குறுங்கதை 7 – குலதெய்வம்

ஷீலா அன்று மகளை அழைத்துக் கொண்டு தைப்பிங்கிலிருந்து கிளம்பினார். தனியே கார் செலுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதால் சற்றுத் தடுமாற்றம் தெரிந்தது. மகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இறுதியாண்டு. விடுமுறைக்குப் பேருந்தில் வரச் சொல்ல அவருக்கு உவப்பில்லை.

“ஏன் இப்ப பஸ்ல வந்தா என்ன யாராச்சம் கடத்திட்டுப் போய்ருவாங்களா?”

காரில் ஏறியதிலிருந்து மகளுக்குக் கோபம். ஷீலா தன் சுதந்திரத்தைப் பறிக்கிறார் என்கிற புகார் அவளிடமிருந்தது. அவர் பதில் ஏதும் பேசவில்லை. கார் ஓட்டுவதிலேயே கவனம் இருந்தது.

“சிம்பங் அம்பாட்ல வெளியாயிரு. அங்கேந்து ஜெஞ்சாரோங் பழைய பதையில வந்தா கூலிம்க்கு வந்துரலாம்…”

கணவர் சொன்னதை விட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரின் கவனம் நீல ‘சைன் போர்ட்’ மீதிருந்து அகலவில்லை.

“எந்தக் காலத்துல இருக்கிங்கன்னு தெரில…”

கோபம் அடங்காத மகளின் குரல். கார் ஜெஞ்சாரோங் பழைய பாதையில் சென்று கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த சாலை. ஷீலாவின் மனமும் இருண்டிருந்தது. அடுத்த வாரம் அவருடைய குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம். அனைத்து வேலைகளையும் அவரே செய்து கொண்டிருந்த களைப்பு மிகுந்திருந்தது.

“உங்க கோயில் ஓப்பனிங்க்கு நான் வந்தாதான் எல்லாம் நடக்குமா?”

ஷீலா அப்பொழுதும் பொறுமையாக இருந்தார். சிறிது நேரத்தில் மகளின் மௌனம் அவள் உறங்கிவிட்டதை அறிவித்தது. ஷீலா திரும்பி இருமுறை அழைத்தும் பதில் இல்லை. அசதியில் தூங்கிவிட்டிருந்தாள்.

அப்பொழுது மகள் கண் விழிக்கிறாள். சுற்றிலும் அம்மனின் உருவ சிலைகள் இருந்தன. கையில் மண்டை ஓடுடன் இருந்த காளியம்மனின் உருவத்தைக் கண்டு மகள் மிரள்கிறாள்.

“தாயி! பெரிய ஆபத்துலேந்து தப்பிச்சிட்டமா…”

காளியம்மன் கையில் வைத்திருந்த வேப்பிலையால் அவள் தலையைத் தடவுகிறாள். சட்டென விழிப்பு. கார் இன்னும் பயணித்துக் கொண்டிருந்ததை மகள் கவனித்தாள். அந்தக் கனவை அவள் எதிர்பார்க்கவில்லை.

அழைப்பேசியில் பன்னிரெண்டு அழைப்புகள் வந்திருப்பதைக் கண்டு சற்று மிரண்டு போனாள். அவளுடைய தோழி காயத்திரி அழைத்திருப்பதைத் தொலைப்பேசியின் திரை காட்டியது.

“என்ன? இத்தன மிஸ் கால்?”

“ஏய்… நீ நம்ம பிள்ளைங்கள ஏத்திட்டுப் போன பஸ்ஸுலயா போன?”

காயத்திரியின் குரலில் பதற்றம்.

“அப்படியே போய்ட்டன்… இல்லலா… எனக்குலாம் அந்தச் சுதந்திரம் இல்ல…”

“ஏய்! நல்லதா போச்சிலா. அந்தப் பஸ் ஹைவேல டையரு வெடிச்சி சைட்ல சாய்ஞ்சிருச்சாம்… உயிருக்கு ஆபத்து இல்ல ஆனா பயங்கர அடி போல…”

காயத்திரி அழைப்பைத் துண்டித்ததும் ஷீலாவின் கார் அவர்களின் குலத்தெய்வக் கோவிலைக் கடந்து சென்று கொண்டிருந்ததை மகள் பார்த்தாள்.

  • கே.பாலமுருகன்

Loading

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *