பேபிக் குட்டி சிறுகதையின் மேலுமொரு பரிணாமம்

2014ஆம் ஆண்டு எழுதி எனது வலைத்தளத்தில் நான் வெளியிட்ட ‘பேபிக் குட்டி’ சிறுகதை பின்னர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் வாசிக்கப்பட்டு ‘சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒருகுழந்தையின் மரணம். அந்த இழப்பின் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு குழந்தைமையை எவரும் கவனிப்பதேயில்லை. மேலும் முதுமை என்பது மரணத்தின் இன்னொரு வடிவம். ஆகவே அதை சபிக்கிறார்கள், பழிக்கிறார்கள். என அவர் தன் அகப்பக்கத்தில் ஒரு சிறு விமர்சனம் வெளியிட்டிருந்தார். அதுவரை பரவலாக வாசிக்கப்படாமல் இருந்த அச்சிறுகதை மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் கவனிக்கப்பட்டது. பின்னர், 2018ஆம் ஆண்டு அச்சிறுகதையைத் தமிழ்நாட்டு அரசுப் பாடநூலில் தேர்ந்தெடுத்திருப்பதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையிலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றது. மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டின் அரசுப் பாடநூலுக்குத் தெரிவான முதல் சிறுகதை ‘பேபிக் குட்டி’ ஆகும்.

பின்னர், 2022ஆம் ஆண்டு அதே சிறுகதையை மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் கலைத்திட்டத்திலும் சேர்க்க முயற்சிகள் நடந்தன. 2023ஆம் ஆண்டு ‘பேபிக் குட்டி’ சிறுகதை மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் தமிழ்க் கலைத்திட்டத்திலும் ஒரு பாடமாக இணைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் மே மாதம் மலேசியாவின் மலாய் இலக்கியத்திற்கெனத் தனித்துவமாக இயங்கி வரும் புகழ்பெற்ற மாத இதழான ‘டேவான் சாஸ்த்தரா’ (Dewan sastera)வில் ‘பேபிக் குட்டி’ சிறுகதை மலாய் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிட்டப்பட்டுள்ளன என்கிற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நாட்டின் புகழ்பெற்ற மொழிப்பெயர்ப்பாளர் ஆசிரியை கமலா உதயன் அவர்களால் ‘பேபிக் குட்டி’ சிறுகதை மலாய்மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழில் எழுதப்படும் சிறுகதைகளை நுணுக்கமாக வாசித்து அதனை மலாயில் இலக்கியக் கணங்கள் பிசகாமல் கொண்டு வந்துவிடும் ஆற்றலுடையவர்.

‘பேபிக் குட்டி’ சிறுகதை உண்மையில் எந்தத் திட்டமும் இல்லாமல் சட்டென உருவான படைப்பு. பெரும்பாலும் மூன்று வாரங்கள் சிந்தித்துத் திட்டமிட்டு எழுதிய கதைகள்கூட இந்தளவில் கவனம் பெற்றது கிடையாது. சொல்லப் போனால் சில சிறுகதைகள் அதுவாக உருவாக வேண்டும்; மலர வேண்டும். நாம் உருவாக்க நினைத்தால் அது தடம் புரண்டு போய்விடும் என்பார்கள். ‘பேபிக் குட்டி’ அப்படி மலர்ந்த கதையாகும். எந்த மெனக்கெடல்களும் செயற்கையான உள்நுழைத்தல்களும் இல்லாமல் அதுவாக எழுந்து கொண்டது எனலாம். அது மனத்திற்கும் மனத்திற்குள் இருக்கும் புனைவுக்கும் இடையிலான நூதனமான தொடுதல் எனலாம். அப்படிச் சில கதைகளை எழுதும்போது மட்டும்தான் ஏற்படுகிறது. நம்மை வற்புறுத்திக் கொண்டு இந்தத் தலைப்பில், இந்தக் கருவில் எழுத போகிறேன் என்றெல்லாம் எழுத நினைத்தால் அது செயற்கையாகிவிட வாய்ப்புண்டு. தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தால் அந்த வாசக மனம் உள்முகமாகத் திரும்பி நமக்குள் கதையாக நிகழ வேண்டிய ஒன்றைத் திரட்டி மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து சேர்த்துவிடும். பின்னர் அதுவாக மலரும்.

  • கே.பாலமுருகன்

 

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *