கடைசி விருந்தாளி (குறுங்கதை – 2)

“பெட்னோக் எஸ்டேட் தாண்டி நாலு கிலோமீட்டர்ல ஆளுங்க இருக்காங்களா?”
அலைபேசியில் வினோத் கேட்டும் சரவணகுமாருக்குச் சந்தேகம் எழவில்லை. அவருடைய முன்னாள் மாணவன் இன்று தனக்குப் பிறந்தநாள், தாங்கள் கட்டாயம் வர வேண்டும் எனக் கேட்டதை அவரால் மறுக்க முடியவில்லை.
“எட்டு வருசத்துக்கு முன்னால என்கிட்ட படிச்ச பையன்… அது என்னவோ பேரு சொன்னான்… சரியா பெட்னோக் எஸ்டேட் தாண்டி நாலாவது கிலோ மீட்டர்ல வலது பக்கம் வளைஞ்சோன வீடுங்க தெரியும்னு சொன்னான்…”
“ஓ! அந்தப் பக்கலாம் போனதே இல்ல…”
“அப்புறம் எதுக்கு எல்லா தெரிஞ்ச மாதிரி பேசற… சரி நான் கிளம்பணும் மச்சான்…”
சரவணகுமார் வீட்டிலிருந்து காரில் கிளம்பினார். எட்டாண்டுகளுக்கு முன்னர் காளிதாஸ் பள்ளியிலேயே சிறந்த மாணவன். யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெறக்கூடிய அளவிலான கெட்டிக்கார மாணவன். ஆனால், அவனுடைய அப்பா காணாமல் போய்விட்டதால் வீட்டில் ஏற்பட்ட சச்சரவால் பள்ளிக்கூடத்துக்கே வராமல் அவனும் காணாமல் போய்விட்டான்.
“டேய்! காளி! என்னடா ஆச்சு உனக்கு? இத்தன வருசமா எங்கடா போயிருந்த?”
“நாளைக்கு எனக்குப் பிறந்தநாளு சார்… நீங்க கட்டாயம் வாங்க. எல்லாத்தையும் முழுசா சொல்றன்…”
அவன் அழைப்பில் சுருக்கமாகத்தான் பேசினான். எப்படியோ வாழ்க்கையில் திரும்ப பார்க்க முடியாதா என ஏங்கியிருந்த மாணவனின் அழைப்பு சரவணகுமாருக்குப் புது தெம்பை உருவாக்கியிருந்தது.
பெட்னோக் செல்லும் பாதை ஒரு நீள்பாம்பு படுத்திருப்பது போலக் காட்சியளித்தது. கார் ஏறி மீண்டும் இறங்கும்போது சாலையின் இரு மருங்கிலும் இருந்த மரங்கள் அசைந்து வருவது போலவே தோன்றியது. இருள் மெல்ல வானத்தை மறைத்தது. சரவணகுமார் நேற்று காளிதாஸ் அழைத்த எண்ணுக்குப் பல முறை தொடர்பு கொண்டார். பதிலே இல்லாததால் காரை எங்கும் நிறுத்தாமல் பெட்னோக் தோட்டத்தைக் கடந்து சென்றார்.
சாலையில் ஆளரவமே இல்லை. காரின் இரு வட்ட மஞ்சள் விளக்குகள் மட்டும் எரிந்தவாறு சாலையை வெளிச்சமாகக் காட்டியது. ‘வேஸ்’ நான்காவது கிலோ மீட்டரில் வந்து நின்றது. காளிதாஸ் சொன்னது போல வலது பக்கம் ஒரு சாலை மட்டும் இருளுக்குள் தெரிந்தது.
முதலில் தயங்கினாலும் பின்னர் சரவணகுமார் அப்பாதையில் காரைச் செலுத்தினார். கரடு முரடான சாலை. கார்கள் வந்து சென்ற எந்தக் குறிப்புகளும் தென்படவில்லை. இன்னும் இரண்டு கிலோ மீட்டர் உள்ளே சென்றதும் ஒரு பாலம் தெரிந்தது. கார் வெளிச்சத்தால் மட்டுமே பார்க்க முடிந்தது. மீண்டும் காளிதாஸ்க்கு அழைத்தும் பதில் இல்லை. தூரத்தில் விளக்குகள் விட்டு விட்டு எரிவதைக் கண்டதும் அவருக்கு இலேசான ஆறுதல் தோன்றியது. பாலத்தைக் கடந்து உள்ளே சென்றார்.
அடுத்த பத்து நிமிடத்தில் சில வீடுகள் தெரிந்தன. காரை நிறுத்திவிட்டு அந்த வீடுகள் தெரிந்த பகுதிக்கு நடந்து சென்றார். இருள், முணுமுணுப்பை நிறுத்தவில்லை. அங்கிருந்த வீடுகள் பெரும்பாலும் பூட்டியிருந்தன. சில வீடுகள் கைவிடப்பட்டிருந்தன. ஒரேயொரு வீட்டில் மட்டும் வெளிச்சம் தெரிந்தது.
“காளி! காளி!”
“யாரு?”
உள்ளேயிருந்து குரல் மட்டும் கேட்டது.
“நான் காளிதாஸோட சாரு… சரவணன்…”
“ஓ.. சாரு… மா.. சாரு வந்துட்டாரு… என்னோட சாரு…”
காளிதாஸ் வீட்டினுள்ளே துள்ளிக் குதிக்கும் ஓசை கேட்டுச் சரவணக்குமார் மனம் நெகிழ்ந்தது. இப்படிக் கைவிடப்பட்ட நிலையில் அவன் வாழ்வதைக் கண்டு அவர் மனம் நொந்து போனது.
“வாங்க சார்! நீங்கத்தான் இன்னிக்குக் கடைசி விருந்தாளி!”
பத்து கால்கள் எண்ண முடியாத அளவில் நிறைந்திருந்த கைகளுடன் தரையில் தவழ்ந்தவாறு ஒரு சிறு உருவம் வர அதே போல பூரான் போலக் கால்கள் உடைய இன்னொரு உருவமும் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வருவது தெரிந்தது.
கே.பாலமுருகன்
![]()