குறுங்கதை: கைகளின் தவம்
ஞாயிறுவரை மாலா காத்திருந்தார். நகரின் நடுவில் போடப்படும் ஞாயிறு சந்தைக்கு இன்று சென்றாக வேண்டும். காலையில் 6.00 மணிகெல்லாம் எழுந்து சிவாவையும் கிளப்பிவிட்டார். கணவரிடம் சொல்லிவிட்டு இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். வழியில் மாலா ஒன்றுமே பேசவில்லை. சிவாவும் மௌனமாக சில மாதங்களாக அவன் வேடிக்கை பார்த்து ஓய்ந்துபோன காட்சிகளையே மீண்டும் புதிதாகப் பார்ப்பது போன்ற பாவனையில் கவனித்துக் கொண்டிருந்தான்.
“கவலையா இருக்காடா?” என மாலா பேச்சைத் தொடக்கினார்.
“இல்லம்மா… கவலை இல்ல…”
“அப்புறம்?”
சிவா மௌனமாக இருந்தான். இருவரும் நகரை அடைந்ததும் வாகனத்தைவிட்டு இறங்கி அந்தச் சிறப்புச் சந்தைக்குள் நுழைந்தார்கள். சிறுவர்களின் கூச்சலும் அழுகையும் நிரம்பி வழிந்தன. அரை மணி நேரத்திற்குப் பின்னர் சந்தையை விட்டு மாலா வெளியே வந்தார். வாகனத்திடம் செல்லும்வரை தன் கையைப் பிடித்திருப்பவனின் முகத்தை அவர் பார்க்கவில்லை. உள்ளே ஏறியதும் ஐந்து வயது நிரம்பிய ஒரு பையன் அருகில் இருந்தான்.
“உன் பேரு என்னப்பா?”
“மாறன்மா…”
வாகனம் அமைதியுடன் நகரத் துவங்கியது.
– கே.பாலமுருகன்