வாசகப் பார்வை : பெரிய காது சிறுவன்

“பெரிய காது சிறுவன்” என்பது சிறுவர்களுக்கான சாகச, அறிவியல் கற்பனை கூறுகளை இணைக்கும் ஓர் அற்புதமான சிறுவர் நாவல் ஆகும்.

நாவல் முழுவதும் குமரன் என்ற சிறுவனின் பார்வையில் வெளிப்படுகிறது. வெளிநாட்டுப் பயணம் செய்யும் ஆவலோடு இருக்கும் குமரன், தனது நண்பன் சிவாவுடன் சேர்ந்து சென்னைக்குச் செல்லும் ஒரு பயணத்தில் ஈடுபடுகிறார். இந்த இயல்பான பயணம் பின்னர் அதிசயமான அனுபவங்களும் வானுலக மர்மங்களும் கலந்த ஒரு வியப்பூட்டும் சாகசமாக மாறுகிறது.

எழுத்தாளர் சிறுவர்களின் மனநிலையைக் கையாண்ட விதம் மிகவும் நயமானது. குமரனின் ஆர்வம், சிவாவின் நகைச்சுவை, அம்மாவின் அன்பு என அனைத்தும் கதையின் இயல்பை உயிர்ப்பிக்கின்றன. விமானப் பயணத்தின் போது குமரனும் சிவாவும் சந்திக்கும் “பெரிய காது சிறுவன்” என்ற மர்மமான பாத்திரம் நாவலுக்குப் புதுமையும் ஆழமும் சேர்க்கிறது. அந்தக் கற்பனைச் சிறுவன், மனிதர்களுக்குப் புலப்படாத ஓர் உலகில் வாழ்கின்றான். இதன்வழி, எழுத்தாளர் குழந்தைகளின் கற்பனை சக்திக்கு ஒரு வலுவான வெளிப்பாடை அளித்திருக்கிறார்.

மொழி எளிமையானதாக இருந்தாலும், அதில் நுண்ணியக் கவித்துவம் கலந்துள்ளது. “விமானம் இயந்திரப் பறவை”, “மேக உலகம்”, “ஒளிப்பந்து” போன்ற காட்சிகள் வாசகனின் மனதில் திரைப்படங்களாக உருமாறுகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் வாசகனின் ஆர்வத்தை தக்கவைத்து அடுத்த பக்கத்துக்குத் தள்ளுகிறது.

“பெரிய காது சிறுவன்” நாவல் குழந்தைகளுக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்து வைக்கிறது. கனவுகள் சரித்திரமாக மாறும் உலகம், கற்பனைக்கும் அறிவியலுக்கும் இடையே பாலம் அமைக்கும் உலகம் என இந்நாவலைப் பல கோணங்களில் பகுப்பாயலாம்.

எனவே, இநநாவல் சிறுவர்களுக்குப் பொருத்தமான ஒரு அறிவியல் கற்பனை, சாகச நாவல் மட்டுமல்ல, ஒரு உணர்ச்சி பூர்வமான பயணக் கதையாகும். வாசகனை தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஈர்த்துப் பிடிக்கும் கதை அமைப்பு, சிறந்த கற்பனை, நயமிக்க மொழிநடை, நெகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் ஆகியவற்றால் இது சிறுவர் இலக்கியத்தில் ஒரு நினைவாக நிற்கும் படைப்பு என நம்புகிறேன்.

சிறுவர்களின் கனவுகளையும் கற்பனையையும் உயிர்ப்பிக்கும் ஒரு அதிசய நாவல்.

தவநிஷா த/பெ தமிழ் செல்வம்

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *