ஆறாம் ஆண்டு சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு சிறார் சிறுகதைப் போட்டி 2025

கடந்த 20.06.2025ஆம் நாளில் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறார் இலக்கிய விழாவினை முன்னிட்டு முவாலிம் வட்டாரத் தமிழ்ப்பள்ளிக்களுக்கிடையே சிறுவர் சிறுகதை எழுதும் போட்டி நடைபெற்றது. விழாவின் ஏற்பாட்டுக் குழு சார்பில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குக் கோப்பையும் சான்றிதழும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி, பேராங் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கத்தாயோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். வந்திருந்த 30 சிறுகதைகளில் பத்துச் சிறுகதைகளை எழுத்தாளர் கே.பாலமுருகன் தேர்ந்தெடுத்தார். முதல் நிலையில் பேராங் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி தர்ஷாயினி சரவணன் அவர்களும் இரண்டாம் நிலையில் தான் ஸ்ரீ மாணிக்கவாசம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி யாழினி புகழேந்தி அவர்களும் மூன்றாம் நிலையில் பேராங் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் திருச்செல்வன் சங்கர் அவர்களும் வெற்றிப் பெற்றனர்.

மாணவர்களுக்குக் கடந்த வாரமே சிறுகதைக்கான தொடக்கம் வழங்கப்பட்டிருந்தது. அத்தொடக்கத்தைக் கொண்டு மாணவர்கள் சுயமாகத் தங்களின் கற்பனைவளத்தினைப் பயன்படுத்தி சிறுகதை எழுத வேண்டும் என்பதுதான் விதிமுறை ஆகும். மாணவர்கள் தங்களின் கற்பனைத்திறனைக் கொண்டு சிறுகதையை வெவ்வேறு கோணங்களில் கனவுருப்புனைவு, யதார்த்தம் எனப் பலவகைகளில் எழுதியிருந்தனர். மாணவர்கள் சுயமாக கதை எழுதுவதை ஆசிரியர்கள் பள்ளியில் உறுதிபடுத்தியதோடு அதற்குச் சான்றாகப் புகைப்படங்களையும் அனுப்பி வைத்தனர்.

இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 20.06.2025 காலை 9.00 மணிக்கு தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்டது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.முருகேசு ஆத்தியப்பன் அவர்களும், ஆசிரியரகள் திரு.அழகேந்திரன் மற்றும் அழைப்புப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். உப்சி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் முனிஷ்வரன் குமார் அவர்களும் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார்.

இதுபோன்ற சிறுவர் சிறுகதைப் போட்டிகள் மாணவர்களைப் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களின் கற்பனையையும் எழுத்தாற்றலையும் வளர்க்க வல்லது என எழுத்தாளர் கே.பாலமுருகன் தமதுரையில் குறிப்பிட்டார்.

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *