மிகப் பெரிய காலக்கட்டத்தைத் தமக்குள் கொண்டு நிறைவையும் விரிவையும் நோக்கி நகரக்கூடியத் தன்மைகள் உடையது நாவல். அதனால்தான் மனிதர்களும் காலமும் நிலமும் சிறுகதையில் அளவாகவும் நாவலில் விரிவாகவும் புனையப்படும். அவ்வகையில் ஒரு நாவல் வாழ்க்கையின் முரண்களையும் ஆழங்களையும் விழுமியங்களையும் அணுகி அவற்றை விவாதித்து மானுட உச்சங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய அபாரச் சக்தியுடையவை. அவ்வகை நாவல் புனைவதற்குரிய ஆற்றலுடனும் புரிதலுடன் எழுத்தாளர்கள் அவ்வடிவத்தை அணுகுகிறார்களா என்பதே இன்றைய பார்வையின் மிக முக்கியமான விமர்சன மதிப்பீடாகிறது.
போட்டி நாவல்கள் கவனப்படுத்த வேண்டியவை
தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நாவல் போட்டிக்கு வந்திருந்த 14 நாவல்களும் பெருமளவில், நாவல் கலை வடிவத்தின் கலை அமைதியையும் நாவலுக்குரிய புரிதல்களையும் கவனப்படுத்தி அணுகப்படவில்லை என்பதைச் சற்றே கவனிக்க வேண்டியவையாக முன்வைக்கிறேன். சமூகத்தின் சிக்கல்களை ஒரே கோணத்திலிருந்து நோக்கும் ‘பார்வை சுருக்கம்’ நாவலுக்குள் இடம்பெற வேண்டிய அம்சங்கள் அல்ல. ஆசிரியர் சமூகப்பிரச்சனைகளைக் கண்டு கொந்தளிக்கும் மனோபாவங்களே பெரும்பாலான நாவல்களுக்குள் அடிப்படை சரடுகளாக எஞ்சி நிற்கின்றன. வாழ்வியல் சிக்கல்களைப் பற்றிய புகார் தொனியுடன் மட்டுமே ஒரு நாவல் நின்றுவிடக்கூடாது. அதே சமயம் அவற்றுக்குத் தீர்வு சொல்வதும் நாவல் என்கிற கலை வடிவத்தின் நோக்கம் கிடையாது.

இலக்கியம் என்பது தமது அனைத்து வடிவங்களின் வழியாகவும் வாழ்க்கையை நிகழ்த்துவதன் மூலம் அதனுள் வாசகனைப் பங்கேற்க வழிவிடுகின்றன. அவ்வாய்ப்பின்வழி வாசகன் இலக்கியத்தைத் தனக்குள் நிகழ விடுகின்றான். அதன் மூலம் வாசகன் நாவலிடமிருந்து தனக்கான அனுபவத்தை உருவாக்கிக் கொள்கிறான். இதுவே இலக்கியமும் வாசகனும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி. ஒரு படைப்பு வாசகனுக்காக உருவாக்கும் இடைவெளி. அதனுள் இலக்கியம் தமக்கான அனைத்து சாத்தியங்களையும் நிகழ்த்த முனைகிறது. எழுதியவனே நினைத்திராத ஒரு கோணத்தை அவ்விடைவெளியின் வழியாக வாசகன் உருவாக்கிக் காட்டக்கூடும்.
போட்டியில் பங்கெடுத்த பெரும்பாலான நாவல்கள் வாசகனுக்கான அந்த வாசக இடைவெளியை உருவாக்கத் தவறியுள்ளதைப் பல இடங்களில் கண்டடைய முடிகிறது. அவ்விடங்கள் வெறுமனே கூறுவதை மட்டுமே செய்கிறது. இன்னாருடைய வாழ்க்கையில் இன்ன சம்பவங்கள் இவ்வாறு நடந்துள்ளன என்பதைப் பரிதவிக்கும் மனநிலையோடு ஒப்புவிக்கின்றன. அவை வாசகனுக்குள் தாக்கங்களை நிகழ்த்தாமல் வெறுமனே அதிர்ச்சியை மட்டுமே உருவாக்குகின்றன.
