சிரிக்கும் வகுப்பறை – சிறார் நாவல் விமர்சனம்

பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு தயாரிக்கப்படுவதாகும். அதனையொட்டி போதிக்கும்போது மேற்கோள்களாக இலக்கியம், வரலாறு, சமூகவியல் எனப் பலவற்றை அணுகிச் செல்ல முடியும். ஆனால், இலக்கிய வாசிப்பென்பது சிறார்களின் மனத்தை மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டாட்டத்திற்குள்ளும் ஆழ்த்தக்கூடிய சாத்தியங்களை உடையதாகும். ஒரு சிறார் நாவல் அல்லது சிறார் கதைகளை வாசிக்கும்போது அச்சிறுவர்கள் மனத்தளவில் உணர்வெழுச்சிக் கொள்கிறார்கள். உணர்வு ரீதியாகச் சமன்கொள்கிறார்கள். இவ்வாழ்க்கையுடன் உணர்வுரீதியில் தொடர்புக் கொள்ளக் கற்றுக் கொள்கிறார்கள். பாடநூல் வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்பு முற்றிலும் வேறுபட்டு உணர்வுத்தளத்தை நோக்கி நகரக்கூடியது. இரண்டுமே மாணவர்களுக்கு அவசியமாகும். இலக்கிய நூல்களை வாசிக்கும்போது கொண்டாட்ட மனநிலைகளின் அனைத்து எல்லைகளையும் அவர்கள் சென்றுரசி மனவெழுச்சிக் கொள்கிறார்கள். தங்களை அந்தக் கதாபாத்திரங்களுக்குள் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். அதனாலேயே சிறார்களுக்கு அதிகளவில் இதுபோன்ற கற்பனை, உணர்வு சார்ந்த இலக்கிய நூல்கள் படைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘கால் முளைத்த கதைகள்’ மிகவும் பிரபலமான நூல். நான் அவருடைய சிறார் படைப்புகளில் முதலில் வாசித்த நூல் அதுதான். அதிலுள்ள நாட்டாரியல் கதைகள் யாவும் குழந்தைகளுக்கான சுவாரிசயங்கள் உடையவை. ஆதிகாலத்தில் ஒரு சமூகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அச்சமூகம் எப்படிக் கதைகளையும் கற்பனைகளையும் அடிப்படையாகக் கொண்டு பதில்கள் அளிக்க முயன்றுள்ளன என்பதன் சேகரிப்புதான் ‘கால் முளைத்த கதைகள்’. இப்பொழுது அவருடைய ‘சிரிக்கும் வகுப்பறை’ என்கிற சிறார் நாவலை தம்பி பிருத்விராஜூ பரிந்துரைத்ததால் கடையில் வாங்கிப் படித்தேன். தமிழில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து வயதினரும் அனைத்து சமூகத்தினரும் படித்து அடைய வேண்டிய சிறார் கல்வித் தொடர்பான விரிவும் ஆழமும் இந்நாவல் கொண்டுள்ளது. இதுவரை நாம் கையாண்டு வரும் கல்விக் கொள்கைகளின் விளைவுகளையும் அதன்பால் புறக்கணிக்கப்படும் சிறுவர்களின் வாழ்வியலையும் இந்நாவல் விமர்சன முறையில் அணுகியுள்ளது. ஆனால், எங்கேயும் சோர்வுத் தட்டாமல் இருக்க நாவலின் கடைசிப் பகுதிகளில் எழும் கற்பனை சார்ந்த சித்திரங்கள் அபாரமான எல்லைகள் உடையவை.

நாவலில் வரக்கூடிய அக்ரமா என்கிற குகை பள்ளியின் சித்தரிப்பும் கட்டமைப்பும் மிகச் சிறந்த முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. பாறைகளால் உருவாக்கப்பட்ட வகுப்பறை, கற்களால் உருவான மேசைகள், கற்படுக்கை, தண்டனைகள் வழங்கப்படும் முறை என அனைத்திலும் நுணுக்கமான விவரிப்புகள் உள்ளதால் கதையோட்டத்தோடு இணைந்து செல்ல முடிகிறது.


‘ஒரு கரப்பான்பூச்சியாகப் பிறந்திருந்தால் பள்ளிக்குப் போகாமல் இஷ்டம் போலச் சுற்றித் திரிந்திருக்கலாம் எனத் திவாகருக்குத் தோன்றியது’ என்கிற வரியுடன் தான் நாவல் ஆரம்பமாகிறது. தொடக்க வரியிலேயே நாவலுக்கான சாரத்தை எழுத்தாளர் பின்னத் தொடங்குகிறார். பின்னர், இந்த வெறுப்பு எங்கணம் குழந்தைகளின் மனத்தில் வேர்க் கொள்கிறது என்பதை நோக்கி நாவல் சயனகிரி வரை விரிவாகுகிறது. திவாகர் எனும் மாணவன் அனைத்து பள்ளிகளாலும் பயனற்றவன், கல்வியில் ஆர்வமில்லாதவன் எனத் தூக்கி வீசப்படுகிறான். அவனது மனம் அதிலுள்ள நுட்பமான உணர்வலைகள் யாராலும் புரிந்துகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் மனமுடைந்த அவனுடைய பெற்றோர் திவாகரைத் தண்டனைப் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். அதன் பின்னர்தான் நாவலின் மிக முக்கியமான விறுவிறுப்பான பகுதிகள் ஆரம்பமாகின்றன.

தண்டனைப் பள்ளியின் தண்டனைகள்

விதவிதமான தண்டனைகளைக் கண்டுபிடித்து அதனை நாட்டிலுள்ள மற்ற பள்ளிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே லொங்கோ என்பவனால் இப்பள்ளித் தொடங்கப்பட்டது. காயாம்பு, பட்லர், இயந்திரப் பறவை, புகை மனிதர்கள் என அடுத்தடுத்தப் பகுதிகள் சுவாரஷ்யமும் அதே சமயம் ஒரு சமூகம் தண்டனைகள் மீது கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கைகள், அதீத விருப்பம் எப்படி அக்ரமா பள்ளியால் பணமாக்கப்படுகிறது என்கிற அரசியலையும் நாவலாசிரியர் கதையின் உள்ளோட்டச் சரடாக வைத்துள்ளார்.

பறந்து சென்று மாணவர்களை அடிக்கும் அதிசய பிரம்புடன் பள்ளிக்கு வரும் பட்லரின் பகுதி என்னை மிகவும் கவர்ந்திருந்தது. வேடிக்கையாகவும் அதே சமயம் பொருள் புதைந்த பகுதியாகவும் அமைந்திருந்தது. பட்லரின் அதிகாரத்தைச் சிறுவர்கள் எதிர்கொள்ளும் விதமும் நகைச்சுவையாக இருந்தது. இவர்கள் யாவரும் சேட்டையான மாணவர்கள், படிக்கத் தெரியாதவர்கள், எந்தப் பயனுமற்றவர்கள் எனக் குடும்பத்தாலும் பள்ளிக்கூடங்களாலும் அடையாளப்படுத்த ஒதுக்கப்பட்டவர்கள்.

ஆகவே, இவர்களைக் கண்டறிந்து அக்ரமா தண்டனைப் பள்ளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைக்கப்படுகிறார்கள். பெற்றோர், பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்பினால் பயனுள்ள மனிதனாக உருவாக்கப்படுவார்கள் என நம்பி அக்ராமில் விட்டுவிட்டுகிறார்கள். ஆனால், லொங்கோ இப்பிள்ளைகளை இன்னும் கடுமையாகத் தண்டிக்கிறான். புதிது புதிதாக தண்டனைகள் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் மூர்க்கமாக நடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பள்ளியைத் திவாகரும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மீட்கிறார்கள் என்பதுதான் நாவலின் இறுதி பகுதியாகும்.

பள்ளிக்கூடம் என்பது என்ன? தண்டனைக்கூடமா? உண்மையில் ஒரு சிறந்த மாணவன் எப்படி தீர்மானிக்கப்படுகிறான்? அவனைத் தீர்மானிப்பது எவை? என்கிற மிக முக்கியமான கேள்விகளை நோக்கி இந்நாவல் நம் அனைவரையும் கொண்டு போய்ச் சேர்க்கின்றது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவலாக நான் பரிந்துரைக்கிறேன். கல்விச்சூழலில் நிகழும் புறக்கணிப்புகளின் காட்டத்துடன் யதார்த்தமாகத் தொடங்கும் நாவல், பின்பகுதியில் அடையும் அதீதமான Fantacy (கனவுருப்புனைவு) ஒருவேளை சிறார்களுக்கு மிகவும் விருப்பம் மிகுந்த பகுதியாக இருக்கலாம். படிக்க வேண்டிய நாவல்.

– கே.பாலமுருகன்

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *