கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் ‘எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை’
கடந்த சனிக்கிழமை (28.09.2024) அன்று கடந்த 15 ஆண்டுகளாகக் கூலிமில் இலக்கியம் சார்ந்து செயல்பட்டு வரும் கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுன் ‘ஓர் இலக்கிய மாலை’ என்கிற சந்திப்பு நடைபெற்றது. சனிக்கிழமை காலையில் கூலிம் நவீன இலக்கியக் களத்தின் உறுப்பினர்களுடன் ஓர் இலக்கிய உரையாடல் நடைபெற்றது. சுவாமி பிரம்மனந்த சரஸ்வதி, திரு.ப.தமிழ்மாறன், திரு.கோ.புண்ணியவான், திரு.த.குமாரசாமி, கே.பாலமுருகன், ரேவின் என இன்னும் சிலர் கலந்து கொண்டனர். தத்துவம், மெய்யியல், இலக்கியம் என உரையாடல் பன்முகமாகப் பல தளங்களையொட்டி விரிவடைந்தது.
பின்னர், மாலை 5.00 மணிக்கு ‘எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஓர் இலக்கிய மாலை’ என்கிற நிகழ்ச்சித் தொடங்கியது. பிரம்மவித்யாரண்யம் ஆன்மீகத் தளத்தின் வழிநடத்துநர், கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். வாழ்வில் ஏற்படும் பதற்றங்களையும் நிலைக்கொள்ளாமைகளையும் இலக்கியம் எப்படிக் கையாள்கிறது என்பதையொட்டியதாக அவருடைய உரை அமைந்திருந்தது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வருகை தமக்கும் நவீன இலக்கியக் களத்தின் உறுப்பினர்களுக்கும் கூலிம் தமிழ் மக்களுக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்திருப்பதாகச் சுவாமி அவர்கள் தெரிவித்தார். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து இந்நிகழ்ச்சியைச் சாத்தியப்படுத்திய திரு.பி.எம் மூர்த்திக்குச் சுவாமி அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சி வழிநடத்துநர் கே.பாலமுருகன் அவர்கள் எட்டாண்டுகளுக்கு முன்பே எஸ்.ரா அவர்களை இலக்கியக் களம் சார்பாக வரவழைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் பின்னர் உருவான தடைகள் பற்றியும் தெரிவித்தார். அதோடுமட்டுமல்லாமல் 2008ஆம் ஆண்டில் நவீன இலக்கியக் களம் துவங்குவதற்கு முன்பாக எஸ்.ரா எழுத்துகள் தொடர்பாகத் தனக்கும் சுவாமிக்கும் ஏற்பட்ட உரையாடலின் விளைவாக உருவானதுதான் கூலிம் நவீன இலக்கியக் களம் என்கிற இனிய செய்தியையும் கூறினார்.
பின்னர், எஸ்.ரா அவர்கள் தொடர்பான அறிமுகத்தை எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்கள் வழங்கினார். அவருடைய கதைகள் தொடர்பான தன்னுடைய இரசனை வெளிப்பாட்டைச் சொன்னதோடு மட்டுமல்லாமல் வந்திருந்தவர்களுக்கும் எஸ்.ரா அவர்களின் படைப்புகள் தொடர்பான ஓர் ஆழ்ந்த முன்னோட்டம் உருவாகும் வகையில் உரையாற்றினார்.
அடுத்து, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனதுரையை ஒன்றரை மணி நேரம் நிகழ்த்தினார். உலக இலக்கியங்கள் பற்றி பேரூரைகள் ஆற்றிய அனுபவமுடைய எஸ்.ரா அவர்கள் தமதுரையைத் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்க்கத் துவங்கினார். அத்தனை எளிமையான சக மனிதனோடு தோளில் கைப்போட்டுக் கொண்டு கனிந்து உருவான பேச்சு எனலாம். காஃப்காவின் உருமாற்றம் என்கிற சிறந்த நாவல் ஒன்றனைச் சொல்லி உரையை மேலும் கூர்மையாக்கினார். ஒரு நாள் விடிந்ததும் தன் அறைக்குள் படுத்திருந்த மனிதன் ஒருவன் கரப்பான் பூச்சியாகிவிடுகிறான். அதன் பின்னர் நீளும் கதை மனித இருத்தலியலையும் அந்நியமாதலையும் போர் உண்டாக்கிய விளைவுகளுக்குப் பின்னர் உருவான சிதைவு மனநிலைகளையும் காப்ஃகாவின் இந்நாவல் பிரதிபலிப்பதாக எஸ்.ரா அவர்கள் நகைச்சுவையும் கலந்து சொன்னார்.
ஓர் இளைஞன் திடீரெனக் கரப்பான் பூச்சியாகிவிடுகிறான். எப்படி ஆகிறான் என்பதெல்லாம் சிக்கல் இல்லை. இலக்கியம் என்பது அனைத்துத் தெளிவுப்படுத்தல்களையும் தகவல் முழுமையையும் உள்ளடக்கிதான் இயற்றப்பட வேண்டும் என்பதல்ல. மனிதகுலம் சிந்திக்காத ஒரு கற்பனையை இழையாகக் கொண்டு அதன் மேல் பின்னப்பட்ட ஓர் அரசியல் சித்தாந்தங்களையோ அல்லது தத்துவ விசாரணைகளையோ முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்குக் காஃப்காவின் உருமாற்றம் நாவல் சிறந்த உதாரணமாகும். எஸ்.ரா அவர்கள் மேலும் நமது முழுமையான கவனம் சர்வதேசத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டு எழுத்தாளர்களை உங்களின் இலக்காக வைக்க வேண்டாம். அதையும் தாண்டி விரிந்த எல்லையை நோக்கியதாக நமது இலக்கு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டிலேயே அங்குள்ள படைப்புகளை மட்டுமே தமிழ்ப்படைப்புகளாக யாரும் பார்ப்பதில்லை என்றும், சிங்கை, மலேசிய, ஈழ இலக்கியங்களும் வாசிப்பிலும் ஆய்விலும் உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
‘இங்கு எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு நான் சொல்லக்கூடியது தமிழ்நாடு அல்ல உங்களின் அங்கீகாரத்திற்கான இடம்; சர்வதேசம்தான் உங்களின் இலக்கு. சர்வதேசத்தில் நீங்கள் வெற்றிப் பெற்றால் தமிழ் வெற்றிப் பெறுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் எந்த நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் வெற்றிப் பெற்றாலும் தமிழ் வெற்றிப் பெறுகிறது’ என அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார்.
கேள்விப் பதில் அங்கத்தில் எழுத்தாளர் தயாஜி அவர்கள் இலக்கிய விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். எழுத்தாளர் விஜயலட்சுமி அவர்கள் புதிதாக எழுத வரும் இளைஞர்கள் முதலில் எதை நோக்கி தங்களின் கற்பனைகளை விரிவாக்க வேண்டும் என்பதையொட்டிக் கேள்வி கேட்டார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வம் அவர்கள் எஸ்.ராவின் புலிக் கட்டம் என்ற சிறுகதையையும் அசோகமித்திரனின் புலிக் கலைஞன் என்கிற சிறுகதையும் ஒப்பிட்டுக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்ச்செல்வம் அவர்களின் விமர்சனப் பார்வை சிறப்பாக உள்ளதாக எஸ்.ரா அவர்கள் பாராட்டைத் தெரிவித்தார். அதே போல கவிஞர் உதயகுமார் அவர்களும் கேள்விக் கேட்டு விளக்கம் பெற்றார். வந்திருந்த பலரும் நிகழ்ச்சி முடியும்வரை ஆர்வத்துடனும் நுணுக்கமாகவும் எஸ்.ராவின் உரையைச் செவிமடுத்தனர்.
இறுதி அங்கத்தில் திரு.ப.தமிழ்மாறன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். எஸ்.ராவின் உரையிலுள்ள தத்துவத் தெறிப்புகளையும் அதன் சாரம் நமக்குள் உண்டாக்கிய இரசனை அலையையும் பற்றி பேசி நன்றி தெரிவித்தார். வந்திருந்த பலரும் எஸ்.ராவின் நூல்களை வாங்கிக் கொண்டனர். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் பாண்டியன், ஸ்ரீ ராமலு, திரு.பி.எம் மூர்த்தி, திரு.விச்சு மாமா, உதயகுமார், செகு ராமசாமி, ஆசிரியை மஞ்சுளா எனப் பலர் கலந்து கொண்டனர். அதே போல இளம் எழுத்தாளர்களான பிரவின் குமார், ரேவின், தேவக்குமார், விஜயலட்சுமி, தயாஜி, அபிராமி, ப்ருத்விராஜூ என இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
“எங்கிருந்தும் எந்த நாட்டிலிருந்தும் எழுகிற குரல்; அடையும் வெற்றி நம் தமிழுக்கான வெற்றிதான். சர்வதேச அரங்கில் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்’ – எஸ்.ரா
- கே.பாலமுருகன்