போட்டிக்கு வந்த நாவல்கள் ஒரு மையக் கதாநாயகனையொட்டி நிகழும் சிக்கல்கள் மேலும் அவை கொடுக்கும் அபாயங்கள் பின்னர் அதிலிருந்து தப்பிக்கக் கதாநாயகன் மேற்கொள்ளும் சாகசங்கள் என்கிற அடிப்படையிலேயே முடிந்துவிடுகின்றன. அவை வாழ்க்கையை விவாதித்துச் செல்லும் போக்கைக் கொண்டிருக்கவில்லை. வாழ்வின் யதார்த்தங்களும் அதனுள் செயல்படும் விதிகளும் அவற்றை மானுடம் எதிர்க்கொள்ளும் முறைகளும் எனப் பல கோணங்களில் வாழ்க்கையை விவாதிக்கும் போக்கு நாவல்களுள் இடம்பெறவில்லை. இதனாலே பெரும்பாலான நாவல் விரிவடையாமல் நீர்த்துவிடுகின்றன. ஒரு சிக்கல் அதனை நோக்கிய தீர்வு எனத் தட்டையாக முடிந்துவிடுகின்றன. இதனால், நாவல் வாசகனுக்குள் விரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகளை இழந்துவிடுகின்றன. இவற்றிலிருந்து விதிவிலக்காக ‘அமாவாசை காணாத அழகு நிலாக்கள்’ என்கிற நாவல் இடம்பெற்றுள்ளது. அதன் பல இடங்களை ஆசிரியன் கதைச்சொல்லி நிறைக்காமல் வாசகனுக்குரிய இடைவெளியாக மௌனத்துடன் மிகவும் நுட்பமாக விட்டுள்ளார். ஆயினும், இன்னும் விரிவாக எழுத முடிந்திருக்கக்கூடிய இந்நாவல் ஒரு குறுநாவலுக்குரிய அம்சங்களுடன் சுருங்கிவிடுவதையும் வலியுறுத்த விளைகிறேன்.
அடுத்ததாக, ஒரே மாதிரியான கருப்பொருள்களே அதிகம் கையாளப்பட்டிருந்தன. இதுவரை கையாளப்படாத கருப்பொருள் என்றால் ஒரு சில நாவல்களை மட்டுமே குறிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக, ‘அமாவாசை காணாத அழகு நிலாக்கள்’ இதுவரை தோட்டப்புற நாவல்களில் பரவலாகக் கையாளப்படாத கரும்பு தோட்டக் குடியமர்வைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அடுத்து, தோட்டப்புறக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த கள்ளுக்கடை போராட்டத்தைப் பற்றி சஞ்சீவினி நாவல் தொட்டுச் சென்றுள்ளது. மற்றவை பெரும்பாலும் தோட்டப்புறச் சமூக அவலங்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் மனமுறிவுகள், காதலால் உருவாகும் பிளவுகள், கொலை, சமூகச் சிக்கல்கள் என்பதே கதைப்பொருள்களாக உள்ளன. இன்னும் நாவலுக்குள் கையாளப்பட வேண்டிய மலேசிய வாழ்வியல் நிறைய உள்ளன என்பதை இவ்வேளையில் நாவலாசிரியர்களுக்கு வலியுறுத்துகின்றேன். சமூக அவலங்கள் அனைத்தையும் ஒரே நாவலில் அடுக்கடுக்காய்ச் சொல்லிவிடுவதன் மூலம் ஒரு முழுமையான படைப்பை வழங்கிவிட முடியும் என்பது தவறான புரிதலாகும். நாவலாசிரியனின் கவனம் வாழ்வின் பெருங்கணங்களை நோக்கியதாக இருப்பது அவசியமாகும். அகமும் புறமுமாய் அந்நாவல் காலத்தையும் மனிதர்களையும் வாழ்க்கைப் பரப்பையும் அணைத்துச் செல்ல வேண்டும். போதைப்பொருள், மது அருந்துதல், பெண்களைச் சீண்டுதல் என அனைத்து சமூகச் சிக்கல்களையும் குற்றச் செயல்களையும் கவனப்படுத்தி செயற்கையாகக் காட்சிகளை உருவாக்கினால் அப்படைப்பு நாவலுக்குரிய நுட்பமான கலையம்சங்களை இழந்துவிடும். வெறுமனே புகார் கூறுதலை மையப்படுத்துவது அல்லது புகார்களையும் அதன் விளைவுகளையும் மட்டும் ஒப்புவிப்பது நாவல் கலை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த நினைக்கிறேன். இவ்வகையில் போட்டிக்கு வந்த சில நாவல்கள் கனத்தை இழந்தன.

நவீன சமூகத்தின் அகம் சார்ந்த சிக்கலைக் கையாண்டதில் ‘காதலின் பொன்வீதியில்’ முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொரு அத்தியாயமும் கவிதையுடன் தொடங்கியது நல்ல உத்தியாக இருந்தாலும் அக்கவிதைகள் நாவலோட்டத்திற்குத் துணைச்செய்யவில்லை அல்லது அழுத்தம் தரவில்லை என்றே தோன்றியது. மேலும், மொழியில் கூடுதலாகக் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் தேய்வழக்கான உவமைகள், சொல்லாடல்கள் கையாளப்பட்டிருந்தது சிறு தொய்வை உண்டாக்கியது. தேர்ந்தெடுத்த கதைக்கருவின்வழி நாவலாசிரியர் உருவாக்கிய நாவலுக்கான தளங்களும் அவை கொண்டு செல்லப்பட்ட விதமும் இந்நாவலைப் பரிசுக்குரியதாக மாற்றியது.
அடுத்து, கதாபாத்திர வடிவமைப்பில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஒரே மாதிரி சமூகக் குற்றங்களைப் பார்த்துப் பரிதவிக்கும் மனநிலை கொண்டவர்களாகவும் அல்லது தியாகத்தின் உச்ச நாயகர்களாகவும் இருக்கிறார்கள். ‘ஈர மனங்கள்’, ‘அமாவாசை காணாத அழகு நிலாக்கள்’ போன்ற நாவல்களில் மட்டும் முரண் கதாபாத்திரங்களின் நடமாட்டமும் பாத்திரப்படைப்பும் வாசக மனத்தின் நிம்மதியை இழக்கச் செய்துவிடுகின்றன. இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என ஆவேசப்பட வைக்கின்றன. பாத்திரப்படைப்பில் நாவலாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பன்முகத்தன்மை நிறைய உள்ளன. ஒரு கதாபாத்திரத்தின் வருகையையும் பிரவேசத்தையும் கண்டு வாசகன் பதற்றப்படுகிறான் அல்லது அப்பாத்திரத்தை ஆழ்ந்து பின்தொடர்கிறான் என்றால் அதுதான் பாத்திரப் படைப்பின் வெற்றி. நாவலில் வரும் அனைவரும் நல்லவர்களாக இருந்துவிட்டால் பிறகு எதற்கு நாவல் கலை? முரண்கள்தான் கலையை நகர்த்தும் என்பார்கள். அவ்வகை முரண் கதாபாத்திரங்களைத் தகுந்த நியாயங்களுடன் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குவதில் அமாவாசை காணாத அழகு நிலாக்கள், ஈர மனங்கள் போன்ற நாவல்கள் கவனம் செலுத்தியுள்ளன. ஈர மனங்கள் நாவலில் வரும் சின்னராசு கதாபாத்திரம் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் நுட்பமானவை. சிறுக சிறுக வாசகன் மனத்தில் கட்டமைக்கப்படும் அக்கதாபாத்திரம் நாவலின் முடிவில் பெருமளவில் எழுந்து நின்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாவல் முழுவதும் சின்னராசுவைப் பின்தொடர்ந்து செல்வதற்குரிய கதையோட்டம் மிகவும் இலகுவாகவும் கூர்மையாகவும் எழுதப்பட்டிருந்தன.

அதே போல, ‘அமாவாசை காணாத அழகு நிலாக்கள்’ நாவலில் இடம்பெறும் அலமு, சங்கிலி, மணியன் போன்ற கதாப்பாத்திரங்கள் நாவலில் அழுத்தமான பங்களிப்பை வழங்கும் வகையில் படைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மூவருக்குள்ளும் நிகழும் அக யுத்தம் அக்கதாபாத்திரங்களை மேலெடுத்துச் சென்றது. அதுவும் சங்கிலி என்கிற பாத்திரப்படைப்பு மிகவும் கவனத்துடன் நாவல் நெடுக ஓர் ஈர்ப்பு விசையை உருவாக்கும் வகையில் படைக்கப்பட்டிருந்தது. மற்ற நாவல்களில் கதாபாத்திரங்கள் மனத்தில் நிலைக்கொள்ளத் தவறியிருந்தன. அதுவே தவிர்க்க வேண்டிய குறைப்பாடாகக் கருதுகிறேன்.
அடுத்ததாக, நாவலுக்குரிய மொழி நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும். இலக்கியத்தின் கச்சாப்பொருள் மொழிதான். அந்த மொழியின் வழியாகத்தான் இலக்கியம் கூர்மை பெறுகிறது. சில நாவல்களில் அதற்குத் தடையேற்படுத்தும் வகையில் நிறைய விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. நாவல் ஒரு புனைவொழுக்கில் போய்க்கொண்டிருக்கும்போது அதற்கு speed breaker போல தகவல் விளக்கங்கள் அல்லது ஆசிரியரின் விளக்கக் குறுக்கீடு மொழியில் பலவீனத்தை உண்டாக்குகிறது. சட்டென, வாசகன் நாவலிலிருந்து நழுவி நாவலாசிரியனின் விளக்க உரையில் சிக்கிக் கொள்கிறான். இந்தத் தாவுதல் நாவல் வாசிப்பிற்குப் பெரும் தடையாகிவிடுகிறது. அவற்றிலிருந்து விலகி முழு நாவலையும் நல்ல புனைவு மொழியில் கொண்டு சென்ற நாவல்களாக, ‘ஈர மனங்கள்’, ‘அமாவாசை காணாத அழகு நிலாக்கள்’ போன்ற நாவல்களைக் குறிப்பிடலாம். ‘சஞ்சீவினி’, ‘காதலின் பொன்வீதியில்’ போன்ற நாவல்களும் நல்ல புனைவுக்கான மொழியில் எழுதப்பட்டிருந்தன.
நாவலில் தகவல்களைக் கையாள்வது தவறு கிடையாது. ஆனால், அதனை மொழியின் துணைக்கொண்டு நிறுவும்போது நாவலாசிரியன் தமது குரலும் விளக்கும்/விவரிக்கும் தனமும் மேலெந்து வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதனை ஆசிரியர் வகுப்பில் மாணவர்களிடம் விரிவுரைப்பது எனக் கொள்ளலாம். அவ்வகையானது நாவலுக்கு உகந்த படைப்பிலக்கியத்தன்மை கிடையாது. அவ்வகை விளக்க மொழி நாவலின் நெகிழ்வுகளைச் சுற்றி இறுக்கிவிடும்.
நாவல் கலை காலத்தையும் நிலத்தையும் மனிதர்களையும் உள்ளடக்கிய ஆழமும் விரிவும் கொண்டது. அதனை முழுமையாகப் பயன்படுத்த முனையும் பாங்கு நாவலாசிரியர்களுக்குத் தேவை. உலக இலக்கியங்களில் முக்கியமாகக் கருதப்படும் நாவல்கள், தமிழில் தொடர்ந்து கொண்டாடப்படும் கிளாசிக் நாவல்கள் என இன்னும் விரிவான வாசிப்புதான் நாவல் எழுதுவதற்குரிய நமது சிறந்த பயிற்சியாகும்.
இவை இத்துடன் நின்றுவிடும் தருணம் கிடையாது. மென்மேலும் முயற்சிகளைச் சாத்தியப்படுத்தி நாவலாசிரியர்கள் தங்களை நாவல் கலைக்காக அர்ப்பணிக்க வேண்டுகிறேன். இவையனைத்தும் எனக்கு எட்டிய/கிட்டிய நாவல் பார்வையிலிருந்து எழுந்த விமர்சனம்/மதிப்பீடு மட்டுமே. இவை ஒட்டுமொத்த நாவல்களுக்குரிய விமர்சனப் பார்வை அல்ல; போட்டிக்கு வந்த நாவல்களை உட்படுத்திய சிறு வாசகப் பகிர்வு என எடுத்துக் கொள்ளலாம். இதைவிட இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் நடுவர் குழுவில் விவாதிக்கப்பட்டது. ஆனால், போட்டியின் விதிமுறை கருதி அவற்றை முழுமையாக வெளியிடாமல் நான் வாசித்தவரை ஏற்பட்ட கருத்துப் பகிர்வை மட்டும் இங்கு வழங்கியுள்ளேன். வாய்ப்பிருந்தால் மற்ற நாவல்களைப் பற்றியும் வேறு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத முயல்கிறேன்.
இதே வேறு மூன்று நடுவர்களிடம் இந்நாவல்களை வழங்கி மதிப்பீடு செய்யச் சொன்னால் ஒருவேளை அவர்கள் பரிசுக்குரியவையாக வேறு நாவல்களைக்கூட தேர்ந்தெடுக்கக்கூடும். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை ஒருவரின் உழைப்பும் அந்த உழைப்பின் பின்னணியில் இருக்கும் இலக்கியத் தார்மீகமும் மட்டும்தான். எனது இரண்டு மாதக் காலத்தை இந்நாவல்களை வாசிப்பதிலும் மதிப்பிடுவதிலும் நான் செலவழித்து இக்கருத்துகளை எழுதியுள்ளேன். அதற்குப் பின்னணியில் எனது உழைப்பும் தர்க்கமும் உள்ளன. அந்நாவல்களை வாசிக்கும்போது நானும் நிறைய கற்றுக் கொண்டேன். ஆக, கலந்து கொண்ட அனைத்து நாவலாசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். முதன்மை பரிசு பெற்ற ‘ஈர மனங்கள்’ நாவலாசிரியருக்கும் ஆறுதல் பரிசு பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள். மேலும், முயற்சித்து விவாதித்து மலேசியத் தமிழ் நாவல் கலையை வளர்ப்போம்.
வாய்ப்பிற்கு நன்றி.
- கே.பாலமுருகன்
![]()