உயாங் மலை சிறார் நாவல் – நூலகங்களுக்கு அன்பளிப்பு
உயாங் மலை சிறார் மர்ம நாவலை இரண்டு பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட சிறார் நாவலை நூலகங்கள்தோறும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படையில் முதல் முயற்சியாக இரண்டு பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பி வைத்தேன்.
SJKT FLEMINGTON, PERAK, SJKT ALAGAR, PERAK ஆகிய பேரா மாநிலத்திலுள்ள இரு குறைந்த மாணவர் எண்ணிக்கைக் கொண்ட பள்ளிகளுக்கு உயாங் மலை அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கத் துவங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சிறுவர்களை முதலில் வாசிப்பின் பக்கம் ஈர்க்க வேண்டியுள்ளது. அதனைத் தொடர்ந்துதான் அவர்களை இலக்கியத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும். இரசனை உருவாக்குதல் என்பதுதான் அடிப்படையில் சவால்மிக்கது. அவர்களுக்குப் பிடித்த விருப்பமான பாணியில் எழுதப்படும் கதைகளின் வாயிலாக இலக்கிய வாசிப்பின் மீது இரசனையை உருவாக்க முடியும்.
மேலும், சிறார் நாவல்களை முன்வைத்து புரித்ப்போட்டிகள், வாசிப்புப் போட்டி போன்றவற்றை நடத்தும்போது வாசிப்பென்பது தொடர் நிகழ்வாகிவிடுகிறது. மாணவர்களை இச்சிறார் பருவத்தில் வாசிப்பின் மீது ருசியை உண்டாக்கினால்தான் அது அவர்களுடன் காலங்கள்தோறும் தொடரும். இல்லையெனில் காலப்போக்கில் அவர்கள் வாசிப்பைவிட்டுத் துண்டித்துக்கொள்வார்கள். எதுவொன்றும் நமக்கு ஏன் அது தேவை என்கிற அளவிலேயே சிந்திக்கப்படும் காலக்கட்டத்தில் இலக்கியத்தையும் வாசிப்பையும் சிறுவர்களின் தவிர்க்க முடியாத இரசனையாக மாற்றிவிடத் தொடக்கத்தில் இதுபோன்ற ஈர்ப்புக் கணங்கள் கொண்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனது சிறார் பருவத்தில் நூலகத்திலிருந்த ‘பெரிய புத்தகங்களை’ புரட்டி வியந்த கணங்களை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பிரமிப்புதான் பிறகொருநாள் வாசிப்பை எனக்குள் நிரந்தரமாக்கியது. பாடநூல் வாசிப்பைத் தாண்டி இலக்கிய வாசிப்பு, அறிவுக் களைஞ்சியங்கள் வாசித்தல், இதழ்கள் வாசித்தல் போன்ற பன்முக வாசிப்பு நிலைகளை மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இல்லையெனில் வீட்டுப்பாடங்கள் செய்வதுடன் நின்றுவிடக்கூடிய அபாயம் உண்டு. வாசிப்பின் ருசியை அறிய வைக்க அவர்களை அவர்களின் உலகிற்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதற்குச் சிறார் நூல்கள் சிறந்த வழித்தடமாகும்.
இதேபோல தமிழ்ப்பள்ளி நூலகங்களுக்குச் சிறார் மர்ம நாவல்களை வாங்கித் தர விருப்பமுள்ள நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். bkbala82@gmail.com
‘வாசிப்பற்று இருப்பது தீண்டப்படாத மூங்கில்கள் போல; இன்னும் இசைக்காமல் அமைதியில் உறைந்திருக்கும்’
- கே.பாலமுருகன்