அந்த வகுப்பறை – குறுங்கதை

 

 

ஆசிரியர் அறைக்குள் ஒலித்தபடியிருந்த வானொலியில் சட்டென இரைச்சல் தோன்றியதும்தான் வேலைக்குள் மூழ்கியிருந்த ஜோதிக்கு நினைவு திரும்பியது. கடிகாரத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள். மாலை 7.00 மணியை நெருங்கி இலேசான இருள் கவிந்திருந்ததை உணரவில்லை. அலைபேசியில் பத்து பதிலளிக்கப்படாத அழைப்புகளின் சமிக்ஞை தெரிந்தது. கோப்புகள் அனைத்தையும் மீண்டும் அலமாரிக்குள் அவசரமாக அடுக்கினாள்.

“டீச்சர்! இன்னும் கெளம்பலையா?”

அறைக்கு வெளியே மாரிமுத்து அண்ணன் நின்றிருந்தார்.

“அதான் பாருங்கண்ணே… அப்படியே வேலையில நேரம் போனதே தெரியல…”

“இருட்டிருச்சி டீச்சர்… கெளம்பிருங்க…”

அவருடைய பேச்சில் ஏதோ கனம் இருப்பதைப் போல உணர்ந்தாள். எப்பொழுதும் அந்த அண்ணன் அவ்வாறு பேசமாட்டார் என ஜோதிக்கு உறைத்தது.

“என்னாண்ணே ஏதோ பேய் படத்துல வர்ற மந்திரவாதி மாதிரி பேசறிங்க?”

மாரிமுத்து அண்ணன் நையாண்டியாகச் சிரித்தார்.

ஆசிரியர் அறையைப் பூட்டிய பிறகு ஜோதி வெளியில் வந்தாள். தூரத்தில் ஒரு வகுப்பறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கவனித்தாள். மாரிமுத்து அண்ணனைத் தேடினாள். அவர் பாதுகாவலர் அறைக்குள் இருந்ததால் ஜோதி அழைத்தது கேட்கவில்லை. இருள் அடர்ந்து பள்ளியை வட்டமிட்டது.

அதுதான் அந்தக் கட்டடத்தின் கடைசி வகுப்பறை. விளக்கை எரியவிட்டுப் போவதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. மெதுவாக அந்த வகுப்பறையை நோக்கி நடந்தார். ஓராண்டு புழங்கிய இடம்தான் என்பதால் அவளுக்குச் சற்றும் பயமில்லை. வகுப்பறையை நெருங்கியதும் சிணுங்கல் சத்தம் போலக் கேட்டது.

சடாரென நின்றுவிட்டு வகுப்பறைக்குள் நுழையாமல் வெளியிலிருந்து எக்கிப் பார்த்தாள். வகுப்பறையின் கதவினோரமிருந்த விளக்கு மட்டும் எரிந்தபடியிருந்தது. பூச்சிகள் விளக்கைச் சுற்றிலும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. மெதுவாக வகுப்பறைக்குள் நுழைந்து சட்டென விசையைத் தட்டி விளக்கை அணைத்தாள். வகுப்பறை இருண்டதும் சட்டென சிணுங்கல் சத்தம் விம்மும் சத்தமாக மாறியது. யாரோ ஒரு சிறுமி அழும் சத்தமாக உருவெடுத்ததும் ஜோதியின் மனம் நடுக்கத்தால் அதிர்ந்தது. அவள் நின்றிருந்த வகுப்பறையின் நடுவிலுள்ள நாற்காலியிலிருந்துதான் அந்தச் சத்தம் வருவதை உணர்ந்தாள். துணிவை வரவழைத்துக் கொண்டு கைப்பேசியிலுள்ள விளக்கை முடுக்கி அவ்விடத்தை நோக்கி ஒளியைப் பாய்ச்சினாள்.

ஒரு சிறுமி மேசையின் மீது படுத்தவாறு அழுவதைப் பார்க்க முடிந்தது.

“யாரும்மா நீ? வீட்டுக்குப் போகாம என்ன செய்ற?”

வார்த்தைகள் அவளை மீறி வெளிவந்தன. அச்சிறுமி அழுவதை நிறுத்தவில்லை.

“யாரு, கங்கேஸ்வரியா? இல்ல உதர்சஹனாவா? என்ன ஆச்சு? ஏன் வீட்டுலேந்து யாரும் வரலையா?”

ஜோதி உடனே சென்று விளக்கைத் தட்டினாள். அச்சிறுமி அழுது வடிந்த முகத்துடன் நிமிர்ந்தாள்.

“யாருமா நீ? உன்ன இந்த ஸ்கூல்ல பார்த்ததே இல்லையே…?”

ஜோதிக்கு வேறொன்றும் தோன்றவில்லை. அவளுடைய விசாரணை மூளை மட்டும் விழித்துக் கொண்டது. அச்சிறுமியின் அருகில் சென்றாள்.

“உன்ன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு… என்ன ஆச்சு உனக்கு? இங்க எப்படி வந்த?”

குழப்பத்தால் சூழ்ந்தாள். அச்சிறுமியின் கண்கள் பயத்தில் ஆழ்ந்திருந்தன. உடனே, வகுப்பறையை விட்டு வெளியேறினாள். வானம் மிகவும் தெளிவாக இருந்தது. இருள் எங்குப் போயிற்று என அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

அலைபேசி மீண்டும் அலறியது. தாமதமாகிவிட்டால் ஜோதிக்கு வழக்கமாக அவளுடைய அம்மாதான் விடாமல் அழைப்பார். சிறுவயதில் ஒருமுறை அப்பாவிற்குப் பயந்து பள்ளிக்கூடத்திலேயே ஒளிந்திருந்த ஜோதியை மறுநாள்தான் கண்டுபிடித்தார்கள். அதிலிருந்து அவளுடைய அம்மாவிற்கு ஜோதி தாமதமாக வந்தால் பயம் வந்துவிடும்.

“மாரிமுத்து அண்ணா!”

பாதுகாவலர் அறையிலிருந்து ஒரு அக்கா அவளை எட்டிப் பார்த்தாள். ஜோதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அண்ணா எங்க?”

பாதுகாவலர் அறையில் இருந்த பெண்மணி சந்தேகத்துடன் ஜோதியைப் பார்த்தார். ஜோதி அதிர்ச்சியில் சுற்றிலும் பார்த்தாள். பழைய கட்டிடம்.

“ஆ! இது எந்த இடம்?”

புலம்பியவாறு மீண்டும் ஜோதி அந்த வகுப்பறையை நோக்கி ஓடினாள். அங்கு எல்லாமே மாறியிருந்தன. அவள் மனத்திலிருந்த நடுக்கம் இப்பொழுது உடல் முழுவதும் பரவியிருந்தது. அந்த வகுப்பறையில் இருந்த சிறுமி இப்பொழுது அழுகையை நிறுத்தி மௌனமான அமர்ந்திருந்தாள். ஜோதி பதற்றத்துடன் அவளருகில் சென்றாள்.

“உன் பேரு என்னமா?”

“ஜோதி!”

–  கே.பாலமுருகன்

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *