குறுங்கதை 4 – அழைப்பில்லாத வருகை

மறுநாள் பள்ளித் தவணை தொடங்குகிறது. ராதா மாலை வரை பள்ளியில்தான் இருந்தார். எப்படியாவது ஒன்றாம் ஆண்டு வகுப்பை அழகுபடுத்தி தயார்படுத்திவிட வேண்டுமென பரபரப்பாய் இருந்தார். சின்றெல்லா ஓவியங்களைச் சுவரில் ஒட்டியதும்தான் வகுப்பில் மலர்ச்சி தோன்றியது. நிம்மதி பெருமூச்சுடன் வெளியில் வந்தார்.

பள்ளித் தலைமையாசிரியர் மட்டும் அவருடைய அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். ராதா அலுவலகம் சென்று அவரிடம் சொல்லிவிட்டுப் பள்ளியை விட்டு வெளியேறினார். மழை வரப்போகும் சமிக்ஞையை உணர்த்தும் விதமாக வானம் இருண்டிருந்தது.

ராதாவின் கார் பள்ளியை விட்டுப் பெரிய சாலையை நோக்கி அந்த ஒற்றையடி பாதையில் மெதுவாக நகர்ந்தது. அப்பொழுதுதான் சாலையினோரம் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டார். சடாரெனக் காரை நிறுத்திவிட்டுக் கதவின் கண்ணாடியை மட்டும் இறக்கினார்.

“முகுந்தன்தான? இங்க என்னடா செய்ற?”

அவன் ராதாவைக் கண்டதும் சற்றே அதிர்ச்சியடைந்தான். அவனுடைய கண்கள் மிரட்சியில் இருந்தன.

“இல்ல… டீச்சர்… இல்ல நூலகத்துல புத்தகம் வாங்கலாம்னு வந்தன்…”

அவனுடைய வார்த்தைகள் தடுமாறி விழுந்தன.

“அதுக்கு நீ ஸ்கூல் உள்ளதான வந்திருக்கணும்…”

அவனுடைய உடை, தோற்றம் அனைத்தும் சந்தேகத்தை உருவாக்கின. பலநாள் கழுவாத முகம் வாட்டத்துடன் கருவடைந்திருந்தது.

“என்னடா ஆச்சி? சரி, வா வீட்டுல விட்டுரன்…”

அவன் தயங்கி நின்றான்.

“என்னடா? வா வீட்டுல விட்டரன்… உங்க வீட்டுல தேட மாட்டாங்களா?”

“இல்ல டீச்சர்! நான் வீட்டுக்குப் போகல… எனக்குப் பயமா இருக்கு…”

அவனுடைய முகம் அழுவது போல சுருங்கியது.

“ஏறு! வா நான் பார்த்துக்கறன். என்னா அப்பா அடிக்கறாரா?”

அவனை வழுகட்டாயமாக ராதா காரில் ஏற்றினார். முகுந்தன் பதற்றத்துடன் கால்கள் நடுங்க கையில் ஒரு கருப்புநிற நெகிழையைப் பிடித்திருந்தான். அங்கிருந்து இருபது நிமிடத்தில் அவனுடைய கம்பம். ஒரு பெரிய பாலத்திற்குக் கீழாக அமைந்துள்ள ஆற்றோரக் குடியிருப்பு.

“என்னடா பையில? ஒரே நாத்தமா இருக்கு…”

அவன் அந்த நெகிழிப் பையை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“உங்க அம்மா எங்கடா போய்ட்டாங்க? போன மாசம் பரிசளிப்பு விழாவுக்கு ஸ்கூலுக்குக்கூட வரல… எப்பவும் வந்துருவாங்க…”

அவன் அமைதியாகவே இருந்தான். கண்ணாடி வழியாக முகுந்தன் பயத்தில் விழித்துக் கொண்டிருப்பதை ராதா பார்த்துவிட்டார்.

“ஏன் நீ ஒரு மாதிரி இருக்க? வீட்டுல யாரு இருக்கா?”

“அப்பா…”

“அப்போ அம்மா எங்கடா?”

அவன் பதில் சொல்லவில்லை. ராதா காரை நிறுத்திவிட்டுப் பின்கதவைத் திறந்தார்.

“என்னடா ஆச்சு உனக்கு? இந்தப் பை எதுக்கு? தூக்கிப் போடு… நாறுது…”

“இதை அங்க வியாட்நாம்காரனுங்க இருக்கற இடத்துல போய் அப்பா வித்துட்டு வரச் சொன்னாரு… விக்காமல் போன என்னை அடிச்சிக் காலை உடைச்சிருவாரு டீச்சர்…”

“என்னடா இருக்கு உள்ள? பொணம் நாத்தம் நாறுது…”

“இறைச்சி டீச்சர்!” என முகுந்தன் பையைத் திறந்து காட்டினான்.

ராதாவின் கண்கள் இருண்டது.

 

  • கே.பாலமுருகன்

 

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *