உயாங் மலையில் ஒரு பயணம் – மண்சரிவும் இயற்கைத் தேவதையும்


உயாங் மலையில் ஒரு பயணம் – மண்சரிவும் இயற்கைத் தேவதையும்

நம் நாட்டின் தமிழ்ச் சிறுவர் இலக்கிய வளர்ச்சி சற்றுப் பின்னோக்கி இருந்த காலக்கட்டத்தில் அதன் தீராத சிக்கல்களுக்கு வழிகளைத் தேடிக் களைய முற்பட்டவர்களில் எழுத்தாளர் கே.பாலமுருகன் முக்கியமானவர். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த அவரது படைப்புகள் உலகளாவிய அளவிலும் பரவலாகக் கவனிக்கப்பட்டன.  சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என இலக்கியம் சார்ந்த அனைத்து வடிவங்களிலும் திறம்பட கையாளக் கூடிய எழுத்தாளர் ‌.தமிழ் நாட்டின் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும்  இவருடைய ‘பேபி குட்டி’ சிறுகதை சிறந்த உதாரணமாகும்.

மலேசியப் பாடத்திட்டத்தில் சிறுகதைப் பிரிவை இணைக்க தீவிரமாகச் செயல்பட்டவர்களில் மலேசியத் தேர்வு வாரியத்தின் தமிழ்ப் பிரிவின் மேனாள் உதவி இயக்குனர் திரு.பி.எம்.மூர்த்தி முதன்மையானவர். அவருடைய சிறார் இலக்கியம் சார்ந்த முயற்சிகளுக்கு 2011ஆம் ஆண்டிற்குப் பின்னர் தோள் கொடுத்தவர்களில் எழுத்தாளர் கே.பாலமுருகனும் ஒருவராவார்.

சிறுவர் இலக்கியம் சார்ந்து நான்கு படைப்புகளை வழங்கிய நம் எழுத்தாளரின் அண்மைய வெளியீடு ‘உயாங் மலை’ எனும் சிறுவர் மர்ம நாவலாகும். மலேசியச் சிறுவர் தமிழ் இலக்கியப் படைப்புகளில் பேசப்படாத ஒரு கருப்பொருள் இந்நாவலின் பலமாக அமைந்துள்ளது.

எங்க காடு

எங்க மலை

எங்க உயாங்

இந்த வரிகளின் உச்சத்தைத்தான் உயாங் மலை நாவல் பேசுகிறது. அழகிய இயற்கை காட்சிகளும், உடலை இதமாக்கும் குளிரும், கண்களைக் கொள்ளைக் கொள்ளும் வண்ண வண்ண மலர்களும், வாய்க்கினிய பழங்களும் காய்கறிகளும் நிறைந்த மலைப்பகுதியாக தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கும் கேமரனின் மறுபக்கம் வேதனைக்குரியது. ஓர் அழகிய மலைப்பகுதி மனிதனின் இயற்கையின் மீதான தீவிரவாதத்தில் சிக்குண்டு கிடக்கிறது. பொறுப்பற்ற செயல்களின் விளைவால் காடுகள் பொழிவிழந்து தன்மையிழந்து மண் சரிவை எதிர்கொண்டு ஏற்படும் விளைவுகளை இந்நாவல் பேசிச் செல்கிறது. செமாய் பழங்குடியினர் கேமரன் மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த மண் சரிவு அவர்களது வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்கள் இந்நாவலில் வெளிப்படுகிறது.

மண் சரிவினை இயற்கைப் பேரிடர் எனப் பொதுவாக வகைப்படுத்தி விடுகிறோம். இந்த இயற்கைப் பேரிடர்களுக்கு வித்திட்டவர்கள் மனிதர்கள்தான் என்பது மறுக்கயியலாத உண்மை. உயாங் மலை நாவல் சிறுவர்களுக்கான களமாக உருவாக்கப்பட்டு மண் சரிவை முன்னிறுத்தி கதைக்களம் நகர்கிறது. சுக்காய், நகுலன், பியோனா எனப் கதாபாத்திரங்கள் மனத்தில் ஆழமாகப் பதிகின்றன. சுக்காய் செமாய் பழங்குடி சிறுவனாக மண் சரிவில் சிக்குண்ட தன் தோழி சாராவைத் தேடுகிறான். கதைக்களம் காடும் அதனைச் சார்ந்த இடங்களையே சுற்றிப் பின்னப்பட்டுள்ளது.

நாட்டின் தலையாய சிக்கல்களில் காடுகளின் அழிப்பு தவிர்க்கயியலாத ஒன்று. நவீன யுகம், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் எனக் காடுகளின் சிதைவுகளுக்குக் காரணங்களை மட்டுமே அடுக்கிக் கொண்டே போக முடிகிறது. வலியை உருவாக்குகிறோம். அதற்கான நிவாரணத்தையும் நாம்தான் கண்டறிய வேண்டும்.

இயற்கையின் சிக்கலைப் பேசிய உயாங் மலை மர்மம் கலந்தும் பயணிக்கிறது. மண் சரிவில் இறந்ததாக நம்பப்படும் சாராவால் தொடரும் மர்மங்கள் இந்தக் கதை வாசிப்பில் விறுவிறுப்புத் தன்மையை அதிகரிக்கிறது. சாரா என அறியப்படும் சிறுமி எப்படி சூராவென உருவகப்படுத்தப்படுகிறாள் என்பதைக் கதையினூடே உணர முடிகிறது. கதைக்களம் பிரிட்டிஷ் காலத்தில் பயணிக்கும் சூழலில் 1936வது வருடம் வார்த்தைகளாலும்  வர்ணனைகளாலும் அதன் தோற்றத்தைச் சித்தரிக்கிறது. அனைத்து மர்மங்களுக்கான முடிச்சு இந்த நாவலில் வாசிப்பினூடே அவிழ்க்க முடியும்.

உயாங் மலை நாவல் அறிவியல் சார்ந்தும் மாணவர்களுக்காகப் பயணிக்கிறது. சூழலியல் சார்ந்து  மாணவர்களிடையே விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. சூழலியல் சார்ந்த சிக்கலை எழுத்தாளர் கே.பாலமுருகன் மாணவர்களது புரிதலுக்கும் ஆற்றலுக்கும் உட்படுத்தி எழுதியுள்ளார். எளிய மொழி நடையைக் கையாண்டுள்ளார். மாணவர்களுடன் நெருக்கமான ஆசிரியர் என்பதால் தீவிர வாசிப்பினூடே நகைச்சுவை உணர்வைப் புகுத்தியுள்ளார். நகுலனின் அதிகப்படியான கேள்விகளாலும் சுக்காய் உடனான பயணங்களிலும் புன்னகைக்கும் உரையாடல்கள் நிறைய இடம் பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான வாசிப்பில் கதைக்களத்தை ஆழமாக மட்டுமே நகர்த்திக் கொண்டு போக இயலாது. அவர்களிடையே அடுத்த கட்ட வாசிப்பை நகர்த்த அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை உணர்ந்தே உயாங் மலை செதுக்கப்பட்டுள்ளது.

இந்நாவல் இயற்கையோடு ஒட்டி உரையாடுவதால் கவித்துவமான வார்த்தைகளின் பயன்பாடு அதிகம் நிறைந்துள்ளது.  காட்டைப் பற்றிய விவரிப்புகளில், மரத்தைப் பற்றிய வர்ணிப்புகளில், அணிலைப் பற்றி, பொன் முதுகு மரங்கொத்திப் பறவைப் பற்றி மாணவர்கள் அதிகம் உணர முடியும்.

எழுத்தாளரின் உழைப்பு, மெனக்கெடல்கள் உயாங் மலையில் பார்க்க முடிகின்றன. பழங்குடி மக்களோடு, மாணவர்களோடு எழுத்தாளரின் பயணம் அங்குள்ள சூழலை அறிந்து எழுத்துகளாக்கிட பெரும் பங்காற்றியுள்ளது. இயற்கையை நாம் சீண்டாத வரை, நம் சுயநலத்தைப் பிறவற்றின் மீது திணிக்காதவரை, தீவிரவாதத்தை வெளிப்படுத்தாத வரை இந்த இயற்கை நம்மை எதுவும் செய்து விடாது.

நீ என்ன செய்தாய் இந்த மண்ணுக்கு? அதைத்தான் இந்த மண் உனக்குத் திரும்ப செய்கிறது.

செமாய் பழங்குடி மக்களின் நம்பிக்கையில் எங்குவின் (தேவதை) கோபம்தான் இந்த இயற்கைப் பேரிடர். சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் மண்ணின் கோபம் மண் சரிவாய் பல உயிர் இழப்புகளுக்கு ஆளாக்குகிறது. கேமரன் மலை அழகிய இயற்கை நிறைந்த மண். நம் தேவைகளுக்காக அதன் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் போது அதன் கோபம் நியாயமாகிப் போகிறது. இந்நாவல் இன்றைய மாணவர்களிடையே கொண்டு வரும் மாற்றங்கள் அடுத்தடுத்த காலக்கட்டங்களில் சிக்கலைகளைக் களையும் நிபுணர்களாக உருமாற்றம் பெறவும் சாத்தியங்கள் உருவாகும்.

சிறார் இலக்கியம், வெறும் மாயாஜாலம், மந்திரம், கற்பனை என்பதை மட்டும் சார்ந்திருந்தால் போதுமா என்கிற கேள்விக்கு ஒரு சிறுவனின் மனத்தில் தான் வாழும் சமூகத்தின் மீதான அக்கறையும் உருவாக வேண்டும் என்கிற பதிலை வாழ்வியல் அனுபவங்களாக சிறுவர்களுக்குப் புரியும் வகையில் உயாங் மலை எழுதப்பட்டுள்ளது. நாவலின் பயணத்தினூடே ஆங்காங்கே கேமரன் மலையைப் பற்றிய தகவல்களும் வந்து சேர்கின்றன. இதுவரை அறியப்படாத கேமரன் மலையின் இன்னொரு முகத்தை இச்சிறார் நாவலில் எழுத்தாளர் பதிவு செய்துள்ளார்.

ஓர் எழுத்தாளரின் ஒரு சமூகத்தின் மீதான அக்கறையில் வெளிவந்திருக்கும் உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் பாராட்டுக்குரிய படைப்பு. நாவலின் இறுதியிலும் ஒரு புதிர்த்தன்மையை எழுத்தாளர் விட்டுச் செல்கிறார். அது உண்மையில் சூரா என்பது யார் என்கிற கேள்விகளுடன் மனத்திற்குள் விரிகின்றன.

 

  • காந்தி முருகன்

 

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *